Published:Updated:

லட்டு கர்ணன்... ஹிட்டு கோச்சடையான்!

மதுரை ரசிகர்கள் கொண்டாட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

ந்த வாரம் மதுரையை இரண்டு விதமான ரசிகர்கள் கலக்கி எடுத்தார்கள். ஒரு குரூப் சிவாஜி ரசிகர்கள். இன்னொன்று ரஜினி ரசிகர்கள்.

 'கர்ணன்’ படத்தைப் புதுப்பொலிவுடன் மாற்றி ரிலீஸ் தேதி அறிவித்து இருந்தார்கள். கடந்த வாரம் அகன்ற திரையில் டி.டி.எஸ். எஃபெக்ட்டில் மறு பிரசவமானார் மார்டன் கர்ணன். ''தலைவர் படத்துக்கு என்ன ரெஸ்பான்ஸுன்னு பார்க்க கிளம்பி வாங்க'' என்று வாய்ஸ் ஸ்நாப்பில் அழைத்து இருந்தார் சிவாஜி ரசிகர் நாகராஜன். திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகள்தான். செல்லூர் சரஸ்வதி தியேட்டரில் முதல் நாளன்று காலைக் காட்சி இல்லை என்று சொல்ல, ரசிகர்களுக்குச் சற்றே ஏமாற்றம்.

லட்டு கர்ணன்... ஹிட்டு கோச்சடையான்!

சிவாஜி மதுரைப் பக்கம் வந்தால் பரவையைச் சேர்ந்த பூச்சம்மாள் என்பவருடைய கையால் சாப்பிடாமல் போனது இல்லையாம். அவருடைய மீன் குழம்பு சாப்பாட்டுக்கு, சிவாஜி தீவிர ரசிகர் என்பார்கள். பூச்சம்மாளை, ''என் கூடப் பிறக்காத தங்கை'' என்பார் சிவாஜி. அந்த அன்புத் தங்கையும் அன்றைக்கு அண்ணன் படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக வந்திருந்தார். காலைக் காட்சி இல்லை என்றதுமே கடுப்பாகிப் போனவர், ''இப்பப் படத்தைப் போடலைன்னா கொன்டே புடுவேன்'' என்று அண்ணன் ரசிகர்களுக்கு மத்தியில் நின்று ஆர்ப்பரித்தார். ரசிகர்களின் ஆர்வத்தைப்(!) புரிந்துகொண்டு காலைக் காட்சிக்கு தியேட்டர் நிர்வாகம் தலை அசைக்க, தியேட்டர் வாசலிலேயே சிவாஜி பேனருக்குப் பாலாபிஷேகம் செய்து மாலை எல்லாம் போட்டு சூடம் கொளுத்தினார்கள். சாக்லேட் கொடுத்து அத்தனை பேரையும் இனிக்க இனிக்க தியேட்டருக்குள் அனுப்பினார் பூச்சம்மாள்.

ஞாயிற்றுக்கிழமை மாலை காட்சிக்கு மூன்று தியேட்டர்களுமே ஹவுஸ் ஃபுல் ஆகிப் போயின. படம் பார்க்க வந்தவர்களுக்கு டிக் கெட்டுடன் சேர்த்து லட்டும் கொடுத்தார்கள். தியேட்டர்களின் வாசலில் கேசரியும் புளியோதரையும் கமகமத்தன. மதுரை மட்டுமல்ல; தென் மாவட்டங்களில் பல இடங்களில் ஹை-டெக் கர்ணனுக்கு செம ரெஸ்பான்ஸ். மதுரை மதி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்த சிவாஜி - காமராஜ் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ரமேஷ் பாபுவும் செயலாளர் சுந்தர்ராஜனும் நம்மிடம் பேசினார்கள். பேசும்போதே பெருமிதம் ததும்பியது. ''சென்னையில் 10 தியேட்டர்கள்ல டி.டி.எஸ். கர்ணனை ரிலீஸ் பண்ணி, மூணு நாளில் ஒரு கோடி ரூபாய் கலெக்ஷன் செய்திருக்காங்க. மதுரையிலயும் எத்தனையோ வருஷத்துக்குப் பிறகு ஹவுஸ் ஃபுல் போர்டுகளைத் தேடிக் கண்டுபிடிச்சுக் கொண்டாந்து மாட்டவெச்சிருக்கு இந்தப் படம். தலைவர் நடித்த 'வசந்தமாளிகை’, 'சிவந்த மண்’ படங்களையும் டி.டி.எஸ். எஃபெக்ட்டில் எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்காங்க. அவரோட அத்தனை படங்களையும் டி.டி.எஸ். செய்து வெளியிடணும்'' என்றார்கள் சிவாஜி போலவே உணர்ச்சிப் பெருக்குடன்.

