Published:Updated:

மாத்தி யோசி!

மாத்தி யோசி!

##~##

க்கத்துக்கு ஒரு ரூபாய், ஃப்ரன்ட் அண்ட் பேக் 50 பைசா, 10 காப்பிகளுக்கு மேல் எடுத்தால் 35 பைசா என, நாம் அன்றாடம் பார்க்கும் ஜெராக்ஸ் கடைக் காட்சிகளை சற்றே மாற்றி யோசித்து வெற்றிபெற்று இருக்கிறார்கள், சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சந்தீப் மற்றும் ஆனந்த். 'பக்கத்துக்குப் பத்தே பைசா’ என்ற விளம்பரத்துடன் சென்னையின் பல்வேறு கல்லூரிகளில் தடம் பதித்துள்ள இவர்கள், ஜெராக்ஸ் எடுப்பதைப் பெரும் பணம் பண்ணும் தொழிலாக மாற்றியுள்ளனர். எப் படி..?

 'நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஃப்ரெண்ட்ஸ். லயோலா காலேஜ்ல ஒண்ணாப் படிச்சோம். அப்பவே, 'புதுசா ஏதாவது பண்ணணும்டா’னு பேசிக்கிட்டு இருப்போம். பெரிய கிரிக்கெட் போட்டிகளை சாதாரண மக்களையும் மலிவான டிக்கெட்ல பார்க்க வைக்கணும்கிறதுல தொடங்கி,

மாத்தி யோசி!

கைவசம் ஏகப்பட்ட திட்டங்கள் வெச்சிருந்தோம். பணப் பற்றாக்குறையால் எதையுமே செய்ய முடியலை.

அந்தச் சமயத்தில்தான் 'டெடா காப்பி’ங்கிற ஜப்பானிய நிறுவனம் பற்றிக் கேள்விப்பட்டோம். அதாவது தெருவில் ஒரு ஜெராக்ஸ் மெஷினைவெச்சுடுவாங்க. அதுக்குப் பக்கத்துலயே பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்கள் அச்சிடப்பட்ட ஒன் சைட் பேப்பர்கள் இருக்கும். அந்த ஒன் சைட் பேப்பர்ல மக்கள் இலவச மாக ஜெராக்ஸ் எடுத்துக்கலாம். இதன்மூலம் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு விளம்பரமும் கிடைச்சுடும்; மக்களுக்கும் இலவசமா ஜெராக்ஸ் கிடைச்சுடும். இந்த 'டூ இன் ஒன்’தான் டெடா காப்பி நிறுவனத்தின் கான்செப்ட். 'இந்த கான்செப்ட்டை நம்ம ஊர்ல ஏன் அப்ளை பண்ணிப் பார்க்கக் கூடாது?’னு யோசிச்சோம். புது ஐடியா உருவாகிடுச்சு'' என்ற சந்தீப்பைத் தொடர்கிறார் ஆனந்த்.

'' 'இதெல்லாம் ஒரு ஐடியாவே கிடையாது. வொர்க்-அவுட் ஆகாது’னு சிலர் சொன்னாங்க. இன்னும் சிலரோ, 'ஜெராக்ஸ் தொழில்ல அப்படி என்ன பெரிய வருமானம் வந்துடப்போகுது?’னாங்க. ஆனால், நாங்க டெட்டாகாப்பி கான்செப்டில் தமிழகத்துக்கு ஏற்ற மாதிரி சின்னச் சின்ன மாற்றங்கள் செஞ்சோம். புராஜெக்ட், நோட்ஸ்னு பக்கம் பக்கமா ஜெராக்ஸ் எடுக்கிற கல்லூரி மாணவர்கள்தான் நம்ம இலக்குனு முடிவு பண்ணிக்கிட்டோம். எங்க நிறுவனத்துக்கு 'போட்டோ காப்பி’னு நாங்க வெச்சபேர், ரொம்பவும் கேட்ச்சிங்கா இருக்கிறதா பலர் சொன்னாங்க.

