Published:Updated:

அங்குமிங்குமாக ஓவியத்துக்குள் உலவும் பூனை!

அங்குமிங்குமாக ஓவியத்துக்குள் உலவும் பூனை!

##~##

ர்.பி.பாஸ்கரன். 'பூனை பாஸ்கரன்’ என்றால் நவீன ஓவிய ரசிகர்கள் இன்னும் எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள். கேன்வாஸில் இவர் இழுக்கும் கோடுகள் ஒவ்வொன்றும் நவீனத்தின் நீட்சிகள். ரசிகர்களின் மனங்களை, தான் வரையும் பூனைகள் போலவே ஓவியத்துக்கு ஓவியம் தாவ வைக்கும் வித்தைக்காரர். சென்னை 'சரளா ஆர்ட் கேலரி’யில் தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தவரிடம் பேசியதில் இருந்து...

 ''குழுவாக, தனியாகனு ஏகப்பட்ட கண்காட்சிகள் நடத்தி இருந்தாலும் ஒவ்வொரு கண்காட்சியிலும் முதல்முறை கண்காட்சி நடத்தும் மாணவனாகத்தான் உணர்கிறேன். புதுசா சில விஷயங்கள் கத்துக்குறேன். ஒரு புது மீடியத்தில் பயணம் செய்ய முயற்சி பண்றேன். 'இந்த ஓவியத்தை இன்னும் அழகாச் செய்து இருக்கலாமோ... இன்னும் கொஞ்சம் டீடெயில் சேர்த்திருக்கலாமோ’னுதான் தோணும். இப்ப இங்க பார்க்கிற ஓவியங்கள் எல்லாம் அக்ரிலிக் கேன்வாஸ் மற்றும் பேப்பரில் வரைஞ்சது. நான் ஓவியக் கல்லூரியின் ஆசிரியரா இருந்த காலங்கள்ல பூனையை சப்ஜெக்டாவெச்சு நிறையப் படங்களை நானும் என் மாணவர்களும் வரைவோம். ஒருகட்டத்துல எனக்குப் பூனைகளை ஆழமா ஸ்டடி பண்ற ஆர்வம் வந்துச்சு. பூனைகளின் அசைவுகள், பார்வைகள்னு எல்லாத்தையும் மனசுல பதியவெச்சுப்பேன். அதுக்குப் பிறகு கேன்வாஸை எடுக்கும்போது எல்லாம் தூரிகை வழியா பூனை துள்ளிக் குதிச்சு ஓவியமா உட்கார்ந்துக்கும். மற்றபடி, பூனைகளை வரையறதுக்குச் சொந்த அனுபவமோ, வேற சிறப்புக் காரணங்களோ இல்லை.

அங்குமிங்குமாக ஓவியத்துக்குள் உலவும் பூனை!

நான் கேன்வாஸ் எடுக்கும்போதே 'இதுதான் வரையணும்; இங்க இந்த கலர் போடணும்’கிற எந்த முன் தயாரிப்புகளும் செஞ்சுக்கிறது இல்லை. அப்போதைக்கு என் மனசுல என்னவிதமான எண்ண ஓட்டங்கள் இருக்கோ அதை நான் பின்தொடர்ந்து போவேன். என்னோட பிரஷ்ல இருந்து வர்ற கோடுகள் பூனையாவும் மாறலாம்; மீனாகவும் நீந்தலாம்; மணமக்களாகவும் இணையலாம். இதோ இந்த பெயின்டிங்கைப் பாதிவரைக்கும் வரைஞ்சுட்டு ஆறு மாசம் கழிச்சு ஒருநாள் காலைலதான்  முடிச்சேன். நம்ம சிந்தனையில தடை வரும்போது எல்லாம் இந்த மாதிரி சிரமங்கள் வந்துடும்'' என, அவர் சுட்டிக்காட்டிய ஓவியத்தில் இருந்த நீந்தும் மீன்கள், என் மனதில் தண்ணீர் அள்ளித் தெளித்தன.

அங்குமிங்குமாக ஓவியத்துக்குள் உலவும் பூனை!

'' வெளிப்பாட்டுச் சுதந்திரம்கிறது எனக்கும் என் படைப்புக்கும் உள்ள உறவு. அதனாலதான் நவீன ஓவியங்கள் வரையறதுல விருப்பம் எனக்கு. என்னோட படைப்பு, மத்தவங்க மனசுல ஏதாவது அதிர்வை உண்டாக்கணும்கிற அவசியம் இல்லை. நான், ஆதிமூலம் போன்றவங்க எல்லாம் வந்த நேரம், ஓவிய உலகில் இந்தியாவுக்குனு தனியான அடையாளம் இல்லாமல் இருந்த காலம். அப்போ ஓவியர்கள் எல்லாம், ஆல மரம், மாட்டு வண்டி, மீன் கடைனு மக்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களாகவே வரைஞ்சுட்டு இருந்தாங்க. எங்க ஓவியங்களை யாரும் கணக்கிலேயே எடுத்துக்கலை. கேலரிகள்தான் அப்ப எங்களைக் கைதூக்கிவிட்டுச்சு. ஓவியக் கல்லூரிகளில் இருந்து நாங்க வெளியில் வர்றதுக்கும், 'ஆர்ட் கேலரி’ங்கிற கான்செப்ட் அறிமுகமாகுறதுக்கும் சரியா இருந்துச்சு. இன்னைக்கு சென்னையில மிக முக்கியமான கேலரிகள்ல ஒண்ணா இருக்கிற இந்த 'சரளா கேலரி’ அன்னிக்கும் முக்கியமான கேலரியா இருந்துச்சு. கேலரி ஒண்ணுதான், ஆனா இன்னைக்கு இங்க காட்சிக்கு வைக்கிற ஓவியர்கள் எத்தனை பேர்..? இன்னைக்கு ஓவியம்கிறது ஒரு முதலீடா ஆயிடுச்சு. நிறையப் பேர் ஓவியங்களை ரசிக்கிறது மட்டுமில்லாம; அதை வாங்கத் தயாரா இருக்கிறதும் மிகப்பெரிய கலாசார முன்னேற்றம்தான். என்னைப் பொறுத்தவரை அனுபவித்து வெளிப்படுத்துகிற எந்தப் படைப்பும் வெற்றிபெறும். அப்படிப் பார்த்தா, இங்கே இருக்கிற ஓவியங்கள் ஒவ்வொண்ணும் ஒவ்வோர் அனுபவம். 'இது எல்லாம் நவீன ஓவியங்கள்தான... வெறும் கோடுகளும் சிதறிய வண்ணங்களும்...’னு 'ஜஸ்ட் லைக் தட்’ கடந்து போகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க. ஆனா, உண்மை என்னன்னா... நவீன ஓவியங்களுக்கும் இலக்கணம் இருக்கு. அது தெரியணும்னா பார்ப்பவங்களோட மனசு பக்குவப்படணும்!''

அங்குமிங்குமாக ஓவியத்துக்குள் உலவும் பூனை!

அவருடைய கேன்வாஸ், எனக்குள் ஒரு பூனையின் மீசையைப் போல மாறிக்கொண்டு இருந்தது!

- ந.வினோத்குமார்,
படங்கள்: பொன்.காசிராஜன்

அடுத்த கட்டுரைக்கு