Published:Updated:

யானைக்கு ஷவர்... பாம்புக்கு ஏ.சி.!

Vandalur Zoo
Vandalur Zoo

குளு குளு வண்டலூர்

##~##

''ஸ்... ஸப்பா... மழைக் காலத்தைக்கூடப் பொறுத்துக்கலாம், இந்த வெயிலைத்தான் தாங்க முடியலை'' - என்ற முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கிவிட்டன. அதுவும் இப்போது மார்ச்தான். கோடையின் கொடுமையில் இருந்து தப்பிக்க மக்களுக்கு ஆயிரமாயிரம் வழிகள் இருக்கின்றன. ஆனால், விலங்குகளுக்கு? 'காட்டில் வாழும் விலங்குகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவை, ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றாற் போலத் தங்களைத் தாங்களே காத்துக்கொள்கின்றன’ என்கிறார்கள் வன உயிரியல் ஆய்வாளர்கள். உயிரியல் பூங்காக்களில் அடைத்துவைக்கப்பட்டு இருக்கும் விலங்குகளுக்கு, அந்த வாய்ப்பு இல்லை. இதனால்தான், இந்தியா முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் கோடை மற்றும் குளிர்காலங்களுக்கு விசேஷ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்தக் கோடைக்கு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்பதை அறிய ஒரு விசிட் அடித்தோம்...

யானைக்கு ஷவர்... பாம்புக்கு ஏ.சி.!

 ஒவ்வொரு பறவை கூண்டுக்கு மேலேயும் கோணிப்பைகளை விரித்துவைத்திருக்கின்றனர். ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை அந்தக் கோணிகளின் மீது தண்ணீர் ஊற்றுகின்றனர். வெப்பம் தணிந்து கூண்டுப் பகுதிக்குள் ஜில்லென்று இருப்பதால், பறவைகள் உற்சாக ஆட்டம் போடுகின்றன. யானைகளுக்கு இன்னும் கொண்டாட்டம். அதிகாலையில் எழுந்து கிடங்குகளில் நிரப்பட்டு இருக்கும் நீரில் உற்சாகக் குளியல் போட்டாலும் போதவில்லை. அதனால், 'ஷவர் பாத்’ ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். இந்த ஜலக்கிரீடை மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை நடத்தப்படுகிறது. ஷவரில் குளித்து ஆட்டம் போடும் யானைக் கூட்டத்தைப் பார்த்து ரசிக்க பொதுமக்களுக்கு அனுமதி உண்டு.

பாம்புகளோ இது எல்லாம் எங்களுக்குப் போதாது என்று சொல்லிவிட்டன போலும். பாம்புகள் அடைக்கப்பட்டு உள்ள கண்ணாடிக் கூண்டுகளில் ஏ.சி. இயந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதிலும், ராஜநாகமோ 'எனக்கு ஒரு டன் ஏ.சி. போதவில்லை என்று புலம்பியதால் (!) அதற்கு மட்டும் 1.5 டன் ஏ.சி. பொருத்தி இருக்கின்றனர். வெயில் கொளுத்திக்கொண்டு இருந்த நேரத்தில் நாம் சென்றதால், ஜிலுஜிலு கூண்டில் நல்ல தூக்கத்தில் இருந்தது ராஜநாகம். மற்ற வகை பாம்புகள் தூங்கி எழுந்து கெட்ட ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தன.

யானைக்கு ஷவர்... பாம்புக்கு ஏ.சி.!

அதைப் படம் பிடிக்கக் கூண்டுக்குள் சென்ற  நம் போட்டோகிராஃபரை முதலில் கண்டுகொள்ளாத பாம்புகள், திடீரென ஒன்றுசேர்ந்து சீற ஆரம்பித்தன. பயத்தில் வியர்க்க விறுவிறுக்க வெளியே ஓடி வந்தவரை தடுத்த பாதுகாவலர், ''ஏ.சி. வெளிய போயிடும் கதவைச் சாத்துங்கனு சொல்லுதுங்க சார்'' என்று சிரித்தார். சில பாம்புகள் அதிகக் குளிரைத் தாங்காமல் அவஸ்தைப்பட்டால், சற்று வெதுவெதுப்பான சூழலில் இருப்பதற்காக மண் பானைகளும் வைக்கப்பட்டு உள்ளன. தேவை என்றால், அதற்குள் சென்று பதுங்கிக்கொள்கின்றன பாம்புகள். மான், குரங்குகள் உள்ளிட்ட மற்ற விலங்குகள் திறந்தவெளி முகாமுக்குள் இருப்பதால், அவற்றுக்கு ஆங்காங்கே கீற்றுகள் வேயப்பட்ட பந்தல்

யானைக்கு ஷவர்... பாம்புக்கு ஏ.சி.!

அமைத்துக்கொடுத்துள்ளனர். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும்போது, அந்தப் பந்தலுக்குள் சென்று ஓய்வு எடுத்துக்கொள்கின்றன. இது தவிர, கோடைக் கால உணவுகளாகத் தர்பூசணி, இளநீர் மற்றும் பழங்களும் சில விலங்குகளுக்கு வழங்கப்படுகின்றன.

பூங்கா முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு  பாம்பு இருக்கும் பகுதி வழியாகத் திரும்பும்போது, ''ஃபேன் ஹவுஸ்ல எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போட்டு இருக்காங்களாம். இந்த ஏ.சி-யை மாத்திடுவோமா?'' என்ற குரல் கேட்டு அதிர்ந்துபோய்த் திரும்பிப் பார்த்தால்... பூங்காவைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த ஒரு தம்பதியினர் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர். பாம்புகள்தான் எக்சேஞ்ச் ஆஃபர் பற்றி பேசுகிறதோ என்று ஒரு நிமிடம் திகில் அடித்தது நமக்கு!

- எஸ்.கோபாலகிருஷ்ணன்
படங்கள்: கே.கார்த்திகேயன்

அடுத்த கட்டுரைக்கு