Published:Updated:

என் ஊர் : ரம்யா

VJ Ramya
VJ Ramya

சினிமா உண்டு தியேட்டர் இல்லை!

##~##

''இது ஒரு காலத்தில் மிகப் பெரிய புகையிலைத் தோட்டமாக இருந்த பகுதி என்பார்கள். அண்ணாமலைச் செட்டியாருக்குச் சொந்தமான ஏராளமான இடங்கள் இருந்ததால் ராஜா அண்ணாமலைபுரம் எனப் பெயர் வந்ததாகச் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். சில வருஷங்களுக்கு முன்பு இந்தப் பகுதி ராஜா அண்ணாமலைபுரம், ஆழ்வார்பேட்டை என, இரண்டாகப் பிரிந்தது. ஆழ்வார்பேட்டைக்குள்ளேயே தற்போது அபிராமபுரம் என்றொரு புதுப் பகுதி உருவாகிவிட்டது. சென்னை வளர்கிறது என்பதற்கு என் ஏரியாவே எடுத்துக்காட்டு' - தான் பிறந்து வளர்ந்த ஆழ்வார்பேட்டை பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரம்யா.

என் ஊர் : ரம்யா

 'என்னோட சின்ன வயசுல இங்க இவ்வளவு கட்டடங்கள் கிடையாது. ஏதாவது ஒரு உயரமான கட்டடத்துல இருந்து பார்த்தா பச்சைக் கம்பளம் போர்த்தினா மாதிரி மரங்களாத்தான் இருக்கும். பறவைங்களோட விதவிதமான சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். எங்க ஏரியாக்குள்ள நுழைஞ்சா, ஏதோ காட்டுக்குள்ள நுழைஞ்ச மாதிரி தோணும். அப்போ சாலைகளும் ரொம்ப அகலமா இருக்கும். போக்குவரத்து நெரிசலே ஏற்படாது. டியூஷனுக்கும் டான்ஸ் கிளாஸுக்கும்  சைக்கிள்லதான் போயிட்டுவருவேன். ஆனா, இன்னைக்கு சைக்கிள் ஓட்றவங்களையே பார்க்க முடியல. அதேபோல ஒண்ணு ரெண்டைத் தவிர என் சின்ன வயசுல பார்த்த தனி வீடுகள் எதுவுமே இன்னைக்கு இங்க இல்லை. நாங்க குடியிருக்கிற தெருவுலகூட எங்க வீடு உட்பட ஒருசில வீடுகள் தவிர மற்றது எல்லாம் அடுக்கு மாடிக் குடியிருப்புகளா மாறிடுச்சு.

ஆழ்வார்பேட்டைனாலே  கலா ரசிகர்களின் நினைவுக்கு வர்றது நாரத கான சபாவும், மியூஸிக் அகாடமியும்தான். கிரேஸி மோகன், எஸ்.வி.சேகர் நாடகங்கள், டிசம்பர் சீஸன் கச்சேரிகள், நடன அரங்கேற்றங்கள்னு வருஷத்துல பாதி நாள் விசேஷமாத்தான் இருக்கும். என் பரதநாட்டிய அரங்கேற்றம்கூட நாரத கான சபாவுலதான் நடந்துச்சு. ஆஞ்சநேயர் கோயில், செயின்ட் மேரீஸ் சர்ச் ரெண்டும்தான் ஆழ்வார்பேட்டையின் முக்கிய வழிபாட்டுத் தலங்கள். செயின்ட் மேரீஸ் சர்ச் பழமையானதுங்கிறதாலதான் அந்தத் தெருவுக்கு செயின்ட் மேரீஸ் ரோடுனு பேரே வந்திருக்கு. இந்த ரோட்லயே ஹெச்.எம்.ஹாஸ்பிடல் இருந்துச்சு. அதனாலயே ஹெச்.எம். பஸ் ஸ்டாப்னு சொல்வாங்க. என்னாச்சுனு தெரியலை அந்த ஹாஸ்பிடலை மூடிட்டாங்க. இப்ப அங்க அந்த பஸ் ஸ்டாப்பும் இல்லை.  அதே மாதிரி இப்ப உள்ள பார்க் ஷெராட்டன் ஹோட்டலை அப்ப அடையார் கேட் ஹோட்டல்னு சொல்வாங்க. சில வருஷத்துக்கு முன்னாடி வரை இருந்த காளியப்பா ஹாஸ்பிடல், இப்ப பில்ராத் மருத்துவமனைனு பேர் மாறிடுச்சு. இப்படி பேரும் ஊரும் மாறிக்கிட்டே இருக்கு.

என் ஊர் : ரம்யா

எங்க வீட்டுக்கு எதிர்ல இருக்கிற கார்ப்பரேஷன் ஸ்கூல் கிரவுண்டுதான் சின்ன வயசுல எங்க மீட்டிங் பாயின்ட். இங்கதான் 'சென்னை-28’ படத்தின் பெரும்பாலான காட்சிகளை எடுத்தாங்க. கமல் சார் பிறந்து வளர்ந்தது எல்லாம் இதே ஏரியாவுலதான். அதே மாதிரி கே.எஸ். ரவிகுமார் ஆபீஸ், சுந்தர்.சியோட ஆபீஸ், சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் ஆக்கர் ஸ்டுடியோ, நாகேஷ் சார், பிரபுதேவா, அர்ஜுன் வீடுனு இவ்வளவு சினிமாப் பிரபலங்கள் இங்க இருந்தாலும் ஒரு தியேட்டர்கூட இல்லாததுதான் வருத்தமான விஷயம்!'

என் ஊர் : ரம்யா

- சி. காவேரி மாணிக்கம்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

அடுத்த கட்டுரைக்கு