Published:Updated:

வலையோசை : விவசாயி

வலையோசை : விவசாயி

வலையோசை : விவசாயி

ஒரு கிராமத்தானின் அட்டவணை!

கிராமத்து வாழ்க்கை ஓர் அட்டவணை வாழ்க்கை. எம்பட தாத்தா, பாட்டி, அப்பிச்சி, அம்மாயி அப்படித்தான் வாழ்ந்தாங்க. வெள்ளைனைய எழுந்து மாடு, எருமைப் பாலை பீய்ச்சிருவாங்க. கருக்கல்லயே சொசைட்டிக்குப் போயி பாலை ஊத்தி ஆவணும்.    

நம்பூ(வீ)ட்டுக்கும் சொசைட்டிக்கும் ஒன்றரை மைல் இருக்குமுங். அங்க ரீடிங் பார்த்து புஸ்தகத்துல குறிச்சிட்டு மசமசன்னு இருக்கும்போதே வீட்டுக்கு வந்துடுவோம். பாட்டி வெக்கிற காபியக் குடிச்சிட்டு தோட்டத்துக்குக் கிளம்பியரோணும். தேங்காய் மரத்துல இருந்து வுழுந்த தேங்காயை எல்லாம் பொறுக்கி, ஒரு இடத்துல குவிச்சுவெச்சுட்டு, பின்பக்கமா ஒதுங்கிட்டு வந்துடுவோம். வரும்போதே வாயில பல்குச்சி இருக்கும்.

வலையோசை : விவசாயி

இந்த நேரத்துல பாட்டி கட்டுத்தாரையக் கூட்டி தயிரக் கடைஞ்சு மோராக்கி இருக்கும். ஒரு பெரிய தேங்கா அளவுக்கு வெண்ணை எடுத்து உறில போடும். வந்தவுடனே பழைய சோத்துக்கு மோர் ஊத்திக் குடிச்சிப்புட்டு காட்டுல தண்ணி காட்டுறது, வயல்ல பார் புடிக்கிறது, செடிக்கு மருந்து வெக்கிறது, கரும்புக்கு சோவை எடுக்கிறது, களை புடுங்குறது, பருத்தி புடுங்குறது, வயலடிக்கிறது, செடி வெட்டியாந்து உரம் போடுறது... இப்படி மொறைக்கு ஒவ்வொரு வேலை இருக்கும்.    

மத்தியானம் சோறு மோர் ஊத்தி கரைச்சி குடிச்சிப்புட்டா தென்ன மரத்தடியோ வேப்ப மரத்தடியோ தூங்கிட வேண்டியதுதான். அப்புறம் எழுந்திருச்சு ஆட்டையும் மாட்டையும் கரட்டுக்கு ஓட்டிக்கிட்டுப் போனா சாயங்காலம் ஆகிடும். 5 மணிவாக்குல திரும்ப வந்து ஆட்டைப் பட்டியில அடைச்சிப்புடணும். மறுபடியும் பால் பீய்ச்சி எடுத்துட்டு சொசைட்டிக்குப் போயிருவோம். அங்கதான் கதை அடிக்கிறது, பொரணி பேசறது எல்லாம்.

சொசைட்டியில இருந்து திரும்ப வந்ததும் சோத்தைச் சாப்பிட்டு தூங்கிட வேண்டியதுதான். சனி அன்னிக்கி கொங்கணாபுரம் சந்தை. ஆடு வாங்க, விக்க, காய் போடப் போவோம். கண்டிப்பா தனியா போவ மாட்டோம், பங்காளிங்க எல்லாம் ஒண்ணாக் கூடிதான் போவோம். அப்பத்தான் புரோக்கரு ஏமாத்தாம காசு தருவான். ஞாயித்துக்கிழமை சங்கீரி (சங்ககிரி) சந்தை. பலசரக்கு சாமான் வாங்குறது, கோழி புடிக்கிறது எல்லாம் அங்கதான். சனிக்கிழமை சாயங்காலம் பஜ்ஜியோ, போண்டாவோ, கச்சாயமோ, தேங்கா வடையோ பாட்டி சுடும். ஒரு ரவுண்டு கட்டிட்டா ரவைக்கு சாப்புடவே தோணாதுங். இந்த வாழ்க்கை முறை, 1990-கள்ல என் பள்ளிப் பருவத்துலங்ணா. இப்ப நிறைய மாறிப் போச்சுங்ணா!

