Published:Updated:

இது அரண்மனை கிராமம்!

இது அரண்மனை கிராமம்!

##~##

'நான் பிறந்த அழகிய கிராமமான, ஊட்டி அருகே இருக்கும் ஃபெர்ன் ஹில் கிராமத்தைப் பற்றியும் அங்கு இருந்த அரண்மனைகளின் சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றியும் 'என் விகடனி’ல் பதிவு செய்யுங்களேன்...'' என்று வாய்ஸ் ஸ்நாப்பில் வேண்டுகோள் விடுத்திருந்தார், கோவை ஆர்.எஸ்.புரத்தில் எல்.ஐ.சி. அதிகாரியாகப் பணிபுரியும் சுப்ரமணி.

 அவருடனே ஊட்டிக்குப் பயணித்தோம். கான்க்ரீட் கட்டடங்களும் போக்குவரத்து நெரிசலுமான ஊட்டியில் இருந்து மூன்று கி.மீ. தூரத்தில் இருக்கிறது ஃபெர்ன் ஹில். 'ஃபெர்ன்’ என்பது ஆங்கிலேயர் காலத்தில் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒருவகை அலங்காரச் செடியின் இலை. இங்கு அந்தச் செடிகள் அதிகம் இருந்ததால், அந்தப் பெயரே கிராமத் துக்கு நிலைத்துவிட்டது என்கிறார்கள். ஊட்டியின் நெரிசலுக்கும் பரபரப்புக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் மிக அமைதியாக... எங்கு பார்த்தாலும் பசுமைக் கம்பளம் விரித்து வசீகரிக்கிறது ஃபெர்ன் ஹில். ஊரின் பூர்வகுடிகளான தோடர்களும் மற்றவர்களும் விவசாயம் செய்கிறார்கள்.

இது அரண்மனை கிராமம்!

ஆங்கிலேயரின் சுயநலத்தால் ஊட்டி முழுவதும் தேயிலை என்கிற பணப் பயிரால் ஆக்ரமிக்கப்பட்டுவிட்டாலும் இங்கு மட்டும் தேயிலை விவசாயம் இல்லை. அப்போதே அதை ஏற்க மறுத்துவிட்டார்களாம் இந்தப் புத்திசாலி பூர்வக்குடிகள். ஊர் எங்கும் காலி ஃப்ளவர், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக் கிழங்கு என உணவுப் பயிர்கள் விளைகின்றன.

ஊரைச் சுற்றிக் காட்டியபடியே பேசினார் சுப்ரமணி.  ''அரண்மனைகளுக்குப் பெயர் பெற்றது இந்தக் கிராமம். இதோ இந்த அரண்மனை மைசூர் மகாராஜா குடும்பத்துக்குச் சொந்தமானது. மன்னர் குடும்பத்தினரே இந்த அரண்மனையில் சில மாற்றங்கள் செய்து ரிசார்ட்ஸ் ஆக்கிவிட்டனர். இந்த அரண்மனையின் முகப்பில்தான் ஊட்டியில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் செல்லும் குகை இருக்கிறது. கோடைக் காலத்தில் மைசூர் மகாராஜா இந்த அரண்மனையில்தான் தங்கி இருப்பார். அவர் மைசூரில் இருந்து இங்கு வருவதற்காகவே இங்கு ஒரு ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. அழகான அந்த ரயில் நிலையம் இப்போது ரயில்வே கெஸ்ட் ஹவுஸ் ஆகிவிட்டது.

அரண்மனை அருகே உள்ள சிறு பள்ளத்தாக்கில் பவானி கால்வாய் ஓடுகிறது. இதன் கரையில் அமைந்துள்ள பவானீஸ்வரர் கோயிலுக்கு வரும் மன்னர், பயபக்தியுடன் வழிபடுவார். திருவாதிரை திருவிழாவின்போது இங்கு தேரோட்டம் நடக்கும். அந்தக் காலத்தில் தேரை இழுத்து வர மாட்டார்கள். தோடர்கள் இந்தக் கோயிலில் இருந்து தேரைத் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு ஊட்டி வரை ஊர்வலமாகச் சென்று திரும்புவர். பின்னர் தேரை அரண்மனையில்  வைத்து, மீண்டும் கோயிலுக்குக் கொண்டுசெல்வர். 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேரைத் தோளில் தூக்கும் வழக்கம் இருந்தது. இப்போதுதான் தேரை இழுத்துச் செல்கின்றனர்.

இது அரண்மனை கிராமம்!

இந்த அரண்மனைக்கு அருகிலேயே ஹைதராபாத் நிஜாமுக்குச் சொந்தமான அரண்மனை ஒன்று இருந்தது. பலருடைய கைகளுக்கும் மாறிய அது, இப்போது தனியார் ஹோட்டல் ஆகிவிட்டது. இதற்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு அரண்மனை, பரோடா மன்னர் குடும்பத்துக்குச் சொந்தமானது. இதையும் மாற்றங்கள் செய்து, தனியார் பள்ளி மற்றும் ரிசார்ட்ஸ் ஆக்கிவிட்டார்கள். இதற்கு அருகில் கொல்லங்கோடு ராணிக்குச் சொந்தமான குட்டி அரண்மனை இருந்தது. அந்த அரண்மனையை இடித்து, குடியிருப்புகளாக மாற்றிவிட்டார்கள்.

மன்னர்கள் காலத்தில் கிராமம் எப்போதும் செழிப்பாக இருக்கும். மன்னர்களும் அவர்களுடைய உறவினர்களும் வருவதும் போவதுமாக இருப்பார்கள். வழியில் விவசாயிகள் அவர்கள் முன்பு தங்கள் குறைகளைச் சொல்வார்கள். மன்னர் குடும்பத்தினரும் கிணறு வெட்டுவது, போக்குவரத்து வசதி செய்வது, சாலைகள் அமைப்பது, ஏழைகளுக்குப் பொருள் உதவி செய்வது என்று உதவிகள் செய்வார்கள். மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டதற்குப் பின்பு மன்னர்களின் வருகை படிப்படியாகக் குறைந்து இப்போது அறவே நின்றுவிட்டது. ஆனாலும், இந்தக் கிராமத்தின் அழகும் அமைதியும் இப்போதும் அப்படியே இருக்கிறது...'' - ஊரைப் போலவே அழகாகப் பேசுகிறார் சுப்ரமணி!

- எஸ்.எம்.காவியபாரதி
படங்கள்: வி.ராஜேஷ்  

அடுத்த கட்டுரைக்கு