Published:Updated:

வலையோசை : அங்கிங்கெனாதபடி

வலையோசை : அங்கிங்கெனாதபடி

வலையோசை : அங்கிங்கெனாதபடி

இறந்த பின் பெயர் அறிவித்தவன்!

வலையோசை : அங்கிங்கெனாதபடி

பிலிப் நோய்ரட் (Phileppe Noiret) இறந்துவிட்டார் என்ற செய்தி, எதேச்சையாக நேற்று இரவு செய்தித் தாளைப் புரட்டிய போது, கண்ணில்பட்டது. இவர் நடித்த இரண்டே படங்களைத்தான் நான் பார்த்து இருக்கிறேன். ஆனால், இரண்டுமே என்னை அழவைத்து, சிரிக்கவைத்து, கூடவே வாழவைத்து, முடிந்த பின்பும் மனதின் மூலையில் தங்கிவிட்ட படங்கள். அவை 'எல் போஸ்தினோ’ மற்றும் 'சினிமா பாரடைஸோ’ (El Postino and Cinema Paradiso). உண்மையைச் சொன்னால் நான் ரசித்த இந்த நடிகர்தான், பிலிப் நொய்ரட் என்பதே எனக்கு நேற்று செய்தித் தாளில் இவருடைய புகைப்படத்தைப் பார்த்தபோதுதான் தெரியும். என்னளவில் அவர் ஆல்ஃப்ரடோவாகவும் (சினிமா பாரடைஸோ) பாப்லோ நெரூடாவா (எல் போஸ்தினோ)கவுமே இருந்தார்.

சினிமா பாரடைஸோவில் பிலிப், ஆல்ஃப்ரடோ என்ற பாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருக்கும் டோடோ என்ற சிறுவனுக்குமான உறவே படத்தின் கரு. பிலிப் நோய்ரட் உலகம் முழுவதும் அறியப்பட்டது 1988-ல் சினிமா பாரடைஸோவில் நடித்த பின்புதான். இவரை உலக அளவில் அறியச் செய்த மற்றொரு படம், 'எல்போஸ்தினோ’. ஓர் இத்தாலிய கிராமத்தில் தபால்காரனாகப் பணிபுரியும் ஒருவனுக்கும் அவ்வூருக்கு வரும் கவிஞர் பாப்லோ நெரூடாவுக்குமான உறவைப் பற்றிய படம். பாப்லோ நெரூடாவாகப் பிலிப் நடித்து இருந்தார்!

காந்தி, கோட்சே கூட்டறிக்கை!

வலையோசை : அங்கிங்கெனாதபடி

காந்தி கொலை செய்யப்பட்டபோது நேரு கூறியதைப்போல, அவர் வாழ்ந்த வாழ்வின் தர்க்கப்பூர்வமான உச்சக் காட்சியாகவே (நீறீவீனீணீஜ்) அவருடைய மரணம் நிகழ்ந்தது. அவருடைய மரணமும்கூட ரொம்பவும் கம்பீரமாகத்தான் நிகழ்ந்தது. பலருக்கும் வாய்க்காத மரணமல்லவா அது! கடைசி ஆண்டுகளில் காந்தியும் கோட்ஸேவும் ஒரே திசையை நோக்கித்தான் நகர்ந்துகொண்டு இருந்தார்கள். கொலையை நோக்கி கோட்ஸேவும் கொலை செய்யப்படுதலை நோக்கி காந்தியும். தன்னுடைய முடிவைப் பற்றி அவர் அறிந்தே இருந்தார். முதல்நாள் மாலை உட்பட பலமுறை அவர் இதைச் சொல்லி இருந்தார். யாரோ சொன்னதுபோல, காந்தியின் கொலை என்பது காந்தியும் கோட்ஸேவும் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கை.

(-அ. மார்க்ஸ் எழுதிய 'காந்தியும் தமிழ் சனாதனிகளும்’ [எதிர் வெளியீடு] நூலின் முன்னுரையில் இருந்து...)

