Published:Updated:

கல்விக்குக் கை கொடுக்கும் தமிழன் தாத்தா!

கல்விக்குக் கை கொடுக்கும் தமிழன் தாத்தா!

##~##

''சார் என் பெயர் கிருஷ்ணராஜ். கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவன். பல ஏழை மாணவர்களைப் படிக்கவைக்கிறேன், மேலும், 'என் விகடனை’ப் படித்துவிட்டு என்னைத் தொடர்புகொள்ளும் ஏழை மாணவிகளுடைய கல்விச் செலவையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்'' - என்றது நம் வாய்ஸ் நாப்பில் ஒரு கருணைக் குரல். அவரைச் சந்திக்க ஆவலுடன் கிளம்பினேன்.

 தமிழகமே இருளில் அல்லோலகல்லோலப்பட, கூத்தப்பாக்கம் மட்டும் விதிவிலக்கா என்ன? அவருடைய முகவரியைத் துண்டுச் சீட்டில் வைத்துக்கொண்டு கும்மிருட்டில் எந்தப் பக்கம் செல்வது என்று அறியாமல் நின்றபோது, என்னை நோக்கி முதியவர் ஒருவர் வர, அவர்தான் கிருஷ்ணராஜ் என்று அனுமானித்துக்கொண்டேன். இருட்டில் தட்டுத்தடுமாறி அவருடைய வீட்டுக்குச் சென்ற பிறகுதான் அவருடைய முகத்தை முழுமையாகப் பார்க்க முடிந்தது.

கல்விக்குக் கை கொடுக்கும் தமிழன் தாத்தா!

''இப்ப எனக்கு 72 வயசு. ஓவிய ஆசிரியரா என்னோட பணியைக் கொழிப்பாக்கம் அரசுப் பள்ளியில ஆரம்பிச்சேன். அப்புறம் ஏழு பள்ளி களுக்கு மாற்றலாகி, கடைசியா பெரிய குப்பம் அரசுப் பள்ளியில சர்வீஸ் முடிஞ்சுது. ஒருநாள் பெரியகுப்பம் அரசுப் பள்ளியில் இருந்தபோது, 12 வயசுப் பொண்ணு லாட்டரி வித்துக் கிட்டு இருந்ததைப் பார்த்துட்டு, 'ஏம்மா படிக்கலையா?’னு கேட்டேன். அந்தப் பொண்ணு பதில் எதுவும் சொல்லலை. நான் அவளுக்கு 50 ரூபாய் கொடுத்தேன்.  உடனே அந்தப் பொண்ணு டக்குனு 50 ரூபாய்க்கான லாட்டரியை என்னோட மடியில போட்டுட்டு ஓடிடுச்சு. ஒரு நிமிஷம் நான்அதிர்ச்சியாயிட்டேன். அன்னைக்கு முடிவு செஞ்சேன் கல்விக்காக ஏங்கும் பிள்ளைகளை என்னோட சொந்தச் செலவுல படிக்கவைக்கணும்னு ஆர்வம் இருந்துச்சே தவிர, அந்தப் பிள்ளைகளை எப்படிக் கண்டுபிடிக்கிறதுனு தெரியல. கடலூரில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் போய் அந்த வருடம் 10-வது மற்றும் ப்ளஸ் டூ-வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பிள்ளைகளுடையப் பட்டியல் வாங்கி, அதுல மேற்படிப்புப் படிக்க முடியாதவங்களுக்கு உதவிசெய்ய ஆரம்பிச்சேன்.

கல்விக்குக் கை கொடுக்கும் தமிழன் தாத்தா!

முதல்ல பிள்ளைகளிடம் பேசி அவங்க குடும்பச் சூழ்நிலையைத் தெரிஞ்சிக்கிட்டு, அவங்க விரும்புற படிப்பைப் படிக்க உதவுவேன். ஆரம்பத்துல ஆண், பெண் இருபாலருக்கும்தான் கல்வி உதவி செஞ்சுட்டு வந்தேன். ஆனா, ஒருதடவை மேல் படிப்பு படிக்க முடியாத ரெண்டு பசங்களைக் கல்லூரியில சேர்த்துவிட்டேன். ஒருத்தன், கூட படிச்சிக்கிட்டு இருந்த பொண்ணோட கல்லூரியைவிட்டு ஓடிட்டான். இன்னொருத்தன் பாதியிலேயே நின்னுட்டான். அதனால, ஆண் பிள்ளைகள் மீது எனக்கு நம்பகத்தன்மையே போயிடுச்சு. என்னோட பென்ஷனைக் குடும்பத் துக்கும், சம்பளத்தை மாணவிகளின் கல்வி உதவிக்காகவும் பயன்படுத்துறேன். நல்லாப் படிக்கணும்னு ஆசைப்படற... ஆனா, படிக்க முடியாத ஏழை மாணவிகளுக்கு உதவிசெய்யக் காத்துக்கிட்டு இருக்கேன்'' என்கிறார்.

கிருஷ்ணராஜ் மூலம் உதவி பெறும் மாணவிகளுடன் பேசினேன். ''கடலூரில சேவை இல்லம் பள்ளியில படிச்சிக்கிட்டு இருந்தேன். ப்ளஸ் டூ-வில் நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். ஏற்கெனவே எங்க வீட்டுல ஏழு பெண் பிள்ளைங்க. அதனால எப்படியும் என்னைப் படிக்க வைக்க மாட்டாங்கனு மனசு உடைஞ்சு போயிருந்தேன். அப்போதான் இந்தத் தாத்தா என்னை வந்து பார்த்து நம்பிக்கை கொடுத்தார். இப்போ பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். தாத்தாவுக்கு நான் ஐ.ஏ.எஸ். படிக்கணும்னு ஆசை. அவரோட ஆசையைக் கண்டிப்பா நான் நிறைவேத்துவேன்!'' என்கிறார் மாற்றுத் திறனாளி மாணவியான துளசி.

''ப்

கல்விக்குக் கை கொடுக்கும் தமிழன் தாத்தா!

ளஸ் டூ-வில் 1,040 மார்க் எடுத்தேன். அப்பா டிரைவர். மேற்கொண்டு படிக்க முடியாத நிலை. தாத்தா உதவியால இப்போ இன்ஜினீயரிங் படிச்சிக்கிட்டு இருக்கேன். படிப்பு முடிஞ்ச உடனே நல்ல கம்பெனியில வேலை கிடைச்சு, தாத்தா மாதிரியே நானும் பலபேரைப் படிக்கவைக்கணும்'' என்கிறார் முகமது கௌஸ்பீ.

தஸ்லிமா தேவி என்ற மாணவி ''எனக்கு அப்பா கிடையாது, அம்மா மட்டும்தான். கூலி வேலை செய்றாங்க. ப்ளஸ் டூ-வில் நல்ல மார்க் எடுத்தேன். மேற்கொண்டு படிக்கமுடியாத என்னோட கல்விச் செலவைத் தாத்தாதான் ஏத்துக்கிட்டார். இப்போ சார்ட்டட் அக்கவுன்ட் படிக்கிறேன்'' என்கிறார்.

துளசி போல, கௌஸ்பீ போல, தஸ்லிமா போல நீங்களும் கல்விக்கு ஏங்கும் மாணவியா? 9790531456 என்ற எண்ணைத் தட்டினால் கிருஷ்ணராஜ் உங்கள் கல்விக்கு உதவுவார்.                

- நா.இள.அறவாழி, படங்கள்: எஸ்.தேவராஜன்

அடுத்த கட்டுரைக்கு