Published:Updated:

என் ஊர் : மேலப்புதூர்

ஆயிரம் இட்லி அவிச்சுச் சாப்பிடுவோம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

டிகர் என்பதையும் தாண்டி, கதை ஆசிரியர், வாசனகர்த்தா எனத் திரைப் படத் துறையின் பல தளங்களிலும் இயங்குபவர்  வினுச்சக்ரவர்த்தி. இவர் தன்னுடைய சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உள்ள மேலப்புதூர் கிராமம் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

 'மேலப்புதூரைப் பற்றி நெனைச்சாலே எனக்கு எங்க தாத்தா பெரிய மாயத்தேவர்தான் முதல்ல ஞாபகத்துக்கு வருவாரு. இன்னைக்கு நான் இந்த இடத்துல பேரும் புகழுமா இருக்கிறதுக்கு அவர்தான் காரணம். எனக்கு மொத்தம் 13 சித்தப்பாக்கள். அவங்க எல்லாருக்கும் பொறந்த என் தம்பி, தங்கைகள் மொத்தம் 45 பேர். நாங்க எல்லாரும் ஒத்துமையா ஒரே வீட்டுலதான் இருந்தோம். நாளு கிழமைனாதான் எங்க வீட்டுல இட்லி சுடுவாங்க. எப்படியும் 1,000 இட்லி சுட்டாதான் சரியா இருக்கும். ஊர்லேயே பெரிய

என் ஊர் : மேலப்புதூர்

குடும்பம் எங்களுதுதான்.

எங்க ஊரு ஒரு கரிசல்பூமி. எப்போவாச்சும் மழை பெய்யும். அப்படிப் பெய்யும்போது வர்ற மண்வாசனை... பாறைகள் மேல மழைத் துளி பட்டு ஆவியோட கலந்துவரும் வித்தியாசமான ஒரு வாசனை... கொடைக்கானல் போகுற வழியில உள்ள கிராமங்கள்ல இருந்து வர்ற  சாராயம் காய்ச்சுற வாசனை... இப்படி, என் ஊர் சம்பந்தப்பட்ட எல்லா வாசனைகளும் என் மனசுல அப்படியே ஆழமாப் பதிஞ்சு இருக்கு. இதுல, கொடைக்கானல் வழியில சீதாப் பழம், கோவைப் பழம் எல்லாம் போட்டுத் தயாரிக்கிற ஆரோக்கிய சாராய வாசத்துக்கு வசப்பட்டே எங்க ஊர் தினமும் ராத்திரி சீக்கிரமாத் தூங்கிப்போகும்.

பசங்க எல்லாம் ஒண்ணுசேர்ந்து குளத்துல உழவு மீன் பிடிச்சு குழம்புவெச்சுத் தின்போம். இஸ்லாமிய நண்பர்களை 'சீயான் மச்சான்’, 'சீயான் மாமா’னு செல்லமாக் கூப்பிடுவோம். இப்போ தெருவுக்குத் தெரு மனுசங்க நாலாப் பிரிஞ்சு கிடக்குறாங்க.

கருமாத்தூர்ல உள்ள முனியாண்டவர்தான் எங்க குலதெய்வம். ஒவ்வொரு திருவிழாவுக்கும் கூட்டம் களைகட்டும். எங்களுக்கு மட்டுமில்லை எங்க பங்காளி முறை உள்ள நடிகர்கள், சங்கிலி முருகன், பெரிய கருப்பத்தேவர்னு பலருக்கும் அதுதான் குலசாமி. இப்பவும் வருஷா வருஷம் அந்தக் கோயில் திருவிழாவுல எல்லாரும் ஒண்ணுகூடி கொண்டாடுவோம்.

எங்க ஊரு, அருவா செய்றதுக்குப் பேர்போன ஊரு. அதுலயும் மான் கொம்புக் கைப்பிடி உள்ள அருவா ரொம்ப உசத்தி. மான் கொம்புகளோட வாடையைச் சகிச்சிக்கிட்டு அருவாளுக்குக் கைப்பிடி செய்றதுக்குத் தனித் திறமை வேணும். எனக்கு எங்க ஊர் அந்த அருவா வகைகளைச் செய்யக் கற்றுக்கொடுத்து இருக்கு. அதே மாதிரி மாமன், மச்சான்னு உறவு சொல்லி அன்பு செலுத்தவும் கற்றுக் கொடுத்திருக்கு.

என் ஊர் : மேலப்புதூர்

எங்க ஊர்ல இருந்த ரெண்டு மருத்துவச்சிகள்  இந்த சுத்துவட்டாரத்துல ரொம்பப் பிரபலம். கை, கால் முறிவுல இருந்து பிரசவம் வரைக்கும் எங்க ஊர்க்காரங்களுக்கு எல்லாமே அவங்கதான். அவங்களோட இந்தச் சேவைக்கு நாங்க தந்த காணிக்கை வெறுமனே அவங்க கால்ல விழுந்து கும்பிடறது மட்டும்தான். அவங்களும் எதையும் எதிர்பார்க்க மாட்டாங்க.

இன்னைக்கு நான் என்னோட சினிமா வாழ்க்கையிலயும் சரி, என்னோட தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி ஓரளவு பக்குவப்பட்டிருக்க என் ஊர்தான் காரணம். மேலப்புதூருக்கு கோடானு கோடி நன்றி!''

- உ.அருண்குமார்
படங்கள்: பொன்.காசிராஜன், வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு