Published:Updated:

ஆட்டோ இந்துமதி!

ஆட்டோ இந்துமதி!

##~##

வேலூர் நகரில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. அதேபோல் ஆட்டோ தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்களும் வேலூ ரில் இருக்கின்றன. அந்தக் குடும்பங்களில் ஒன்றுதான் இந்துமதியின் குடும்பமும். குடும்பச் சூழ்நிலை காரணமாக இவர் ஆட்டோ ஓட்டுனராக மாறி 11 ஆண்டுகள் ஓடிவிட்டன.

 ''சின்ன வயசுல படிப்பு மேல எனக்கு அவ்வளவு இஷ்டங்க. எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சுட்டு வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முடிச்சேன். அப்புறம் எங்க வீட்டுக்காரரைக் காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். காதல்னாலே வழக்கமா எல்லா வீடுகள்ல இருந்தும் வர்ற எதிர்ப்புகளும் மிரட்டல்களும் எங்களுக்கும் வந்தது. ஆனா, கல்யாணத்துக்குப் பின்னாடிதான் எங்களுக்கு ஒருவிதமான தன்னம்பிக்கை வந்தது. 'எப்படி இருந்தாலும் வாழ்ந்துகாட்டணும்’ கிறதுல நானும் என் கணவரும் உறுதியா இருந்தோம்.

ஆட்டோ இந்துமதி!

தினமும் அவர் ஆட்டோ ஓட்டுறதைப் பார்க்கும்போது 'எனக்கும் கத்துக் கொடுப்பீங்களா?’னு விளையாட்டாக் கேட்பேன். அவரும் ஆர்வமாக் கத்துக்கொடுத்தார். நாளாக நாளாக ஆட்டோ ஓட்டுறது எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. எங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி லைசென்ஸும் வாங்கினேன். அப்போ அவர், 'எதுக்குத் தேவையில்லாம லைசென்ஸ் வாங்குறே?’னு கேட்டார். 'எதிர்காலத்துல தேவைப்படலாம்’னு மட்டும் சொன்னேன். அவரும் மறுப்பு ஏதும் சொல்லாம ஏத்துக்கிட்டாரு. அப்புறமா அவர் பிரைவேட் கம்பெனி பஸ் டிரைவரா வேலைக்குச் சேர்ந்தார். ஆனாலும், எங்களோட பொருளாதாரக் கஷ்டம் தீரலை. அப்பதான் ஒருநாள்,  'நான் ஆட்டோ ஓட்டலாம்னு இருக்கேன்’னு அவர்கிட்ட சொன்னேன். 'வேண்டாம், உன்னை வேலைக்கு அனுப்ப எனக்குப் பிடிக்கலை, நானே கஷ்டப்பட்டு குடும்பத்தைக் காப்பாத்துறேன், எதுக்கு நீ கஷ்டப்படணும்’னு சொன்னார். ஆனால், நான் பிடிவாதமா 'இல்லைங்க, நம்மளோட கஷ்டம் தீரணும்னா நானும் வேலைக்குப் போனாத்தான் முடியும்’னு சொன்னேன்.

அரை மனசோட அதை ஏத்துக்கிட்டாலும், அவர் முகத்தில் அப்போ தெரிஞ்ச அந்த வேதனை இன்னும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அப்புறமா, அவருக்கு நல்லாப் பழக்கமான அவரோட ஆட்டோ நண்பர்களிடம் என்னை அறிமுகம் செஞ்சுவெச்சார். வேலூர் ரொம்ப டிராஃபிக் நிறைஞ்ச ஏரியா. அதனால, எப்படி எல்லாம் அனுசரித்து ஆட்டோ ஓட்டணும்னு அவங்க எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க.

ஆட்டோ இந்துமதி!

தினமும் காலையில் வீட்டுவேலைகளை முடிச்சுட்டு 8:30 மணிக்கே கிளம்பிடுவேன். தொடர்ந்து ரெண்டு பெண் குழந்தைங்க பிறந்துச்சு அதனால, சில மாதம் ஆட்டோ ஓட்டப் போகாம இருந்தேன். அவருக்குப் பொண்ணுங்க ரெண்டு பேரையும் நல்லாப் படிக்கவைக்கணும்னு ரொம்ப ஆசை. அதனால பணத்தைப் பத்திக் கவலைப்படாம பிரைவேட் ஸ்கூலில் சேர்த்தோம். காலையில் அவங்களை ஸ்கூலில் விட்டுட்டு சி.எம்.சி., புது பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்குப் போவேன்.

எங்க ஆட்டோ டிரைவர் அண்ணன்கள் எல்லாம் என் மேல மரியாதையும் தனிப் பிரியமும் வெச்சிருக்காங்க. எங்களோட குடும் பக் கஷ்டம் அவங்களுக்கு நல்லாத் தெரியும். நல்ல சவாரி கிடைத்தால் போன் போட்டு வரச் சொல்வாங்க. நானும் அங்க போய் பிக்-அப் பண்ணிக்குவேன். இத்தனை வருஷ சர்வீஸ்ல ஆட்டோ தொழில் சார்ந்து இதுவரைக்கும் எனக்கு எந்தப் பிரச்னையும் வந்தது இல்லை. நிறையப் பேர் என்னோட ரெகுலர் கஸ்டமரா இருக்காங்க. வெள்ளிக்கிழமை, பண்டிகை தினம், முகூர்த்த நாள் மாதிரியான சமயங்களில் எனக்கு போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லிடுவாங்க. நானும் போயிடுவேன்.

போலீஸ்காரங்களுக்கும் என் மேல நல்ல மதிப்பு இருக்கு. சில சமயங்களில் அக்கறையா குடும்பத்தைப் பத்தி விசாரிப்பாங்க. நாம நல்லா இருக்கணும்னு நம்மளோட இருப்பவங்க மனசார நினைச்சாலே போதுங்க, இந்த உலகத்தில் அவங்களைவிட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. அந்த விஷயத்தில் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி சார்! என் மேல ரொம்பப் பாசம் வெச்சிருக்கிற என் கணவர், எங்க கஷ்டத்தைப் புரிஞ்சு நல்லா படிக்கிற தங்கம் மாதிரி பொண்ணுங்க, சொந்தத் தங்கச்சி மாதிரி கவனிக்கிற ஆட்டோக்கார அண்ணன்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல பேர்னு வாழ்க்கை ரொம்ப நல்லா போகுதுங்க சார்! எப்படியாவது இன்னும் கஷ்டப்பட்டு ரெண்டு பொண்ணுங்களையும் டாக்டராக்கணும். அதுதான் எங்க ளோட ஆசை!'' என்று கனவுகளோடு கணவரின் முகத்தைப் பார்க்கிறார். அவர் கண்களிலும் அதே கனவு!

- கே.ஏ.சசிகுமார்,படம்: ச.வெங்கடேசன்  

அடுத்த கட்டுரைக்கு