Published:Updated:

எதற்குப் பயம் ஹெச்.ஐ.வி-யைக் கண்டு?

எதற்குப் பயம் ஹெச்.ஐ.வி-யைக் கண்டு?

##~##

சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடுமாம். அப்படி எனில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்களை நகர்த்துவது எப்படி?

 ''அது ஒண்ணும் சிரமம் இல்லைங்க. தினமும் வெந்து புழுங்கி, தற்கொலை செய்துகொள்கிற காலம் மாறிப்போச்சு. இப்போ ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பலரும் மற்ற மனிதர்கள் போலவே சந்தோஷமா வாழ்றாங்க''- வெகு இயல்பாகப் பேசுகிறார் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த இமானுவேல். இவரும், இவருடைய மனைவி மற்றும் ஒரு குழந்தையும் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களே!

''என்னோட வாலிப வயசுல தவறான வழியில் போனதால வந்த விளைவு இது. இதனால என் மனைவியும் என் இரண்டாவது குழந்தையும் பாதிக்கப் பட்டாங்க. எந்தப் பாவமும் அறியாத என் குழந்தைக்கும் இந்த நோய் வந்ததை என்னால ஜீரணிக்க முடியலை. விஷம் குடிச்சு தற்கொலைக்கு முயன்றேன். ஆனா, காப்பாத்திட்டாங்க. தொடர்ந்து, நிறைய விழிப்பு உணர்வுக் கூட்டங்களுக்குப் போய், அவங்க சொல்ற அறிவுரைகளைக் கேட்டப்ப எனக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுச்சு. என்னை மாதிரியே நிறையப் பேர் பாதிக்கப்பட்டு மன உளைச்சலோட தவிக்கிறாங்கனு தெரிஞ்சு, எல்லாரையும் காப்பாத்தணும்னு தோணுச்சு. 'நாமக்கல் ஹெச்.ஐ.வி. நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்’னு ஒரு அமைப்பைத் தொடங்கி, அது மூலமா இப்போ பாதிக்கப்பட்ட பல பேருக்கு கவுன்சிலிங் கொடுத்துட்டு வர்றோம்.  

எதற்குப் பயம் ஹெச்.ஐ.வி-யைக் கண்டு?

கொல்லிமலை பக்கத்துல உள்ள  சோளக்காடுங்கிற கிராமத்துல ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணுக்கும் அவரோட ரெண்டு வயசு குழந்தைக்கும் விலங்கு போட்டு ஊருக்கு வெளியே ஒரு குடிசையில தங்கவெச்சு இருந்தாங்க. இதைக் கேள்விப்பட்டு தாயையும் சேயையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம். அவங்க இப்போ நல்லா இருக்காங்க'' என்கிறார் திருப்தியுடன்!

இதே தளத்தில் இயங்கிவருபவர் செல்வி. இவரும் நாமக்கல்லைச் சேர்ந்தவர்தான். ''என் வீட்டுக்காரர் லாரி டிரைவர். அவரோட முதல் மனைவி என் அக்கா. அவங்க இறந்துட்டதால ரெண்டு பொம்பளைப் புள்ளைங்களைப் பார்த்துக்கிறதுக்காக மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஒருகட்டத்துல என் மாமாவுக்கு ஹெச்.ஐ.வி. இருக்குமோனு சந்தேகம் வந்த தால் சென்னைக்குப் போய் சோதனை செய்தோம். சந்தேகப்பட்டபடியே அவருக்கு ஹெச்.ஐ.வி. இருந்துச்சு; எனக்கு இல்லை. ரெண்டு பேருக்கும் கவுன்சிலிங் கொடுத்தவங்க, 'நீங்க அவரோட வாழ வேணாம். உங்க அம்மா வீட்டுக்குப் போயிடுங்க’னு சொன்னாங்க. வீட்டுக்கு வர்ற வரைக்கும் பயங்கரக் குழப்பம். இவரைக் கட்டிக்கிட்டதே அக்கா குழந்தைகளைப் பாதுகாக்கத்தான். என்ன நடந்தாலும் சரி... குழந்தைகளையும் மாமாவையும் பிரியறது

எதற்குப் பயம் ஹெச்.ஐ.வி-யைக் கண்டு?

இல்லைனு முடிவு பண்ணினேன். 'நீ, உன் வீட்டுக்குப் போயிடு. உனக்கும் இந்த வியாதி வந்துடப் போகுது’னு மாமா எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனா, நான் என் முடிவுல இருந்து பின்வாங்கலை.

எங்களுக்கும் ஒரு வாரிசு வேணும்னு மாமாவை வற்புறுத்திக் குழந்தை பெத்துக்கிட்டேன். இப்ப எனக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருக்குது. ஆனா, என் வயித்துல உருவான குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு வராமப் பார்த்துக்கிட்டேன். டாக்டரோட கண்காணிப்பிலேயே கரு வளர்ந்தது. குழந்தை பிறந்த மூணு மணி நேரத்துக்குள்ள 'நெவ்ரோபைன்’ சிரப் கொடுத்தால் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பரவாது. அதுக்கு அப்புறம் ஹெச்.ஐ.வி. பற்றி முழு விவரங்களையும் தெரிஞ்சுக்கிட்டு, அதை வீட்டுலயும் சொந்தக்காரங்ககிட்டயும் சொன்னேன். இதனால, எங்க வீட்டுலயும் சரி... ஊர்லயும் சரி... எங்ககிட்ட எந்தப் பாகுபாடும் காட்டுறது இல்லை. எங்களை மாதிரி பாதிக்கப்பட்டவங்களை உடல்ரீதியாவும் மனரீதியாவும் மீட்டு எடுக்க, நானும் என் மாமாவும் சேர்ந்து 'தீபம்’ அறக்கட்டளையைத் தொடங்கினோம். அதன் மூலம், ஹெச்.ஐ.வி. உள்ளவர்களுக்கு நிறைய விஷயங்களில் உதவுறோம்.

ஹெச்.ஐ.வி-ங்கிறது எய்ட்ஸின் ஆரம்ப நிலை. இந்த நிலையில உடலை முழுப் பரிசோதனை செஞ்சு, ஊட்டச் சத்துள்ள உணவுகளைச் சாப் பிடணும். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் 500-க்குக் குறையாமப் பார்த்துக்கணும். தினமும் இரண்டுவேளை ஏ.ஆர்.டி. மாத்திரை எடுத்துக்கணும். இப்படி இருந்தா வாழ்நாள் முழுசும் ஆரோக்கியமா வாழலாம். சமூகத்துக்காக நாமும் நமக்காக சமூகமும் அக்கறை எடுத்துக்கிட்டா மட்டுமே எந்த ஒரு மனுஷனும் சுதந்திரமா வாழ முடியும்...'' என்கிறார் திடமாக!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்

அடுத்த கட்டுரைக்கு