Published:Updated:

என் ஊர் : நாமக்கல்

வளரும் ஆஞ்சனேயர் தலையில் கடப்பாரை!

##~##

யிர்ப்புமிக்க ஓவியத் திறனுக்காக, இரு முறை தேசிய விருதுகளைப் பெற்றவர் ரவிராஜ். கோவையில் 'லலித் கலா ஷேத்ரா’ என்ற நுண்கலைக் கல்லூரியை நடத்திவரும் ரவிராஜ், தன்னுடைய சொந்த ஊரான நாமக்கல் குறித்து தீட்டும் வார்த்தை ஓவியங்கள் இங்கே!

 ''1960-களில் நாமக்கல் ஓர் உள்ளடங்கிய கிராமம். இப்போ சேலத்துக்கும் ஈரோட்டுக்கும் அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் ஓடுது. அந்தக் காலத்துல எங்க பயணம் எல்லாம் மாட்டு வண்டிகளை நம்பித்தான். நோம்பிக்குத் துணி எடுக்கவும் கல்யாணச் சீருக்குப் பண்ட பாத்திரங்கள் வாங்கவும் சேலத்துக்கு வண்டி கட்டிட்டுப் போன காலங்கள் வாழ்வின் வசந்த காலங்கள்.

என் ஊர் : நாமக்கல்

நாமக்கல்னாலே எல்லார் மனசுலயும் தோணுறது முட்டை, ஆஞ்சனேயர், அப்புறம் அந்தப் பிரமாண்டமான மலைக்கோட்டை. எந்த இடத்துல இருந்து பார்த்தாலும் கம்பீரமாத் தெரியுற அந்த மலையை மையமாவெச்சு வருஷத்துக்கு ஒருமுறை திருவிழா வரும் பாருங்க... ஊரே அமர்க்களப்பட்டுப்போகும். மலைச் சரிவுல கலர் கலரா கடைகளும் ராட்டினங்களும் போட்டு, வேடிக்கைக் காட்டி அசத்துவாங்க. பொங்கலுக்கு எடுத்த புது தாவணியக் கட்டிக்கிட்டு பொண்ணுங்க கூட்டம் நெருக்கியடிக்கும். அவங்களைப் பார்க்க கம்மலும் ரிப்பனும் விக்கிறக் கடைங்கள்ல போய் நின்ன அந்தக் காலங்களை நினைச்சா சிரிப்புத்தான் வருது.  

மலைக்குப் பின்புறம் இருக்கிற திரு.வி.க. பாறையிலதான் பொதுக்கூட்டம் நடக்கும். 1933-ல் காந்தியடிகள் இங்கேதான் கூட்டம் போட்டாராம். இங்க நடந்த ஒரு கூட்டத்துலதான் எம்.ஜி.ஆரைப் பார்த்தேனுங்க. அவரைப் பார்க்கோணும்னு சாயந்திரம் 4 மணியில இருந்து மக்கள் கூட்டம் தவம் கிடந்துச்சு. ஒருவழியா அவர் விடியற்காலையில 3 மணிக்கு வந்தார். தங்கச் சிலையாட்டம் இருந்த அவரைக் கண் இமைக்காமப் பார்த்தேன். அவரோட இன்ஸ்பிரேஷன்லதான் இன்னைக்கும் வாட்சை வலது கையில கட்டிட்டு இருக்கேன்.  ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிச்ச 'ராணுவ வீரன்’ படத்தை எங்க ஊர்லதான் எடுத்தாங்க. ரஜினி பொதுமக்கள்கிட்ட கொஞ்சம்கூட பந்தா காட்ட மாட்டார். தன்னோட ஷாட் முடிஞ்சதுன்னா, சட்டையைக் கழற்றிப் போட்டுட்டு பக்கத்து வீட்டு திண்ணையில படுத்துத் தூங்கிடுவார்.  

என் ஊர் : நாமக்கல்

நாமக்கல்ல இருந்து அரை மணி நேரப் பயணத்துல மோகனூர் இருக்குது. காவிரி தவழுற இந்த மண்ணுல வெற்றிலை விவசாயம் கொடிகட்டிப் பறக்கும். ஆத்துல குளிக்கிறதுக்காகவே இளவட்டப் பசங்க வண்டி கட்டிப் போவோம். நாமக்கல்லைப் பற்றிப் பேசுறப்ப கோழிப் பண்ணையையும் அனுமாரையும் மறக்கக் கூடாது. பத்துப் பைசாவுக்குக் கிடைக்கிற முட்டையை வாங்கி அங்கேயே

என் ஊர் : நாமக்கல்

உடைச்சு வாயில ஊத்திக்கிட்டு, உடற்பயிற்சி செய்வோம். 'நம்ம ஊரு அனுமார் வளர்ந்துட்டே இருக்கார். அதனாலதான் அவரு தலைக்கு மேலே ரூஃப் போடல’னு பேசிக்குவாங்க. அனுமாரோட வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஒரு கடப்பாரையை தலை உச்சியில அடிச்சுவெச்சிருக்காங்கனு சொல்வாங்க. அது உண்மைன்னு நம்பித் திரிஞ்ச நாட்களும் உண்டு.

மிகச் சிறந்த ஓவியரான சில்பி, எங்க ஊர்க்காரர்தான். அவருக்கு உதவியாளராவும் நான் இருந்து இருக்கேன். ஓவியப் படிப்பை முடிச்சுட்டு நாமக்கல்ல ஒரு ஆர்டிஸ்ட்கிட்ட வேலைக்குச் சேர்ந்தேன். அவர் எனக் குக் கொடுத்த முதல் வேலை, சுவத்துல ஒட்டி இருக்கிற போஸ்டர்களைக் கிழிக்கிறதும், பெயின்ட் வாளிகளைத் தூக்கிக்கிட்டு நிக்கிறதும்தான். நாமக்கல் சாந்தி தியேட்டர்ல 'சகலகலா வல்லவன்’ ரிலீஸ் ஆனப்ப, முதல் முறையா 60 அடிக்கு கமல்ஹாசன் கட்-அவுட் வரைஞ்சுவைக்கிற ஆர்டர் எனக்குக் கிடைச்சுது. நாமக்கல்லுக்கு அப்ப அந்தப் பிரமாண்டம் ரொம்பப் புதுசு. இன்னைக்குப் பல விருது ஓவியங்களைக் கடந்து வந்துட்டாலும்கூட, கஷ்டப்பட்டு வரைஞ்ச அந்த கட்-அவுட்களை மறக்க முடியலை!''

- எஸ்.ஷக்தி
படங்கள்: மகா.தமிழ்பிரபாகரன்

அடுத்த கட்டுரைக்கு