Published:Updated:

நட்புப் பாடம் நடத்தும் நண்பர்கள்!

நட்புப் பாடம் நடத்தும் நண்பர்கள்!

##~##

''மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு பலியான மூன்று கல்லூரி மாணவர்களின் நண்பர்கள் சிலர், ரத்த தானம் செய்யும் விஷயத்தை பேனர் ஒன்றின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். அதை விசாரித்து கட்டுரையாக்கலாமே?'' என்று 'வாய்ஸ் ஸ்நாப்’ மூலம் நம்மைத் தொடர்புகொண்டார் விகடன் வாசகர் பம்மல் தமிழ்ச்செல்வன்.  

 'இமைகளைத் திறந்து நேசிக்காமல்
இதயம் திறந்து நேசித்தாய்
ஆண்டில் ஒருமுறை வசந்தகாலம்
உன் அன்பால் ஆண்டது ஒருகாலம்
கல்லான மனதும் கரைந்திடும்
கனிவான உன் பேச்சில்
துள்ளித் திரிந்த இடங்கள்
தவிக்கிறதே உன் நினைவில் - நண்பா!
உன்னை விரும்பாதவர் உலகில் உண்டா?
உதாரணம் கடல் அலைகள்!’

- உயிரிழந்த நண்பர்களுக்காக உயிர் நண்பர்கள் சிலர் எழுதிய கவிதை வரிகள் இவை!

நட்புப் பாடம் நடத்தும் நண்பர்கள்!

2011 பிப்ரவரி 4-ம் தேதி. சென்னை மெரினா கடற்கரையில் குளித்த எபினேசர், வினோத், அபிஷேக் என்ற மூன்று பேரையும் அலையெனும் அரக்கன் காவு வாங்கிய தினம் அது. உயிரிழந்த நண்பர்களின் முதல் ஆண்டு நினைவு தினத்தை நல்லதொரு சேவை செய்து அனுசரித்தார்கள் அவர்களுடைய உயிர் நண்பர்கள். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்த தான முகாம் நடத்தி, பார்ப்போரைப் புருவம் உயரவைத்திருக்கிறார்கள் இவர்கள்.

''நானும் என் ஃப்ரெண்ட் தீபிகாவும் எங்க நண்பர்கள் நினைவு நாள் அன்னைக்கு ஏதாச்சும் நல்லது செய்யணும்னு யோசிச்சிக்கிட்டு இருந்தோம். அப்போதான் இந்த ஐடியா க்ளிக் ஆச்சு. உடனே கே.எம்.சி.

நட்புப் பாடம் நடத்தும் நண்பர்கள்!

ஹாஸ்பிட்டல்ல போய் எங்க விருப்பத்தைச் சொன்னோம். உடனே, அவங்களும் சந்தோஷமா ஒப்புக்கிட்டாங்க. நூற்றுக்கணக்கான பொது மக்கள் மனமுவந்து ரத்த தானம் செஞ்சாங்க. 28,000 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. அன்னிக்கு பொதுமக்கள் எங்களை மனசார வாழ்த்தினப்போ இறந்துபோன எங்க நண்பர்கள் எங்களை ஆசீர்வதிச்சது மாதிரியே இருந்துச்சு'' உருக்கமாகப் பேசுகிறார் வைஷ்ணவி.

''எபி, வினோத், அபி மூணு பேருமே ரொம்ப ரொம்ப நல்ல பசங்க. மூணு பேருக்கும் உதவும் மனப்பான்மை அதிகம். எபி நல்லா கிரிக்கெட் ஆடுவான். வினோத் பிரமாதமான வாலிபால் பிளேயர். அபி கடி ஜோக் அடிப்பான். அவங்க மூணு பேரும் அன்னைக்கு மற்ற ஃப்ரெண்ட்ஸ் கூடதான் போனாங்க. திடீர்னு காணாமப் போயிட்டாங்கனு போன் வந்துச்சு. எவ்வளவோ தேடியும் அவங்க கிடைக்கலை. எபி நீலாங்கரை யிலயும், ரெண்டு நாள் கழிச்சு அபி திருவான்மி யூர்லயும், வினோத் ஈஞ்சம்பாக்கத்திலும் வெறும் உடல்களாக் கிடைச்சாங்க. எத்தனை கோடி நண்பர்கள் வந்தாலும், அவங்க இழப்பை ஈடு செய்யவே முடியாது’ என்று கலங்குகிறார் தீபிகா. இறந்துபோன எபியின் பிறந்த நாளான அக்டோபர் 21-ம் தேதியன்று, மணப்பாக்கம் 'க்ரைஸ்ட் ஹோம் ஃபார் சில்ட்ரன்’-ல் உள்ள 150 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒருவேளை உணவு, உடை, புத்தகம் ஆகியவற்றை வழங்கி இருக்கிறார்கள் இந்த நண்பர்கள். இவை அனைத்தும் அவர்களுடைய பாக்கெட் மணியை சிறுகச் சிறுக சேமித்துவைத்ததில் செய்த உதவிகளாம்.

பிப்ரவரி 4-ம் தேதி ரத்த தானம் செய்ததோடு மட்டுமல்லாமல் மூவருக்கும் 'நினைவுச் சின்னம்’ ஒன்றையும் எழுப்பி இருக்கிறார்கள் இந்த நண்பர்கள்.

எந்நேரமும் எஸ்.எம்.எஸ்., அரட்டைக் கச்சேரி, பைக்கில் ஊர் சுற்றுவது எல்லாம் உண்மையான நட்பு என்று அர்த்தம்கொள்பவர்கள் இந்த உயரிய நட்பிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும்!  

எஸ்.அனுசத்யா

அடுத்த கட்டுரைக்கு