Published:Updated:

என் ஊர் : காஞ்சிபுரம்

என் ஊர் அல்ல... என் உயிர்!

##~##

''பெண்ணடிமைக்கு எதிராகவும் பெண் கல்வியை ஊக்குவிக்கவும் ஊர்தோறும் தந்தை பெரியார் முழங்கி வந்த காலத்தில்தான் என் பள்ளிப் பருவம் அமைந்தது. காஞ்சியில் ஒரு கடைக்கோடி கட்டட மேஸ்திரியின் மகள், பின்னாளில் ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்குக் காரணம் பெரியாரின் உழைப்புதான். அந்த பெரியாரின் தீவிரத் தொண்டரான அண்ணா பிறந்த காஞ்சிதான் என் சொந்த ஊர்!'' - தன் சொந்த ஊரான காஞ்சிபுரம் பற்றிய நினைவுகளைப் பூரிப்புடன் பகிர்ந்துகொள்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலம்மாள்.

 ''பிள்ளையார்பாளையம் - இது காஞ்சியில் தறி நெசவு செய்பவர்கள் அதிகமாக வாழும் பகுதி. இந்தப் பகுதியில் உள்ள பள்ளியில்தான் ஐந்தாம் வகுப்புவரைப் படித்தேன். அப்போது, தூரத்தில் இருந்து வரக்கூடிய நாங்களெல்லாம் மிகச் சரியாகப் பள்ளிக்கு வந்துவிடுவோம். அருகாமையில் வீடு உள்ள இந்தப் பகுதி மாணவ, மாணவிகள் தாமதமாகத்தான் வருவார்கள். 'ஏன் லேட்?’ என்று ஆசிரியர்கள் கேட்க, அவர்கள் பாவமாகக் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றது இன்னமும் என் கண்முன் நிற்கிறது. பாவு போடுவது, இழைப்பது எனப் பெரும்பாலான நெசவுப் பணிகளில் குழந்தைகளும் பங்கெடுத்துக்கொள்வார்கள் என்பதுதான் இந்தத் தாமதத்துக்குக் காரணம். நான் சட்டமன்ற உறுப்பினர் ஆன பிறகு, என் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் பெரும்பகுதியைக் கல்விக்கும் மருத்துவத்துக்கும் செலவிட்டதற்கான வித்து இந்தப் பிள்ளையார் பாளையம்தான்.

என் ஊர் : காஞ்சிபுரம்

அடுத்து, மாண்டு கன்னீஸ்வரர் கோயில் தெரு. இங்குதான் என் பூர்வீக வீடு உள்ளது. என் தந்தையார் கட்டட வேலை செய்யும் மேஸ்திரி. முன்பெல்லாம், பெண்கள் படித்துவிட்டால் அவர்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமம் என்று  தொடக்கப் பள்ளியோடு நிறுத்திவிடுவார்கள். எனக்கும் அதே பிரச்னை. என் வயதுப் பெண்கள் புத்தகப் பையோடு பள்ளிக்குச் செல்லும்போது வீட்டு வாசலில் நின்று ஏக்கமாகப் பார்த்துக்கொண்டு இருந்த இந்த வீடு, எனக்கு ரொம்பவே சென்டிமென்ட். நான் மேற்கொண்டு படிக்கப் போகிறேன் எனச் சொன்னபோது அம்மாவை அப்பா திட்டியதும், தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நான் பட்டினி கிடந்ததைப் பார்த்து பயந்துபோய் அப்பா இறங்கி வந்ததும் அந்தத் தெருவைக் கடக்கும்போது எல்லாம் என் மனதில் அலையடிக்கும்.

அப்பா, அம்மாவின் கடைசிக் காலம் வரை அவர்களை மரியாதையுடன் நடத்தியதற்கும் வெளி உலகில் கண்ணியத்துடன் வாழ்வதற்கும் சி.எஸ்.ஐ. பள்ளி கற்றுத்தந்த ஒழுக்கம் என்ற பாலபாடம்தான் காரணம். சமீபத்தில், சென்னையில் உமாமகேஸ்வரி என்ற ஆசிரியை மாணவனால் குத்திக் கொலை செய்யப்பட்டபோது எனக்கு இந்தப் பள்ளிதான் நினைவுக்கு வந்தது. ஒரு ஆசிரியை என்பதால் சொல்கிறேன், பாடத் திட்டத்தைவிட முக்கியப் பாடமான நல்லொழுக்கத்தை நாம் மறந்துவிட்டோம் என்பதைத்தான் இதுபோன்ற கொலை உணர்த்துகிறது.

என் ஊர் : காஞ்சிபுரம்

சிறு வயதில் தோழிகளோடு சேர்ந்து குதித்து குளித்து மகிழ்ந்த குளம், ஒக்கப்பிறந்தான்குளம். இன்று அந்தத் தோழிகளும் இல்லை; குளிக்கும் அளவுக்கு இந்தக் குளம் தூய்மையாகவும் இல்லை என்பது வருத்தம். அதேபோல் காஞ்சிக்கு அருகே நான் ஆசிரியையாக முதன்முதலில் பணியேற்ற கலியனூர். அடுத்துப்  பணியேற்ற கோவிந்தவாடி தொடக்கப்பள்ளி இரண்டும் மறக்க முடியாத இடங்கள்.

'என்ன டீச்சர்... கோவிந்தவாடியா போறீங்க. அந்தப் பசங்க மோசமானவங்க. வாட்ச்மேனை மிரட்டி, ஸ்கூலை உள்ளேயே பூட்டிட்டு உட்கார்ந்து இருப்பானுங்க. மீறிப்போய் நீங்க அங்க ஜாய்ன் பண்ணுனீங்கனா, காக்கா, குருவிகளைச் சுட்டு உங்க பையில போட்டுடுவானுங்க, நாற்காலியில காக்கா எச்சத்தைப் போட்டுடுவானுங்க. பார்த்து டீச்சர்’ என்கிற சக ஆசிரியர்களின் எச்சரிக்கைகளையும் மீறி சவாலாக அந்தப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தேன். அவர்கள் சொன்ன அனைத்து மிரட்டல்களையும் எதிர்கொண்டேன். ஆனால், என் உறுதியால் அனைத்து மாணவர்களையும் வழிக்குக் கொண்டுவந்த கோவிந்தவாடி பள்ளி நாட்கள் எனக்குப் பெருமையான தருணங்கள்.

என் ஊர் : காஞ்சிபுரம்

அதேபோல், நான் கடந்த 15 ஆண்டுகளாகக் குடியிருக்கும் எஸ்.பி.என். பிள்ளை தெருவும் பெருமைக்குரிய ஏரியாதான். சங்கீத வித்வான் நயினாப் பிள்ளை அவர்களுடைய நினைவாக இந்தப் பெயர் வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட காஞ்சியை என் ஊர் என்று சொல்வதைவிட, என் உயிர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்!''

- எஸ்.கிருபாகரன்
படங்கள்: வீ.ஆனந்தஜோதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு