Published:Updated:

'மிஸ்டர்' முனிசாமி!

'மிஸ்டர்' முனிசாமி!

##~##

டல் முழுவதும் மேடு பள்ளங்களுடன் பார்ப்பதற்கு ஒரு மலைக் குன்றைப் போலவே இருக்கிறார் முனுசாமி.  'மிஸ்டர் இந்தியா’ உட்பட தென்னிந்தியா, தமிழ்நாடு, சென்னை, நீலகிரி என, ஏகப்பட்ட 'மிஸ்டர்’ பட்டங்களைக் கைப்பற்றி உள்ள ஆணழகன். 'மிஸ்டர் ஆசியா’ கனவுடன் ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சியில் இருந்தார். ''எப்படி பாஸ் உடம்பை இப்படி வெச்சிருக்கீங்க?'' என்றேன்.

 'சின்ன வயசுல அர்னால்டு நடிச்ச பட போஸ்டரை ஒருநாள் பார்த்தப்ப உங்களை மாதிரியேதான் எனக்கும் 'இப்படியும் ஒருத்தர் இருக்க முடியுமா?’னு ஆச்சர்யம். 'நாமளும் இப்படி ஆகணும்’கிற எண்ணத்துல அன்னைக்கே ஜிம்முக்குப் போனேன். 'குட்டிப் பையா, தம்புள்ஸ் மேல விழுந்துடப்போகுது, ஓடிடு’னு கிண்டலடிச்சுத் துரத்தினாங்க. அப்புறம் வீட்டுக்குப் பக்கத்துலயே உள்ள நகராட்சிப் பூங்காவில் எக்சர்சைஸ் பண்ணிக்கிட்டு இருந்த அண்ணன்களைப் பார்த்து நானே பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன். என் உடம்பும் படிப்படியா நல்ல வடிவத்துக்கு வர ஆரம்பிச்சுது.

'மிஸ்டர்' முனிசாமி!

2004-ல் ஒரு கல்யாணத்துக்காகத் திருப்பூர் போயிருந்தப்ப, அங்க நடந்த 'மிஸ்டர் தமிழ்நாடு’ போட்டியைப் பார்த்ததும், 'பாடி பில்டிங்’ ஆர்வம், வெறியா மாறிடுச்சு. அன்னைக்கு இருந்து தீவிர எக்சர்சைஸ்தான். குன்னூர்ல 'மிஸ்டர் நீலகிரி’ போட்டி நடக்கப் போறதா வந்த அறிவிப்பைப் பார்த்து ஓடிப்போய் நின்னேன். ஆனா, மாவட்ட சங்கத்துல சேர்ந்து இருக்கிற ஜிம்கள்ல பயிற்சி எடுக்குறவங்கதான் அந்தப் போட்டியில கலந்துக்க முடியுமாம். என் ஆர்வத்தைப் பார்த்த ஒருத்தர், தன் ஜிம் சார்பா என்னைக் களமிறக்கினார். அந்தப் போட்டியில எனக்கு மூணாவது பரிசு கிடைச்சாலும் அந்த 13 வயசுல அந்த வெற்றி எனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. என்னைக் கிண்டல் செய்து துரத்துனவங்களே தங்களோட ஜிம்ல சேரச்சொல்லி பயிற்சித் தந்தாங்க. அதுக்குப் பிறகு 'மிஸ்டர் நீலகிரி’ முதல் ’மிஸ்டர் இந்தியா’ வரை ஏகப்பட்டப் பட்டங்கள் வாங்கியாச்சு.

'மிஸ்டர்' முனிசாமி!

என் சொந்த ஊர் ஊட்டி. அங்க இருந்தா மாவட்ட அளவிலேயே முடங்கிடுவோம்னு நினைச்சு, 2006-ல் சென்னைக்கு வந்தேன். வறுமையும் பாடி பில்டிங் ஆர்வமும் என்னைப் படிக்கவிடலை; 10-வது வரைக்கும்தான் படிச்சேன். பிளம்பிங், கட்டட வேலை, ஹோட்டல் சர்வர்னு பல வேலைகள் பார்த்து சமாளிச்சேன். ஒரு போட்டியில என்னைப் பார்த்த முன்னாள் மிஸ்டர் இந்தியாவும், தமிழ்நாடு ஆணழகன் சங்கச் செயலாளருமான எம்.அரசு சார்தான் தன்னோட ஜிம்ல வேலை கொடுத்து நிறைய உதவிகளும் செய்றார்.

உடம்பைக் கட்டுக்கோப்பா வெச்சிருக்க நிறைய சத்தான உணவுகளைச் சாப்பிடணும். போட்டியில கிடைக்கிற பரிசுத்தொகை, சிறப்புத் தோற்றத்துக்காகக் கிடைக்கிற பணம்னு எல்லாத்தையும் இதுக்காக மட்டுமே செலவு பண்ணிட்டு இருக்கேன். இதுவரைக்கும் 35-க்கும் அதிகமான போட்டிகள்ல கலந்துக்கிட்டு ஆறு முறை 'சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ்’ பட்டம் வாங்கி இருக்கேன். அதாவது ஒரே போட்டி பல்வேறு பிரிவுகள்ல நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் சாம்பியன் பட்டம் வெல்பவர்களை வெச்சு கடைசியாக ஒரு போட்டி நடக்கும். அதுல வெற்றி பெறுகிறவர்களே சாம்பியன்களின் சாம்பியன். சில போட்டிகள்ல சிறப்புத் தோற்றம் காண்பிக்கச் சொல்லி கூப்பிடுவாங்க. இதற்காக நேபாளம், சிங்கப்பூர்னு பல நாடுகளுக்குப் போயிருக்கேன்.

'மிஸ்டர்' முனிசாமி!

தமிழக ஆணழகன் சங்கம், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், அமைச்சர் ஜி.கே.வாசன், பாண்டிச்சேரி முதல்வர் ரெங்கசாமினு பல வி.ஐ.பி.க்களிடம் பரிசு வாங்கி இருக்கேன். அடுத்து மிஸ்டர் ஆசியா, மிஸ்டர் வேர்ல்டுதான் இலக்கு. பாடி பில்டிங்ல வசதியானவங்க ஈடுபாடு காட்டுறது இல்லை. ஏழ்மையில் உள்ளவங்கதான் அதிக ஆர்வமா இருக்காங்க. ஆனா, அவங்களுக்குத் தேவையான உதவியோ ஸ்பான்சரோ இங்க கிடைக்கிறது இல்லை. இதுக்கும் நல்ல ஸ்பான்சர்ஸ் கிடைச்சா கண்டிப்பாப் பெரிய அளவுல சாதிக்க முடியும்!'

- சி.காவேரி மாணிக்கம்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

அடுத்த கட்டுரைக்கு