Published:Updated:

வலையோசை : மெளனம் கடந்த வார்த்தைகள்

வலையோசை : மெளனம் கடந்த வார்த்தைகள்

வலையோசை : மெளனம் கடந்த வார்த்தைகள்

வுமன்ஸ் ஹாஸ்டலைத் தேடி...

வலையோசை : மெளனம் கடந்த வார்த்தைகள்

வீடு தேடும் இம்சைக்குச் சற்றும் குறைந்தது இல்லை 'வுமன்ஸ் ஹாஸ்டல்’ தேடுவது. ஹாஸ்டல் இருக்கும் இடங்கள் குப்பை மேட்டுக்கு அருகிலும் குளம் குட்டைகளுக்கு நடுவிலும் உள்ளன. ஹாஸ்டல் நடத்தப்படுவது மனிதர்களுக்கா அல்லது அங்கு உயிர் வாழும் மனிதர்கள் அல்லாத உயிரினங்களுக்கா, குறிப்பாக கொசுக்களுக்கா என்ற கேள்விதான் முதலில் மனதில் தோன்றுவதாக இருக்கும். இந்த எச்சரிக்கைகளை எல்லாம் மதிக்காமல், வீட்டின் முன் நிற்கும் (நிஜ)மாடுகளைக் கடந்து உள்ளே சென்றால் காத்து இருக்கும் அடுத்த சில அபாய அறிவிப்புகள். இரண்டு பேர் தங்கக் கூடிய இடத்தில் நான்கு பேர் ஷேரிங், ஆறு பேர் ஷேரிங் என, வரிசை கட்டி அடுக்கப்பட்டு இருக்கும் கட்டில்கள். ஒரே நேரத்தில் எதிரெதிர் திசையில் இருவர் அறைக்குள் நடந்துவந்தால், யாரேனும் ஒருவர், கட்டில் மீது ஏறிதான் வழிவிட முடியும். அந்த அளவுக்கு 'இட வசதி மிக்க அறைகள்’. ஹாஸ்டல் தொடங்கப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மெத்தைகள், வெளி உலக வெளிச்சம் தப்பித் தவறிக்கூட உள்ளே வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் போடப்பட்டு இருக்கும் ஜன்னல்கள்... காற்றுக்கூட புகமுடியாத அளவுக்குப் 'பாதுகாப்பு’ இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அறையில் வெற்றுக்காலுடன் நடந்தால், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தினுள் காலணி ஏதும் அணியாமல் சென்றுவந்த எஃபெக்ட் கிடைக்கும்.

ஊர்தோறும் பெய்யும் மழை!

வலையோசை : மெளனம் கடந்த வார்த்தைகள்

ழை நாட்கள் எங்கும் அழகுதான் என்றாலும் பாலைவனங்களில் அதன் அழகு அதிகமாக உணரப்படுகிறது. இல்லாதவனுக்குத்தானே தெரியும் அருமை! கடந்த நான்கு நாட்களாக வருவதா வேண்டாமா என்று விளையாட்டுக் காட்டிய மழை, இன்று வந்தேவிட்டது. சடசடவென அடித்துப் பெய்யாவிட்டாலும் அமைதியாக வந்து சென்றது. மழைக்குப் பதில் அதிகம் விளையாடிச் சென்றது காற்று. நம்மூர் போல் மழை விட்டதும் வெளியில் சென்று ரசிக்கலாம் என நினைத்தால், நீங்கள் செல்வதற்கு முன் மழை ஈரம் காய்ந்து இருக்கும்.

ஒரு கோப்பைத் தேநீர் போதுமானதாக இருக்கிறது மழையை ரசிக்க. தினம் தினம் உடன் வந்தாலும் மழையோடு வரும் தேநீருக்கு அதிக சுவை இருக்கும். மழையோடு ஒரே பிரச்னை என்னவென்றால், நம் வழக்கமான வேலைகளைத் தன்னோடு எடுத்துக்கொண்டே போய்விடுகிறது!

கொஞ்சம் ஷாப்பிங் டிப்ஸ்!

சூப்பர் மார்க்கெட்டில் பொருள்கள் வாங்கச் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

வலையோசை : மெளனம் கடந்த வார்த்தைகள்

• பொதுவாகவே, எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் வாசலுக்கு அடுத்து இருப்பது பேக்கரி/டெலி செக்‌ஷன்கள். கடைக்குள் செல்லும் போதே வரும் வெண்ணெய் மற்றும் பேக்கிங் வாசனை, கண்டிப்பாக எதையாவது வாங்கச் சொல்லித் தூண்டும். இதில் இருந்து தப்பிக்க வழி, ஒருபோதும் பசியுடன் ஷாப்பிங் செல்லாதீர்கள்.

• அனைவரும் அடிக்கடி வாங்கும் பால்/தயிர் மற்றும் சில சமையல் அறைத் தேவைகள் அனைத்தும் கடையின் கடைசி ஓரத்தில் அடுக்கப்பட்டு இருக்கும். வழியில் இருக்கும் மற்ற பொருள்களின் மீது நம் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சி. அதனால், ஒன்று/இரண்டு பொருள்கள் வாங்கச் செல்லும்போது, தேவையான பொருள்களில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்.

• ஷெல்ஃப்களின் கீழ் அடுக்குகளில் குழந்தைகளைக் கவரும் பொருள்களும் மேல் அடுக்குகளில் பெரியவர்களுக்கான பொருள்களும் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது வாடிக்கை. ஒரு பொருளை வாங்கும் முன், மற்ற அடுக்குகளையும் பார்த்துவிட்டு, பிடித்ததை வாங்க வேண்டும்.

• மஞ்சள், சிவப்பு இரண்டு வண்ணங்களும் நம் கண்களை அதிகம் கவரக்கூடியவை. அதனால்தான், பெரும்பாலான பொருள்களின் அட்டைப் பெட்டிகள், பேப்பர்கள் மஞ்சள்/சிவப்பு வண்ணங்களில் உருவாக்கப்படுகின்றன. கண்களைக் கவரும் பொருள்களை வாங்காமல், ஆரோக்கியத்தைக் கவரும் பொருள்களைத் தேடுவது நல்லது.

• பில்லிங் செக்‌ஷன் அருகில் இருக்கும் சின்னச் சின்ன அடுக்குகளின் பக்கம் மறந்தும் கவனத்தைத் திருப்ப வேண்டாம். அதில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நிறைய பொருள்கள், நமக்குத் தேவைப்படுபவை போன்ற ஒரு மாயை இருக்கும். எனவே, பில்லிங் வரிசையில் நிற்கும்போது, அருகில் இருப்பவர் உடனோ, ஃபோனிலோ மொக்கை போடுவது உத்தமம்.

வலையோசை : மெளனம் கடந்த வார்த்தைகள்
அடுத்த கட்டுரைக்கு