மரணம் கடந்துபோயிருந்தது!

வலையோசை : அங்கிங்கெனாதபடி

சார்லஸ் மாஸ்டரின் மரணம் நிகழும்போது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டு இருந்தேன். அந்த வருட ஆரம்பத்தில்தான் டியூஷனுக்குச் சேர்ந்தேன் அவரிடம். மூன்று, நான்கு மாதங்களில் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். கணிதத்தை மொழிபோலப் பாவிப்பவர். எத்தியோப்பிய அரசின் அழைப்பை ஏற்று அங்கு பல வருடம் பணிபுரிந்தவர். அவர் மகன் பிரேம்குமார் என் வகுப்புத் தோழன். சேர்ந்த சில நாட்களில் அவருக்கு நாக்கில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. ஓயாமல் புகைபிடிப்பார். மருத்துவர்கள் கூடாது எனச் சொன்னபோதும் கேட்கவில்லை. ஒன்பதாவது முடித்து விடுப்பில் இருந்தபோதுதான் அவருடைய மரணம் நிகழ்ந்தது. இறந்த மறுநாளே எனக்கு விஷயம் எட்டிவிட்டது. ஆனால், செல்ல முடியவில்லை. என்ன சொல்வேன், எப்படி எதிர்கொள்வேன் எனப் பெரும் தயக்கம். காரணமே இல்லாமல் எனக்குள் குற்ற உணர்வு. நாட்கள் செல்லச் செல்ல பார்க்கப் போகவில்லையே என்ற குற்ற உணர்வு வேறு சேர்ந்துகொள்ள, நரக வேதனை. 10 நாட்கள் கழித்து, இனி முடியாது எனத் துணிந்து சென்றேன். செல்லும் வழியெல்லாம், 'பிரேம் அழுதால் எப்படித் தேற்றுவது? நான் அழாமல் இருக்க என்ன செய்வது?’ என்றெல்லாம் யோசித்துக்கொண்டே சைக்கிளை ஓட்டினேன். தயக்கத்துடனே அழைப்பு மணியை அடிக்க, 'உள்ள வாடா' என்றான் பிரேம்.

'என்ன சாப்பிடற? அம்மா கடைக்குப் போயிருக்காங்க. டீ போடட்டா? இல்ல ரஸ்னா குடிக்கிறியா?'

இதை நான் எதிர்பார்க்கவில்லை. 'இல்ல பிரேம். அப்பா...' என இழுக்க, 'அதை விடு. முதல்லயே தெரிஞ்ச விஷயம்தான!' என்றான்.

காலங்களைக் கடந்து...

வலையோசை : அங்கிங்கெனாதபடி

''மக்களாட்சியின் அடிப்படைக் கருத்து, பதவி வகிப்பதிலும் மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டுவதிலும் அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பதுதான். முதல் பார்வைக்கு இது மகிழ்ச்சியான ஒரு ஏற்பாடாகத் தெரிகிறது. ஆனால், இது அழிவுப் பாதைக்கே இட்டுச்செல்லும். ஏனெனில், சிறந்த ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் அறிவார்ந்த முடிவுகளை எடுப்பதற்கும் மக்களுக்குச் சரியான முறையில் கற்பிக்கப்படவில்லை' -பிளேட்டோ சுமார் 2,400 வருடங்களுக்கு முன் கூறியது இது. கலர் டி.வி. வெர்சஸ் 4 கிராம் தங்கம், கிலோ 2 ரூபாய் அரிசி வெர்சஸ் 10 கிலோ இலவசம் என நீளும் இந்தத் தேர்தல் கூத்தைப் பார்க்கும்போது, வரலாறு அப்படி ஒன்றும் முடிந்துபோனவைகளின் தொகுப்பு அல்ல; நிகழ், எதிர்காலங்களுக்கான பாடப் புத்தகம் எனத் தோன்றுகிறது!

அடுத்த கட்டுரைக்கு