Published:Updated:

கார் தெரியும்... மரம் தெரியுமா?

கார் தெரியும்... மரம் தெரியுமா?

##~##

னை மரக் குருத்து, குருத்தோலை, பச்சை ஓலை, காவோலை, பனை ஈக்கு, பனம் மட்டை, கருக்கு மட்டை, பன்னாடை, பாளை, பதநீர், கள், வினாகிரி, பனஞ்சாராயம், நுங்கு, பனம் பழம், பனம் விதை, பூரான், பனங்கிழங்கு, ஒடியல், புளுக் கொடியல், ஊமல் கொட்டை, அடிமரம், சோத்தி, தவுண்... இவை எல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா?

 பனை மரத்தில் இருந்து நமக்குக் கிடைக்கும் பொருள்கள்தான் இவை. இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான மரங்கள் பற்றி ஆச்சர்யமான பல விஷயங்களை எடுத்துக் கூறுகிறது 'மதுரை உயர் நீதிமன்ற மரங்களும் சூழலும்’ என்ற புத்தகம்!

புத்தகத்தின் ஆசிரியர்கள் தி.லஜபதி ராய் மற்றும் கா.பிரபு ராஜதுரை. இருவருமே மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள். சுற்றுச் சூழல் தொடர்பான வழக்குகளை எடுத்து நடத்துவதில் குறிப்பிடத்தக்கவர்கள்.  

கார் தெரியும்... மரம் தெரியுமா?

''மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருப்பது போன்ற மரங்களோ, பறவைக் கூட்டங்களோ தமிழகத்தின் மற்ற நீதிமன்ற வளாகங்களில் இருக்குமா என்பது சந்தேகம்தான். நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழத் தோட்டங்களில் மயில்கள் நிறைய நடமாடும். இங்கு உள்ள மலர்களின் மீது வந்து அமரும் பட்டாம்பூச்சிகளைப் பார்க்கும்போது, 'இவற்றை எல்லாம் ஆவணப்படுத்தினால் என்ன?’ என்கிற யோசனை வந்தது. நண்பர் பிரபுவுக்கும் இதில் ஆர்வம் இருந்ததால் உடனே களத்தில் இறங்கிவிட்டோம்.

2011 ஜூன் முதல் 2012 ஜனவரி மாதம் வரை சுமார் எட்டு மாதங்கள் உழைத்தோம். 107 ஏக்கர் பரப்பில் விரிந்திருக்கிறது மதுரை உயர் நீதிமன்ற வளாகம். மரங்கள், மலர்கள், பறவைகள், பூச்சிகள் என நான்கு தலைப்புகளில் இங்கு உள்ள உயிரினங்களைப் பதிவுசெய்து இருக்கிறோம். நீதிமன்ற விடுமுறை நாட்களில் நாங்கள் இங்கே வருவோம். நிக்கான் டி.எஸ்.எல்.ஆர். வகை கேமராவைக்கொண்டு நாங்களே புகைப்படங்களும் எடுத்தோம். மரங்களை வழக்குப் பெயர்களோடு அவற்றின் தாவரவியல் பெயர்களையும் சேர்த்துப் பதிவுசெய்ய வேண்டும் என்று யோசித்தபோது, அதற்கு 'பி.என்.ஹெச்.எஸ்.’ எனும் 'மும்பை இயற்கை வரலாற்றுக் கழகம்’ வெளியிட்ட மரங்கள் தொடர்பான புத்தகங்கள் உதவின'' என்கிற லஜபதி ராயைத் தொடர்கிறார் பிரபு ராஜதுரை.

கார் தெரியும்... மரம் தெரியுமா?

''வனத் துறையில் பணியாற்றும் பளியர் இன நபர் ஒருவர், புத்தகப் பணியில் எங்களுக்கு உதவினார். மரங்களுக்கு அவர் சொல்கிற பெயர்களும், அவற்றின் தாவரவியல் பெயர்களும் பெரும்பாலும் ஒரே மாதிரி இருந்தன. பழங்குடியினருக்கு இயற்கையின் மீது உள்ள ஈடுபாட்டையும் அவர்களுடைய இயற்கை சார்ந்த அறிவையும் இந்தப் புத்தக உருவாக்கத்தின்போது புரிந்துகொண்டோம்.

கார் தெரியும்... மரம் தெரியுமா?

மிழகத்தில் 'ஆவணப்படுத்துதல்’ என்கிற விஷயம் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதே இல்லை. இதனால், வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய பல தகவல்களை இழக்க நேரிடுகிறது. இதன் மூலம் நமக்குக் கிடைக்க வேண்டிய துறை சார்ந்த அறிவையும் இழக்க வேண்டி உள்ளது. இந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள  மரங்கள், பறவைகள் பற்றிய தகவல்களும் அப்படிப் போய்விடக் கூடாது. இவற்றை நாம் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற உந்துதலால் உருவானதுதான் இந்தப் புத்தகம். 'இன்றைய இளைஞர்களுக்கு கார்களுடைய பெயர்களைத் தெரிந்த அளவுக்கு, நம் மரங்களுடைய பெயர்கள் தெரியாது’ என்று எங்கள் நண்பர் ஒருமுறை சொன்னார். அந்தக் குறையை நிவர்த்தி செய்ய எங்களால் முடிந்த சிறு பங்களிப்பைச் செய்து இருக்கிறோம்!''- சந்தோஷமாக விடை கொடுக் கிறார்கள் இருவரும்.

- ந.வினோத்குமார்
படம்: பா.காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு