Published:Updated:

என் ஊர் : குந்தாணிமேடு

வளம் என்றால் மீன்கள் துள்ளும்; வற்றிவிட்டால் மேய்ச்சல் காடு!

##~##

''வயல்வெளியும் தென்னந்தோப்புகளும் சூழ்ந்த ஒரு பச்சைப் பசேல் கிராமம் குந்தாணிமேடு. நேர் கிழக்கில் உள்ள நெக்கனாமலையில்தான் எங்கள் ஊரின் சூரியோதயமும் சந்திரோதயமும் நிகழ்கின்றன. தெற்கே தூரத்தில் ஏலகிரி மலை தென்படும். மேற்கே துருகம் மலைத் தொடர், வடக்கே அருமா மலை (இங்குதான் பல்லவர் கால அரிய குகை ஓவியங்களுடன் சமணர் பள்ளி உள்ளது) என, மலைகளால் சூழப்பட்ட பெரும் நிலப் பகுதி எங்களுடையது'' - தன் ஊரின் இயற்கைப் பரப்பு பற்றிப் பேசும் ஸ்ரீநேசன், தமிழ் நவீனக் கவிஞர்களில் முக்கியமானவர்.

 ''வாணியம்பாடியில் இருந்து ஐந்து கி.மீ. பயணத்தில் குந்தாணிமேட்டுக்கு வந்துவிடலாம். ஊருக்கு மேற்புறத்தில் இருந்த பழைய ஏரி, சில நூற்றாண்டுகளுக்கு முன் உடைந்து போக, அந்த வெள்ளத்தில் மூழ்காதப் பகுதி, குந்தாணி வடிவத்தில் மேடாக நின்றதாம். அதுதான் குந்தாணிமேடு.

என் ஊர் : குந்தாணிமேடு

எங்கள் ஊருக்கு வருவோரை முகப்பிலேயே வரவேற்கிறது 1939-ல் நிறுவப்பட்ட தொடக்கப் பள்ளி. ஊருக்கு மேற்கே ஐந்து மதகுகளுடன் கரைகட்டுகிறது ஏரி. இதுதான் எங்கள் ஊருக்குப் பசுமை பூசுகிறது. பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, கால்வாய் வழியே ஏரிக்கு நீர் வந்துசேரும். இது பழைய கதை. ஏழு, எட்டு மாதங்கள் ஏரியில் நீர்த் தேங்கும். அந்தக் காலங்களில் மீனுக்குப் பஞ்சம் இருக்காது. ஏரியில் நீர் வற்றியவுடன் வயல்வெளிகள் மேய்ச்சல் காடாக மாறிவிடும். கோடை விடுமுறையில் மாடுகள் மேய்ப்பதோடு, வரப்பு எலிகளையும் மீன்களையும் பிடித்து சுட்டுத் தின்பதும் கிணறுகளில் குதித்து மகிழ்வதும் எங்களுடைய பொழுதுபோக்கு.

என் ஊர் : குந்தாணிமேடு

இப்படியாக, ஆண்டில் பாதியை ஈரமாகவும் மீதியை வறட்சியுடனும் கழிக்கும் எங்கள் மண், மனநிலைகளிலும் ஈரத்தையும் வெறுமையையும் உருவாக்கிவிடக்கூடியது. இந்த முரண் நிலையே என் கவித்துவத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கலாம். ஊரில் எனக்கு அதிகம் பிடித்த இடம், காற்றில் பனை ஓலை சலசலக்கும் ஏரிக்கரைதான். அங்குதான் என்னுடைய பல கவிதைகள் உருக்கொண்டு இருக்கின்றன.

ஊரில் பெரும்பாலானவர்களுக்கு வெட்டுவானம் எல்லையம்மன் குலதெய்வம் என்றால், இஷ்டதெய்வம் ஏரிக்கரை மாரியம்மன்தான். இந்தக் கோயிலில் நடக்கும் ஆடித் திருவிழாவின் போதும் பொங்கலுக்கும் வீட்டுக்குச் சுண்ணாம்பு அடிப்பார்கள். வெண்ணிற கோலத்தில் ஊரே புதுப் பொலிவுபெற்றுவிடும். மெழுகி செம்மண் பூசி கோலமிடப்பட்டத் தெருக்கள் வண்ணமயமாகக் காட்சித்தரும்.

இப்போது பாலாறும் ஏரியும் வற்றிப் போனதால் பெரும்பாலும் கிணற்றுப் பாசனம்தான். தென்னை அதிகம் என்பதால் ஓலை முடைதலும் துடைப்பம் கிழித்தலும்தான் எங்கள் ஊரில் பலருக்கு முக்கியத் தொழில். இப்போது ஊதுவத்தி தேய்க்கும் தொழிலில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், விவசாயப் பணிகளுக்குப் போவதைக்கூட பலரும் விட்டுவிட்டார்கள். தோல் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் விஷமாகிவிட்ட நிலையில், வாணியம்பாடியில் இருந்து வரும் குழாய் நீருக்காக, ஊர் மக்கள் காத்து இருக்கின்றனர்.

விழுந்தால் தாங்கிக்கொள்ளும் மண் தெரு, கம்பங்களில் தொங்கும் குண்டு பல்ப், புகை கசியும் வீட்டுக் கூரைகள், வீட்டு வாசலிலேயே நடக்கும் திருமணங்கள், பாவாடை தாவணிப் பெண்கள், தெருக்களில் விளையாடும் குழந்தைகள், கமலைப் பாசனம்,  ஏர் உழவு,  தூக்கணாங்குருவிக் கூடுகள் இவை எல்லாம் நினைவில் மட்டுமே உள்ளன.

என் ஊர் : குந்தாணிமேடு

ஊர் என்பது பலருக்கும் போல எனக்கும் பதின்பருவ நினைவுகள்  ஆகிவிட்டன. கல்லூரிப் படிப்புக்கும் ஆய்வுப் படிப்புக்கும் சென்னையில் கழித்த ஆண்டுகளில் ஊருக்குச் சென்று வரும்போது எல்லாம் அதன் முகம், சிறிது சிறிதாக மாறிவருவதை உணர்ந்து இருக்கிறேன். பணி நிமித்தமாகத் தற்போது வெளியூரில் வசிப்பதால் எங்கள் ஊருக்கு நானும் ஒரு விருந்தாளி ஆகிவிட்டேன்.

'கடைசியில் ஒரு மனிதன் போய்ச் சேருமிடம்
அவன் சொந்த கிராமமே
அவனுடைய அடுக்களையே
அவனுடைய மனைவியின் சமையலே
அந்திவேளையில்
தன் வீட்டின் முன் இருந்தவாறு தன் பேரனும்
பக்கத்து வீட்டுக்காரியின் பேரனும்
மண்ணில் ஒருசேர விளையாடுவதைப் பார்ப்பதுவே’

என்ற டி.எஸ்.இலியட்டின் கவிதை வரிகள் போல, பணி ஓய்வுக்குப் பிறகு நிரந்தரமாக, நிம்மதியாகக் குந்தாணிமேட்டில் வாழ்வதையே மனம் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டது!'

படங்கள்: ச.வெங்கடேசன்

அடுத்த கட்டுரைக்கு