Published:Updated:

நேதாஜி தங்கிய காந்தி இல்லம்!

நேதாஜி தங்கிய காந்தி இல்லம்!

##~##

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சென்னையில் ஐந்து நாட்கள் தங்கியிருந்த வீடு, ராயப்பேட்டை வேங்கடநாராயணா சாலையில் உள்ளது. இன்னமும் அந்த இல்லத்தைப் பழமை மாறாமல் பாதுகாத்துவரும் அதன் உரிமையாளர் தனஞ்செயனைச் சந்தித்துப் பேசியபோது, வியக்கவைக்கும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

 '' 'காந்தி பீக்’ங்கிற இந்த வீட்டைக் கட்டியது, பொறியாளரான எங்க தாத்தா எஸ்.பி.அய்யாசாமி. சுதந்திரப் போராட்டத்துக்கு எதிரான பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைகள் இருந்த காலகட்டத்திலேயே காந்தி பேர்ல வீடுகட்டி, வீட்டு உச்சியில் காந்தி சிலையையும் வெச்சார். சொன்னா நம்ப மாட்டீங்க, அப்ப இந்த வீட்டைக் கட்ட ஆன செலவு வெறும் 45,000 ரூபாய்தான். மக்கள் மத்தியில் கடிகாரம் புழக்கத்தில் வராத அந்தக் காலத்துலேயே எங்க தாத்தா பெரிய ஆலய மணி ஒண்ணை வாங்கி, வீட்டு உச்சியில கட்டிவெச்சு, காலை 5 மணியில இருந்து மத்தியானம் 12 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை மணியடிக்க ஒரு பணியாளரையும் வேலைக்கு அமர்த்தியிருந்தாராம். அந்த மணி எங்க தாத்தா காலத்தில் இருந்து எங்க அப்பா சபேசன் காலம் வரைக்கும் 31 வருஷம் ஒலிச்சுது. இதெல்லாம் இந்த வீட்டின் வரலாற்றில் சிறுதுளிகள்'' என்று சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தார்.

நேதாஜி தங்கிய காந்தி இல்லம்!

''எங்க தாத்தா நேரடியா தேசியப் போராட்டத்தில் ஈடுபடலைனாலும் தேசத் தலைவர்களுக்குத் தொண்டு செய்வதை பெரும் பாக்கியமா நினைச்சு நிறைய விஷயங்கள் செய்து இருக்கார். இந்த வீட்டின் மூணாவது மாடியைக் கட்ட அடிக்கல் நாட்டியவர் இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத். காந்தி சிலையைத் திறந்துவெச்சது ராஜாஜி. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் தலைமையோடு கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஃபார்வர்டு பிளாக் இயக்கத்தைத் தொடங்கி அதற்கு ஆதரவு திரட்டுறதுக்காக சென்னை வந்திருந்தார். அப்ப காங்கிரஸ் கட்சி, நேதாஜிக்கு ஆதரவு தர வேண்டாம்னு சொல்லி இருந்ததால அவருக்கு இடம் தர பலரும் தயங்கினாங்க. அப்ப புலியூர் ஜமீன்தார் ஜானகிராம் எங்க தாத்தாவிடம், 'நேதாஜியை உங்க வீட்ல தங்கவெச்சுக்குங்க’னு சொல்லி இருக்கார். 'நம்ம வீட்டு பேரே காந்தி பீக். அவரோடு கருத்துவேறுபாடு உள்ளவரு நம்ம வீட்ல எப்படித் தங்குவார்?’னு எங்க தாத்தாவுக்குச் சந்தேகம். ஆனா, கொஞ்சம்கூட யோசிக்காம இங்கே தங்க சம்மதிச்சார் நேதாஜி!

நேதாஜி தங்கிய காந்தி இல்லம்!

1939-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி 'வந்தே மாதரம்’ கோஷம் முழங்க வெள்ளிக் குடை பிடித்து நேதாஜியை இந்த வீட்டுக்கு அழைச்சு வந்திருக்காங்க. இந்த வீட்டின் முன் நின்றவர் இரு கைகளையும் கூப்பி மேலே பார்த்தபடி வணங்கியிருக்கார்.  அப்ப எடுத்த  படம்தான் இது. அப்ப இந்த வீட்டின் மூன்று மாடிகளிலும் 'லயன் ஆஃப் பெங்கால்’,  'லாங் லிவ் எஸ்.சி.போஸ்’, 'டெரர் ஆஃப் ஹை கமென்ட்’னு வெள்ளை நிறத் துணிகளில் எழுதி வரவேற்பு கொடுத்து இருக்காங்க. அவர் இந்த வீட்டின் உச்சியில் உள்ள காற்றோட்டமான இந்த அறையில்தான் தங்கி இருந்திருக்கார். அவர் தங்கியிருந்த இந்த அறைக்கு மேல்தான் காந்தி சிலை இருந்தது என்பது இன்னொரு சுவாரஸ்யம்.

நேதாஜி தங்கிய காந்தி இல்லம்!

இது நேதாஜி தங்கியிருந்தப்ப எங்க பாட்டி தனம்மாள் எழுதின வரவு செலவு கணக்கு நோட்டு. 'மூன்று நாள் செலவு 58 ரூபாய்’னு எழுதி யிருக்காங்க. அப்ப 58 ரூபாய்ங்கிறது மிகப் பெரிய தொகை. நேதாஜி மறுபடியும் 1940-ல் வந்து ரெண்டு நாள் இங்க தங்கியிருக்கார். நம் வரலாற்றை மக்கள் தெரிஞ்சுக்க 2001-ல் 'நேதாஜி தங்கியிருந்த வீடு’ என்று வீட்டின் முன் பொறிக்கப்பட்ட கல் வெட்டைக் கமல்ஹாசன் திறந்துவெச்சார். இந்த வீட்டைப் பராமரிக்கிறதைப் பெரும் பாக்கியமா நினைக்கிறேன்'' என்கிறார் தனஞ்செயன்.

நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ஜெ.தான்யராஜு

அடுத்த கட்டுரைக்கு