தாயுமானவர் இவர்!

கோவை, வ.உ.சி. மாநகராட்சி உயிரியல் பூங்காவின் இயக்குநர் மற்றும் மருத்துவர் கே.அசோகன். அவர் சொன்ன அனுபவம் இது...

''மற்ற நாடுகளைவிட இந்தியாவில் யானைகளின் வாழ்நாள் குறைவு. அதற்குக் காரணங்கள் பல. ஒன்று, தொண்டை அடைப்பான் நோய். நான் முதுமலையில் பணிபுரிந்தபோது, அதற்குத் தகுந்த சிகிச்சை கொடுத்து, மற்ற யானைகளுக்குப் பரவாமல் தடுத்தேன். அடுத்து, யானைகளைத் தாக்கும் நாடாப்புழுக்கள். அதற்கான சிகிச்சையை மேற்கொண்டேன்.

வலையோசை : விவசாயி

காட்டுக்குள் இருக்கும் தனியார் எஸ்டேட்களில் பலாப் பழத்தில் வெடிகுண்டை ஒளித்துவைப்பது, வழித்தடத்தில் ஆணிப் பொறிகளை வைப்பது, தந்தங்களுக்காக யானைகளைச் சுடுவது என யானைகளைக் கொல்கிறார்கள். இதுவரை 55 யானைகளுக்குப் பிரேதப் பரிசோதனை செய்து பல விஷயங்களைக் கண்டறிந்து உள்ளேன்.

வயநாடு (கேரளா) முதுமலை இடையே ஓடி ஒளிந்துகொண்டு 22 பேரைக் கொன்றது 'மக்னா’ (கொம்பில்லா ஆண் யானை). இந்த வகை யானைகள் ஆசியாவிலேயே ஐந்து சதவிகிதம்தான் உள்ளன. அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று அதைப் பிடித்தோம். அதன் உடலில் பல துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இருந்தன. பிழைப்பதற்கு 10 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருந்த நிலையில், ஓர் ஆண்டு சிகிச்சைக் கொடுத்து அது இன்று உயிருடன் இருக்கிறது. சிறுமுகை வனப் பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி, இறக்கும் நிலையில் இருந்த யானைக்குச் சிகிச்சைக்கொடுத்து பிழைக்கவைத்தோம்.

2000-ம் ஆண்டு குன்னுரில் விஷம் தடவிய மாட்டு இறைச்சியைச் சாப்பிட்டு கோமா நிலைக்குச் சென்ற சிறுத்தைக் குட்டியைப் பிழைக்கவைத்தோம். சமீபத்தில் கோவை வ.உ.சி. பூங்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பாம்புக்கு முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்து அது ஆரோக்கியமாக உள்ளது.

நாகையில் 2004-ம் ஆண்டு கால்நடை மருத்துவராக இருந்தபோது படகு வலையில் சிக்கி ஆயிரக்கான ஆமைகள் இறப்பது வழக்கமாக இருந்தது. அப்போது கடற்கரையில் செயற்கையாக ஆமை முட்டைகளைப் பாதுகாக்க ஓர் இடத்தை உருவாக்கி குஞ்சுகள் பொரிந்தவுடன் அவற்றை எடுத்துச் சென்று ஆழ்கடலில் விட்டோம்...''

வலையோசை : விவசாயி
அடுத்த கட்டுரைக்கு