முதல்ல ஏகப்பட்ட நிறுவனங்களை அணுகி எங்க திட்டம் பற்றி விளக்கிச் சொல்லி அவங்க கிட்ட விளம்பரங்கள் வாங்கினோம். அந்த விளம்பரத்துக்காகச் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகை தருவாங்க. அப்புறம் கல்லூரி நிர்வாகத்தை அணுகி எங்க திட்டம் பற்றிச் சொல்வோம். அடுத்து நிர்வாகம் அவங்க கல்லூரியில் ஜெராக்ஸ் கடைவெச்சு இருக்கும் நபர்கள்கிட்ட எங்களை அனுப்பும். அவரிடம் ஒரு பக்கம் ஜெராக்ஸ் எடுக்க 10 பைசா மட்டுமே வாங்குற இந்த உத்தியைச் சொல்வோம். பிறகு சம்பந்தப்பட்ட கடைகளிடம், ஒரு பக்கம் விளம்பரங்கள் அச்சிட்ட தாள்களை நாங்களே கொடுப்போம். 10 பைசாவுக்கு ஜெராக்ஸ் போடுறதால ஏற்படும் நஷ்டத்தைவிட அதிகமான பணத்தை நாங்களே அவங்களுக்குத் தந்துடுவோம். இப்படி இந்த 10 பைசா ஜெராக்ஸால சம்பந்தப்பட்ட நிறுவனம், மாணவர்கள், ஜெராக்ஸ் கடைக்காரர், நாங்கள்னு எல்லாருக்குமே லாபம்தான். அதே போல, 'நீங்க விளம்பரம் அச்சிட்ட இந்தத் தாள்லதான் ஜெராக்ஸ் எடுக்கணும்னு நாங்க எந்த மாணவர்களையும் கட்டாயப்படுத்துறது இல்லை. அவங்க, '10 பைசா ஜெராக்ஸ்’னு கேட்டா மட்டும்தான் அதுல ஜெராக்ஸ் போடுவாங்க.

மாத்தி யோசி!

எங்க லயோலா கல்லூரியில்தான் முதல்முதலில் 'போட்டோகாப்பி’யை ஆரம்பித்தோம். ஆரம்பிக்கும்போது 10 ஆயிரம் காப்பிகள் எடுத்துக்கிட்டு இருந்தோம். அதை இந்த ஏழே மாதங்களில் ஒரு லட்சம் பிரதிகளா உயர்த்தி இருக்கோம். 'இந்த சிஸ்டத்தை எங்க காலேஜ்லயும் கொண்டுவாங்க’னு பல கல்லூரிகள் அணுகுறாங்க. ஓரளவுக்கு வளர்ந்த பிறகும் இவ்வளவு வேலைகளையும் நாங்க ரெண்டு பேர் மட்டும்தான் பண்றோம். என் தம்பி அவினாஷ், நேஹல் என்ற என் தோழி, வினோத்னு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுற இவங்களாலதான் இது சாத்தியமாச்சு.

'போட்டோ காப்பி’யை இப்ப பெங்களூரூ, கொச்சின், கோவைனு விரிவுபடுத்தப்போறோம். ஆரம்பத்தில் கஸ்டமர்களுக்கு இந்த கான்செப்டைப் புரியவைக்கிறதுல ரொம்பவே சிரமம் இருந்துச்சு. ஆனால், மனசைத் தளரவிடாம தொடர்ந்து முயற்சி பண்ணினதாலதான் இன்னைக்கு நாங்க வெற்றி பெற்றிருக்கோம்னு நினைக்கிறோம்'' என்ற ஆனந்த்தை வழிமொழிகிறார் சந்தீப்!

பூ.கொ.சரவணன்
படம்: ஜெ.தான்யராஜு

அடுத்த கட்டுரைக்கு