Published:Updated:

பத்துப் பிரிவுகள்... முத்து உதவிகள்!

பத்துப் பிரிவுகள்... முத்து உதவிகள்!

##~##

''இரண்டு பேருடன் 2006-ல் ஆரம்பிக்கப்பட்ட 'சென்னை சமூக சேவை’ அமைப்பில் இன்று வலைப்பதிவர்கள், சாஃப்ட்வேர் கம்பெனிகளில் பணிபுரிவோர் என 2 ஆயிரம் உறுப்பினர்கள்!'' - பெருமிதத்துடன் பேசுகிறார் சதீஷ்குமார். இந்த அமைப்பின் நிறுவனரான சதீஷ்குமார், 10 பிரிவுகளாக வகைப்படுத்தி தாங்கள் செய்யும் சமூகப் பணிகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 ''ஆதரவற்ற இல்லங்களில் உள்ளவர்களுக்கானத் தேவையை அந்த இல்லங்களே பூர்த்தி செய்தாலும், கூடுதலாக அவர்கள் எதிர்பார்ப்பது அரவணைப்பு ஒன்றுதான். அதனால், இந்தப் பிரிவுக்கு 'அரவணைப்பு’ என்றே பெயர். இந்தப் பிரிவில் உள்ள உறுப்பினர்கள், தங்களுடைய பிறந்தநாள், திருமண நாட்களை இந்த இல்லங்களில் கொண்டாடுகிறார்கள். விரைவில் முதியோர் இல்லம் ஒன்றையும் எடுத்து நடத்த உள்ளோம். பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதைக் கொள்கையாகக்கொண்டது 'சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு’. யாருக்காவது மரக் கன்றுகள் தேவைப்பட்டால், 'GREEN’ என, டைப் செய்து '9894062532’ என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். தட்டினால் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று மரக் கன்றுகளை வழங்குவதோடு, அவற்றைப் பராமரிப்பது குறித்தும் சொல்லித்தருகின்றனர்.

பத்துப் பிரிவுகள்... முத்து உதவிகள்!

அடுத்து 'ரெட் டிராப்ஸ்’. அதாவது 'சிவப்புத் துளிகள்’. 24 மணிநேர ரத்த தான சேவைப் பிரிவு. இதுவரை 10-க்கும் மேற்பட்ட முகாம்களை நடத்தி 1,000 யூனிட்டுக்கு மேல் ரத்த தானம் செய்துள்ளோம். இந்தப் பிரிவில் 1,600 பேர் ரத்தம் தரத் தயாராக உள்ளனர். ரத்தம் தேவைப்படுவோர் இந்தப் பிரிவைத் தொடர்புகொள்ளலாம். வீணாகும் உணவைச் சுத்தப்படுத்தி விலங்குகளுக்குத் தர, 'ப்ளூ கிராஸ்’ அமைப்புடன் இணைந்து செயல்படும் பிரிவு 'வேஸ்ட் ஃபுட் மேனேஜ்மென்ட்’. ஹோட்டல் மற்றும் பார்ட்டிகளில்  இரவு வேளைகளில் வீணாகும் உணவுகளைப் பெற்று விலங்குகளுக்கு உணவளித்துவருகிறோம்'' என்பவர் சற்று இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

பத்துப் பிரிவுகள்... முத்து உதவிகள்!

''ஏழை மாணவர்களுக்கு உதவத் தொடங்கப்பட்ட அமைப்பு 'நாளந்தா’. இது, மாணவர்களுக்குக் கல்விக் கடன் பெற்றுத்தருவதில் தொடங்கி கல்வி சார்ந்த பணிகளைச் செய்து தருவதுவரை உதவுகிறது. கோயம்பேடு பகுதியில் ஓர் இலவச டியூஷன் மையத்தை இந்தப் பிரிவு தொடங்க உள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை அருகில் உள்ளவர்களின் பொறுப்பில் விட்டுச் செல்லும்போது, அந்தக் குழந்தைகள் உடல் மற்றும் மனரீதியாகப் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க, 'துளிர்’ என்ற அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது 'குழந்தை பாலியல் பலாத்காரத் தடுப்புப் பிரிவு’. அதேபோல் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகாலத் தேவைகளை கருத்தில்கொண்டு உதவி செய்கிறது இன்னொரு பிரிவு. 'தானே’ புயல் பாதிப்புப் பணியில் 'விகடன்’ அளவுக்கு இல்லை என்றாலும் அணில் அளவு உதவிகள் செய்தோம் எனலாம். திருவள்ளூர் மாவட்டம் வயலூர், கவரப்பேட்டை கிராமங்களில் 2006-ம் ஆண்டு முதல் 2009 வரை மருத்துவ மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி உள்ளோம்.

அடுத்து சாலைப் பாதுகாப்புக்கான பிரிவு. சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று, 'சாலை விதிகளைப் பின்பற்றுவதில் அலட்சியம் காட்டுவதில் சென்னை முதல் இடத்தில் உள்ளது’ என்கிறது. 'முதல் உதவி என்றால் என்ன என்பதில் தொடங்கி விபத்து தொடர்பான விழிப்பு உணர்வு முகாம்கள் வரை அனைத்தையும் இந்தப் பிரிவு நடத்திவருகிறது. 'சாய்’ என்ற அமைப்புடன் இணைந்து மாற்றுத்

பத்துப் பிரிவுகள்... முத்து உதவிகள்!

திறனாளி நண்பர்களுக்காக இயங்கிவரும் மற்றொரு பிரிவு, அவர்கள் படிக்க, தேர்வு எழுத உதவிவருகிறது. அவர்களுக்கான பிரத்யேக விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துகிறது. வீட்டு விழாக்களில் தரப்படும் தாம்பூலப் பைகளுக்குப் பதிலாக மரக் கன்று தரும் முறையை ஊக்குவிக்க, கேட்பவர்களுக்கு எல்லாம் மரக் கன்றுகளை அளித்துவருகிறது இன்னோர் அமைப்பு. இதைத் தவிர எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 'நான் உங்களுக்கு உதவலாமா?’ என்ற பிரிவைத் தொடங்கி அதில் எங்கள் உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு உதவிவருகிறார்கள்.  சமீபத்தில் இந்த மருத்துவமனையின் சுவர்களுக்கு வர்ணம் பூசி புதுப்பித்தோம். அங்குள்ள குழந்தைகளுக்குப் பொம்மைகள் வாங்கித்தருவது, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது எனக் குழந்தைகளை மகிழ்விக்கிறார்கள்.

இந்தப் 10 பிரிவுகள் மூலம் ஆயிரமாயிரம் நற்பணிகள் செய்தாலும் அவற்றைச் சேவையாக நினைக்காமல் கடமையாக நினைப்பதே எங்கள் அமைப்பின் வெற்றி'' என்கிறார் சதீஷ்குமார்!

சா.வடிவரசு, படங்கள்:   க.கோ.ஆனந்த்

அடுத்த கட்டுரைக்கு