Published:Updated:

சாய்பாபா மறைவு: தேசத் தலைவர்கள் இரங்கல்

Vikatan Correspondent

புதுடெல்லி, ஏப்.25,2011

ஸ்ரீ சாய்பாபா மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைலவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ##~~##

குடியரசுத் துணைத் தலைவர் அன்சாரி:

"சாய்பாபாவின் வார்த்தைகளும் நடவடிக்கைகளும் பக்தர்களின் இதயங்களில் அன்பு ஒளியை ஏற்றி வைத்தன. மனிதனுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை என்ற அவருடைய செய்தியின் மூலமாக குறுகிய சிந்தனை அழிந்து போகிறது.

தற்போதைய தருணத்தில் அவருடைய அன்பு செய்தியே வழிகாட்டும் ஒளியாக இருக்கிறது. அவருடைய மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது."

பிரதமர் மன்மோகன் சிங்

"சத்ய சாய்பாபா மறைந்த செய்தியை அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். கோடிக்கணக்கான மக்களை அர்த்தமுள்ள வாழ்க்கையில் திருப்பிய ஆன்மிக தலைவராக திகழ்ந்தார். உண்மை, நன்னடத்தை, அன்பு, அமைதி, அகிம்சை ஆகிய உலகளாவிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு அவருடைய போதனைகள் அமைந்தன.

அவருடைய மறைவால் தேசமே ஆழ்ந்த வேதனை அடைகிறது. கோடிக்கணக்கான சாய்பாபா பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி:

"பா மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனைப்பட்டேன். கோடிக்கணக்கான பக்தர்களை ஆன்மிகரீதியில் இணைத்தவர் அவர். உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் உள்ளவர்களை மதம், ஆன்மிகத் துறையில் ஈர்த்தவர். அவர் பல்வேறு அமைப்புகளை நிறுவி சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். அந்தப் பணிகள் காலம்காலமாக அவர் பெயர் சொல்லும் வகையில் இருக்கும்."

பிஜேபி மூத்த தலைவர் அத்வானி"

"ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், தயானந்தர், மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கைகள் நவீன காலத்துக்கு ஏற்றவாறு வகுத்து அளித்தவர். தற்கால இந்தியாவின் ஆன்மிக துறையில் முக்கிய பங்கு வகித்தவர்.

1975-ம் ஆண்டு நெருக்கடி நிலையில் பெங்களூர் சிறையில் இருந்தேன். அங்கிருந்து விடுதலையானபோது அவருடன் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அதன் பிறகு, அடிக்கடி எனது குடும்பத்தினருடன் அவரை தரிசித்து வந்தேன். சில மாதங்களுக்கு முன்பு கூட, புட்டபர்த்திக்கு குடும்பத்துடன் சென்று அவரை தரிசித்தேன்."

பிஜேபி தலைவர் நிதின் கட்காரி:

"ஆன்மிக உலகில் இருந்து கலாசாரம் மற்றும் சமூக ரீதியாக சர்வதேச அளவில் புகழ் பெற்ற சாய்பாபா மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய இழப்பை நீண்ட காலத்துக்கு ஈடு செய்ய முடியாது."

இதேபோல மத்திய அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா, மக்களவைத் தலைவர் மீராகுமார், டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் கருணாநிதி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பஞ்சாப் ஆளுநர் சிவராஜ் பாட்டீல், ஆந்திர மாநில ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மன் உள்பட தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.