இன்னொரு புறம் தங்கள் தலைவர் நடிக்கும் 'கோச்சடையான்’ படம் வெற்றி பெறுவதற்காகத் தங்கத் தேர் இழுக்கக் கிளம்பிவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள். ஃபீனிக்ஸ் பறவையைப் போலத்தான் ரஜினி ரசிகர்களும். வருஷக் கணக்கில் வாடினாலும், புதுப்பட அறிவிப்பு வந்ததும் புதுத்தெம்புடன் புறப்பட்டு வந்துவிடுவார்கள்.

லட்டு கர்ணன்... ஹிட்டு கோச்சடையான்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யானை, ஒட்டகங்கள் சகிதம் முரசு ஒலிக்க அமர்க்களமாக நடத்தப்பட்ட இந்தத் தங்கத் தேர் வைபவத்தில், ''வீ ஆர் ஆல்ஸோ சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ்'' என்றபடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கொடி பிடித்துப் போனார்கள்.

ரசிகர் மன்றத்தின் தலைவர் இளங்கோ மணி, ''தலைவர் 'ராணா’ பட பூஜைக்குப் போற சமயத்துலதான் உடம்புக்கு முடியாமப் போயிருச்சு. இப்ப 'கோச்சடையான்’ ஷூட்டிங்குக்காக லண்டன் போயிருக்காரு. அங்கே எந்தவிதத் தடங்கலும் இல்லாம நல்லபடியாப் படப்பிடிப்பை முடிச்சுத் திரும்பணும். அப்படியே, கூடிய சீக்கிரம் அரசியலுக்கு வந்து தாழ்ந்துகிடக்கும் தமிழகத்தைத் தலை நிமிரச் செய்யணும். இந்தப் பிரார்த்தனைகள் பலிக்கிறதுக்காகத்தான் அன்னை மீனாட்சிக்குத் தங்கத் தேர் இழுத்தோம்'' என்றார். மன்றத்தின் செயலாளர் கோபால கிருஷ்ணன், ''குருபெயர்ச்சி வரைக்கும் தலைவருக்குக் கிரக நிலை கடுமையா இருக்கு. இப்ப அவரு எதைச் சொன்னாலும் விவகாரமாகிடும்னு சொல்லியிருக்காங்க. அதனால, குரு பெயர்ச்சி முடிஞ்சதும் ரசிகர்களைச் சந்திக்கிறதாச் சொல்லி இருக்காரு. கூடிய சீக்கிரம் அவரிடம் இருந்து நல்ல சேதி வரும்னு எதிர்பார்த்திருக்கிறோம். பொண்ணோட கல்யாணத்துக்கு ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கிறதாச் சொல்லி இருந்தாரு. அது இன்னும் பெண்டிங்ல இருக்கு. அதையும் ஞாபகப்படுத்திடுங்க தலைவா!'' என்றார்.

இப்போது தெரிகிறதா ரஜினி என்றுமே சூப்பர் ஸ்டாராகவே இருப்பதன் ரகசியம்?

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  பா.காளிமுத்து  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு