Published:Updated:

வித்தியாச வித்வான்!

##~##

மிழனின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான தவில் வாசித்தலில் பல புதுமைகளைச் சேர்த்துக் கலக்கிவருகிறார் பழநியைச் சேர்ந்த இரா.மாரிமுத்து. கட்டைக்கால்கள் மேல் நின்று தவில் வாசித்தல், தலையில் தீப்பந்தம் கட்டி தவில் வாசித்தல், வாகனத்தை இழுத்துக் கொண்டே தவில் வாசித்தல் என, இவர் செய்யும் ஒவ்வொன்றும் வித்தியாசமானது; வியக்கவைப்பது!

 'எனக்குத் தெரிஞ்சு ஏழு தலைமுறையா என் குடும்பம் தவில் வாசிக்குது. நான் ஏழாவது தலைமுறை. 10 வயசுலேர்ந்து நான் தவில் வாசிச்சிக்கிட்டு இருக்கேன். அந்தா இந்தானு 50 வயசு ஆயிடுச்சு. எங்க பரம்பரைக்கே இதைத் தவிர வேற எந்தத் தொழிலும் தெரியாது. 10 வருஷத்துக்கு முன்னாடி எப்பவும்போல வாசிச்சிக்கிட்டு இருந்தேன்.  ஒரே வேலையை ஒரே மாதிரி எத்தனை வருஷம்தான் பண்றது? அதனால ஏதாவது புதுசா பண்ணணும்னு முடிவு செஞ்சேன். அந்த உந்துதல்லதான் கட்டைக் கால்கள் மேல ஏறி நின்னு தவில் வாசிக்கப் பயிற்சி எடுத்தேன்.

வித்தியாச வித்வான்!

முதல்ல மூன்றரை அடி உயரமுள்ள கட்டைகளைத் தயார் செஞ்சு, அது மேல ஏறி நின்னு தவில் வாசிக்கப் பழகினேன்.  ஆரம்பத்துல கால் ரெண்டும் பயங்கரமா வலிச்சுது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாப் பழகிட்டேன். இப்ப நாள் முழுக்கவே கட்டைக் கால் மேல நின்னு தவில் வாசிக்கமுடியும். அடுத்ததாக் கட்டைக் கால்கள் மேல நின்னுக்கிட்டே தலையில தீப்பந்தத்தையும் கட்டிக்கிட்டு தவில் வாசிக்க ஆரம்பிச்சேன். வாழை மரத்தின் அடிப்பாகத்தை வெட்டி, கொஞ்சம் பதப்படுத்தி அதைத் தலையில கட்டிக்கிட்டு கொளுத்திவிட்டா சூடு இறங்காது. என்ன... எந்தப் பக்கமும் சாயாம, பேலன்ஸ் பண்ணி தவில் வாசிக்கணும்.

அதுக்கப்புறம் ஒருதடவை  தலையில் மினி ஆட்டோவைக் கட்டி இழுத்துக்கிட்டே தவில் வாசிக்க முயற்சி செஞ்சேன். முதல்ல இழுக்க முடியலை. அப்புறம் தம் கட்டி 100 மீ. வரைக்கும் நடந்துக்கிட்டே வாசிச்சிட்டேன். தேங்காய் சிரட்டையைவெச்சு தப்பு, முரசு, டோலக் மாதிரியான இசைக் கருவிகளைச் செய்ய கத்துக்கிட்டேன். அதோட தொடர்ச்சியா சமீபத்துல ரெண்டே அடியுள்ள நாகஸ்வரத்தையும் உருவாக்கி இருக்கேன்.

வித்தியாச வித்வான்!

அடுத்ததா ஸ்கேட்டிங் செஞ்சுக்கிட்டே தவில் வாசிக்கவும், தலைகீழா தொங்கிக்கிட்டே தவில் வாசிக்கவும் பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கேன். இதுவரைக்கும் 'கலைச்சுடர் மணி’ போன்ற பல விருதுகள் எனக்குக் கிடைச்சு இருக்கு. இதன் மூலமா என் விசிட்டிங் கார்டு நெறைஞ்ச அளவுக்கு என் குடும்பத்தோட வயிறு நெறையலை. எனக்கு நாலு பசங்க. நாலு பேரையுமே படிக்கவெச்சுக்கிட்டு இருக்கேன். ஆனால், எனக்குக் கிடைக்கிற சொற்ப வருமானத்துல சமாளிக்க முடியலை. எனக்குக் 'கலைமாமணி’ விருது கிடைக்கலைங்கிற வருத்தம் இருக்கு. அதுக்காக அரசாங்கத்தோட கவனத்தை ஈர்க்கிற மாதிரி, ஒருமுறை பழநியில் இருந்து திண்டுக்கல் வரைக்கும் 60 கி.மீ. தூரத்தை தவில் வாசிச்சபடி கட்டைக் கால்கள்ல நடந்துபோய் கலெக்டர்கிட்ட மனு கொடுத்தேன். இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.

வறுமை என்னைத் தடுக்குதுதான். இருந்தாலும் அதை விரட்டியடிக்க புதுசு புதுசா ஏதாவது செஞ்சுக்கிட்டே இருக்கணும்னு போராடுறேன். கூடிய சீக்கிரமே வெளிச்சம் கிடைக்கும்னு நம்புறேன் சார்'  நம்பிக்கையோடுப் பேசுகிறார் மாரிமுத்து!

உ. அருண்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார்