Published:Updated:

என் ஊர்!

மக்கள்வைத்த பெயர் பாம்புக் கடி டாக்டர்!

##~##

''அவலூர்பேட்டை என்ற பெயர் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் இந்த ஊரில் வசிப்பதால் 'அவள் ஊர் பேட்டை’ என்று சக தோழர்கள் விளையாட்டாக அழைப்பார்கள்'' என்று சிரித்தபடி பேசத் தொடங்குகிறார் வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான லூசியா மேரி. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் போட்டியிடாத காலத்தில் மாநில மகளிரணிச் செயலாளராக இருந்தவர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அடித்தட்டு மக்களாலும் பாதிக்கப்பட்ட பெண்களாலும் 'லூசியக்கா’ என்று பாசத்தோடு அழைக்கப்படுபவர். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் எங்கு நடந்தாலும் அங்கு லூசியாவையும் அவர் உயர்த்தும் போர்க்குரலையும் கண்டிப்பாகக் காணமுடியும்.

என் ஊர்!

''சுமார் 40 கிராமங்களுக்குத் தாய் வீடு போன்றது அவலூர்பேட்டை. விழுப்புரம் மாவட்டத்துக்கும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் எல்லை இந்த ஊர்தான். அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ள கிராமம் இது. அதே போல, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத எளிய மக்கள் நிறைந்த ஊர் இது. உதாரணமாக, மது ஒழிப்பு தொடர்பாக ஒரு போராட்டம் நடத்தினால், 40 கிராமங்களைச் சேர்ந்தப் பெண்களும் சொந்தச் செலவில் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டு, 'இந்த அக்காங்கலாம் நமக்காக இவ்ளோ கஷ்டப்படறாங்களே’னு ஆளுக்கு ஐந்து ரூபாய்  கொடுத்துவிட்டுப் போவார்கள்.

திருச்சியில் பட்டப்படிப்பு முடித்த நான் கன்னியாஸ்திரீ ஆகி, மக்களுக்குச் சேவை செய்துகொண்டே செவிலியர்  பயிற்சியை முடித்தேன். அதுவரை கிராமத்தையே பார்த்திராத எனக்கு, திடீரென்று கிராம மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இந்த ஊருக்கு வந்து, ஆரோக்கியா மருந்தகம் என்கிற மருத்துவ மையத்தை ஆரம்பித்தேன். இங்கு உள்ள அனைத்து மக்களுமே விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள். நிலத்தில் வேலை செய்யும்போது பாம்பு கடித்துவிட்டால், என்னிடம் ஓடி வருவார்கள். சுமார் 1000 பேர்களுக்கு நான் வைத்தியம் பார்த்து இருப்பேன். இதனாலேயே எனக்குப் பாம்புக் கடி டாக்டர் என்ற பெயர் வந்துவிட்டது.

என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல முக்கியமான நிகழ்வுகள் இங்கு இருந்துதான் தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராட 'அம்பேத்கர் மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி பல போராட்டங்களை நடத்தியதும் இங்குதான். தமிழக மக்களால் மறக்கமுடியாத ரீட்டாமேரி வழக்கை நடத்தியதும் இந்த ஊரில் இருந்துதான்.

என் ஊர்!

இங்கு உள்ள முருகன் கோயில், சுற்றி இருக்கும் 40 கிராமங்களுக்கு மட்டுமல்லாமல் அதைத் தாண்டி இருக் கும் ஊர்களிலும் பிரபலம். அதிலும் முக்கியமாக, இந்தக் கோயிலில் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவில் அனைத்து கிராம மக்களும் குடும்பத்தோடு கலந்துகொண்டு தங்கள் நிலத்தில் விளைந்த பொருள்களை விற்பனைக்கும் எடுத்துவருவார்கள்.

இதற்கு இணையாக இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும் ஊரின் மையப் பகுதியில் அமைந்து இருப்பது, இந்த ஊரின் தனிச் சிறப்பு. மசூதியில் வெள்ளிக்கிழமை தோறும் குழந்தைகளுக்கு மந்திரித்து ஓதுவார்கள். மத வேறுபாடு இன்றி தாய்மார்கள் குழந்தைகளுடன் மசூதி வாசலில் காத்துக்கிடப்பார்கள். இந்துக்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெறுவதும் உண்டு.

என் ஊர்!

புதன் கிழமை தோறும் நடைபெறும் சந்தையில் அரிசி, பருப்பு, துணி வகை களில் தொடங்கி ஆடு, மாடுகள் வரை அனைத்தும் கிடைக்கும். எத்தனை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் வந்தாலும் இந்தச் சந்தையில் அமர்ந்து ஒரு கிலோ தக்காளியைப் பேரம் பேசி வாங்கி ஒரு தக்காளியைக் கொசுறாகக் கேட்டு வாங்கிப் போகும்போது இந்த மக்களின் முகத்தில் ஏற்படும் திருப்தியைத் தர முடியாது. இந்த வெகுளித்தனமும் எளிமையும்தான் இந்த மண்ணின் ஈரம் காயாமல் காத்துநிற்கின்றன!''

- ஜெ.முருகன், படங்கள்: ஆ.நந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு