Published:Updated:

என் ஊர்!

உருகும் உயிர்ச் சூழல் மண்டலம்

##~##

ஜெயச்சந்திரன் - தமிழக பசுமை இயக்கத்தின் இணைச் செயலாளர். நீலகிரியின் இயற்கையைக் காப்பதற்காகப் போராடும் பசுமைப் போராளி. இவர், தான் நேசித்து வாழும்  நீலகிரியைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

 ''ஒவ்வொரு விடியலிலும் ஆகாயம் நோக்கிப் பார்க்கும்போது ஆதவனின் கதிர்கள், தங்கக் கீற்றுகளாகக் குன்றுகளின் முகப்புகளை முத்தமிட்டுக்கொண்டு இருக்கும். ஏன் இந்த மலைத் தொடர்கள் எனக்கு உறவானது? என்கிற கேள்வி எழும்.  நான் பிறந்தது கோபிச்செட்டிபாளையம் பக்கத்தில் ஒரு கிராமம்.  அப்பாவின் பணி நிமித்தமாகக்  கோவைக்கு இடம்பெயர்ந்தோம். அப்போது தூரத்தில் இருந்து பார்க்கையில் நீலகிரி மலைத் தொடர் எனக்குள் பிரமிப்பை ஏற்படுத்தியது. கல்லூரி நாட்களில் இந்த மலைகளையும் வனங்களையும் ரசிப்பதற்காக நான் மேற்கொண்ட பயணங்கள், நீலகிரியின் மீது ஒரு தீராத நேசத்தை ஏற்படுத்தியது.

என் ஊர்!

1,600 கி.மீ. நீளம்கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதி நீலகிரி. வளைந்து நெளிந்து செல்லும் மலைத் தொடர்கள், பள்ளத் தாக்குகள், அடர்ந்த வனங்கள், பசும் புல்வெளிகள், இவற்றினூடே சலசலத்து ஓடும் அருவிகள், காடுகளையே புகலிடமாகக்கொண்டு வாழும் பறவைகள், விலங்குகள் என, நீலகிரியில்தான் எத்தனை எத்தனை அதிசயங்கள்!

இப்படிப்பட்ட மண்ணில் குடியேற ஒரு வரம் கிடைக்காதா? என்று நான் ஏங்கி தவித்த  நாட்களில், நீலகிரியின் சுவிட்சர்லாந்து என்று வர்ணிக்கப்படும் கோத்தகிரிக்குப் பணி நிமித்தம் குடியேறும் வாய்ப்புக் கிடைத்தது. நீலகிரி மலையில் உற்பத்தி ஆகும் பவானி ஆறு காவிரியில் சங்கமிக்கிறது. மாயாறு பவானியில் சேர்கிறது. கூடலூரில் உற்பத்தி ஆகும் அத்தி குன்னா ஆறு, கபினியில் கலக்கிறது. பாண்டியாறும் புனம்புழா ஆறும் கேரளத்தின் கற்றிகோட்டை சாளியாற்றில் சங்கமிக்கிறது. இப்படியாக, நீலகிரி தந்த ஆறுகள் எல்லாம் சமவெளி மக்களின் வாழ்வாதாரமாக மாறி இருக்கிறது.

என் ஊர்!

நீர் மட்டுமின்றி, பசுந்தாவரங்கள்... அடர்ந்து கிடக்கும் மரங்கள்... என, மனிதனுக்குத் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகளாகவும் விளங்குகிறது நீலகிரி. எந்த மனிதர்களுக்கான வாழ்வாதா ரங்களை இந்த மலை வாரி வழங்குகிறதோ, அதே மனிதர்களின் தேவைகளுக்காகவும் சுய நல சுரண்டல்களுக்காகவும் இந்த மலைகளும் பள்ளத்தாக்குகளும் சதுப்பு நிலங்களும் சிதைக் கப்படுவது துரதிருஷ்டமே. இந்த மாவட்டத்தை மையமாகவைத்து யுனெஸ்கோ, 'நீலகிரி உயிர்ச் சூழல் மண்டல’மாகக் கொண்டாடு கிறது. ஒருபக்கம் இது பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும், மறுபக்கம் இந்த வனங்கள் களவாடப்படுவதும் வன உயிரிகள் வேட்டையாடப்படுவதும் வருத்தம் அளிக்கிறது.

இங்கு தோடர், குரும்பர், இருளர், பளியர் உள்ளிட்ட  வனம் சார் பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுடைய பாரம்பரிய கலாசாரமும், வாழ்க்கை முறையும் நம்மை வியக்கவைக்கும். இனத்தால், மொழியால், மாநிலத்தால் வேறுபட்ட மக்கள் ஒன்றுகூடி வாழும் ஊர் நீலகிரி. தமிழர்களுக்கு இணையாக கன்னடர்களும் மலையாளிகளும் இங்கே வாழ்ந்தாலும் அவர்களுக்கு இடையே எவ்வித பாகுபாடும் இல்லை. விவசாயம்தான் இங்கு முக்கியத் தொழில். இங்கு பயிரிடப்படும் தேயிலை, உருளை, கேரட், முட்டைகோஸ் அனைத் தும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஒரு காலத்தில் அமைதியான மண்ணாக இருந்த  நீலகிரி, இன்று ஆண்டு முழுவதும் வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளால் தன் அமைதியையும் அழகையும் இழந்துவருகிறது.

என் ஊர்!

சுற்றுலா என்கிற வரம்பற்ற வர்த்தகத்தின் பெயரால், விதிகளை மீறிய கட்டடங்களைக் கட்டி இந்த மலைச் சரிவுகளைத் துண்டாடியது மனித குலம் இந்த மலைகளுக்குச் செய்த மாபெரும் துரோகம். சில ஆண்டுகளுக்கு முன் நீலகிரியை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக அறிவித்தார்கள். இன்று அறிவிப்புப் பலகைகளில் மட்டுமே அதைக் காண முடிகிறது. இங்கு வாழ்வோருக்கும் வந்து செல்வோருக்கும் இந்த இயற்கை வளங்கள் குறித்த விழிப்பு உணர்வு என்று வருமோ, என்கிற ஏக்கத்தோடே என் ஒவ்வொரு நாளும் கழிகிறது.''

சந்திப்பு: ஆர்.லோகநாதன்
படங்கள்: தி.விஜய்

அடுத்த கட்டுரைக்கு