Published:Updated:

கோப்புகளை அழிக்க முயற்சியா?- முதல்வர் மறுப்பு

Vikatan Correspondent

சென்னை, ஏப்.25,2011

புதிய தலைமைச் செயலகத்துக்கு கொண்டுச் செல்லப்படும் முக்கிய கோப்புகளை அழிக்க முயற்சி நடப்பதாக அதிமுக கூறியுள்ள புகாருக்கு முதல்வர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.##~~##

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் முதல்வர் கருணாநிதி இன்று கூறுகையில், " அதிமுகவின் தலைவர்களோ, தளபதிகளோ - நான்கைந்து தளபதிகள் ஒரு புகார் எழுதி அரசு தலைமைச் செயலகத்தில் கோப்புகள் எல்லாம் மாற்றப்பட்டும், சிதைக்கப்பட்டும் வருகின்றன, அதை உடனடியாகத் தடுக்க வேண்டுமென்றும், அதைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்றும் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார்கள். அதில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
 
அந்த மனுவில் இப்போது நடைபெறுவது காபந்து அரசு என்று அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் பி.எச். பாண்டியனை பெரிய வழக்கறிஞர்களில் ஒருவர் என்று கருதிக் கொண்டிருக்கிறேன். அவருடைய மகன் மனோஜ் பாண்டியனும் அவரை விடத் திறமையான வக்கீல் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் புகார்ப் பட்டியலில் கையெழுத்திட்டுள்ள மனோஜ் பாண்டியன் இந்த அரசை 'காபந்து அரசு' என்று சொல்லியிருப்பது நகைப்புக்குரியதாகும்.  
 
சட்டக்கல்லுரியின் வாசலைப் பார்த்தவர்கள் கூட காபந்து அரசுக்கும், இப்போது நடைபெறுகின்ற அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை நிச்சயமாக உணர்வார்கள். இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது தொடர்ச்சியான அரசு தான். தேர்தல் முடிவு வெளிவந்து அது வரையில் ஆட்சியில் இருக்கிற கட்சி - தோற்றுப் போய் - வீட்டுக்கு அனுப்பப்படுமேயானால் அடுத்து ஒரு அரசு அமைவதற்கு முன்பு இடையில் அரசாங்க நிர்வாகத்தில் தடங்கலோ தொய்வோ ஏற்பட்டு விடாமல் புதிய அமைச்சரவை அமைகிற வரையில் கவர்னர் அவர்களால் அனுமதிக்கப்படுகிற அரசுக்குத்தான் அரசு என்று ஒரு கிராம வாசிக்குக் கூடத் தெரியும்.
 
புதிய தலைமைச் செயலக வளாகம் இன்று நேற்றல்ல.. 13-3-2010 அன்றே பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், சோனியா காந்தி அவர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டதாகும். அதற்குப் பிறகு பட்ஜெட் கூட்டம் இந்தக் கட்டிடத்தில் தான் நடைபெற்றது. ஆளுநர் உரையும் கூட இங்கே தான் நிகழ்த்தப்பட்டது. அதையொட்டிய பொது விவாதமும் இங்கே தான் நடைபெற்றது. 2011ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையும் இந்த வளாகத்தில் தான் படிக்கப்பட்டது. அதற்கான விவாதமும் இங்கே தான் நடைபெற்றது.
 
இன்று வரையில் இந்தக் கட்டிடத்தில் ஏழு அமைச்சரவைக் கூட்டங்கள் இங்கே நடைபெற்றிருக்கின்றன. திரிபுரா கவர்னர் என்னை வந்து இங்குள்ள முதலமைச்சர் அறையில் சந்தித்து நீண்ட நேரம் உரையாற்றி விட்டுச் சென்றிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், நாராயணசாமி, ஆகியோர் இந்தக் கட்டிடத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள். தமிழக கவர்னர் பர்னாலா அவர்கள் ஒரு நாள் முழுவதும் அவர் உடல் நிலையைக் கூடப் பொருள் படுத்தாமல் இந்தக் கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு பாராட்டிச் சென்றிருக்கிறார்.
 
வீடியோ கான்பரென்ஸ் நிகழ்ச்சிகள் பல - குறிப்பாக கால்டுவெல் நினைவில்லத் திறப்பு விழா - ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் திறப்பு விழா - மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற விழா - தேர்வாணைக் கழகக் கட்டிடக் கால்கோள் விழா போன்றவைகள் இங்கே தான் நடைபெற்றன. அரசின் பல்வேறு துறைகள் - பொதுத்துறை, உள்துறை, பொதுப்பணித் துறை, தொழில் துறை, சட்டப் பேரவைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்றவைகள் எல்லாம் இந்தக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இங்கே பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
இப்போது கோப்புகளைத் திருத்துகிறோம் அல்லது திருடுகிறோம் என்றெல்லாம் வழக்கம் போல் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். கோப்புகளைப் பற்றியும் அவைகள் எங்களுடைய நிர்வாகத்தில் பாதுகாப்பற்றுப் போய் விடும் என்பது பற்றியும் இந்த மூன்று நான்கு பேருக்கு முன்பே அம்மையார் ஜெயலலிதா அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
 
தேர்தல் தொடங்கியது முதல் இந்நாள் வரையில் பல அவதுறுகளை அதிமுகவினர் குறிப்பாக அவர்களுடைய தலைவி ஜெயலலிதாவினால் இந்த அரசின் மீதும், என் மீதும் சுமத்துவதை எவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளில் இந்த அரசு ஈடுபட்டிருக்கின்றது," என்றார் கருணாநிதி.
 
காபந்து அரசு அல்ல, தொடர் அரசு என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒரு சில அதிகாரிகள் உங்களைக் கேட்காமலேயே தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கிறார்களே.. நேற்று கூட பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள், அந்தத் துறையின் அமைச்சரைக் கேட்காமலேயே தேர்வு முடிவு வரும் நாட்களையெல்லாம் அறிவித்திருக்கிறார்களே? என்றதற்கு, "அது அதிகாரிக்கும் அமைச்சருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு. நான் சொன்ன விஷயத்திற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை," என்றார்.
 
அதிமுக கொடுத்துள்ள புகார் குறித்து தேர்தல் ஆணையம் உங்களிடம் விளக்கமோ, தகவலோ கேட்டிருக்கிறதா? என்றதற்கு, "தேர்தல் ஆணையத்துக்கு நேற்றிரவு தான் புகார் மனுவை அனுப்பியிருக்கிறார்கள். இன்று காலையில் பத்திரிகைகளில் அந்தச் செய்தி வந்திருக்கிறது. எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறீர்கள். ஏனென்றால் இது உங்களுக்கு மிகவும் சுவையான விஷயம். அதனால் வெளியிட்டிருக்கிறீர்கள். எனவே அதற்காக வழக்கு போடுகிறோம்," என்று பதிலளித்தார்.
 
வழக்கு யார் மீது போடுகிறீர்கள்? என்றதற்கு, "எங்கள் சட்ட வல்லுநர்கள் அதைப் படித்துப் பார்த்து விட்டு - யார் மீது வழக்கு போடலாம் என்று சொல்கிறார்களோ, அவர்கள் மீது வழக்குப் போடுவோம்," என்றார் கருணாநிதி.