Published:Updated:

இக்கரை, அக்கரை எல்லாமே பச்சை!

##~##

காலையில் நாம் கையில் எடுக்கும் பற்பசை முதல் இரவு உபயோகிக்கும் கொசுவத்தி திரவம் வரை ஏதாவது ஒரு பாலிதீன் கலப்பு இல்லாமல் நம் அன்றாட வாழ்க்கை இல்லை. 'உடல், பொருள், ஆவி’ எனக் கலந்துவிட்ட பாலிதீன், பிளாஸ்டிக் இல்லாமல் ஒருநாள், ஒரே ஒருநாள் உங்களால் இருக்க முடியுமா?’ எனக் கேட்டால் 'எங்களால் இரண்டு நாட்கள் இருக்க முடியும்’ என்கின்றனர் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் உயிரித் தொழில் நுட்பம் பயிலும் மாணவர்கள்.

 ஒவ்வோர் ஆண்டும் பொறியியல் துறை,  கருத்துப் பட்டறை (symposium) நடத்துவது வழக்கம். அப்படி நடக்கும்போது பேனர்கள், விதவிதமான பிளாஸ்டிக் அலங்காரங்கள் என, கல்லூரியையே கலர்ஃபுல்லாக மாற்றி இரண்டு நாட்கள் அந்தத் துறையே விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால், இந்த சிம்போஸீயம் மொத்தமும் 'மாத்தி யோசி’ ரகம்தான்.

இக்கரை, அக்கரை எல்லாமே பச்சை!

எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது என்பதுதான் இந்த விழாவின் கான்செப்ட். பசுமையை நோக்கி (Go green) என்ற தலைப்பில் மாணவர்கள், செய்தித் தாள்களைக்கொண்டு மேடை அலங்காரம், பூங்கொத்து ஆகியன செய்ததோடு வந்திருந்த விருந்தினர்களுக்கும் வீணாகும் தாளில் செய்த பேனா ஸ்டாண்டைப் பரிசாக அளித்து அசத்தினர்.

சரி, எப்படி இருந்தாலும் மாணவர்கள் அணியும் அடையாள அட்டையில் பிளாஸ்டிக் இல்லாமல் இருக்காதே என்பது உங்கள் சந்தேகமாக இருக்கலாம். இந்த இரண்டு நாட்களும் மரப் பட்டையில் செய்த அடையாள அட்டையையே மாணவர்களும் ஆசிரியர்களும் அணிந்து இருந்தனர்.

உயிரியல் துறையின் தலைமை விரிவுரையாளர் பிரவீன்குமாரிடம்  இதைப் பற்றிப் பேசினேன். பசுமைப் புன்னகையுடன் பேசத் தொடங்கினார். ''ஒவ்வொரு கருத்துப் பட்டறைக்கும் ஒரு லோகோ உருவாக்குவது வழக்கம். நாங்கள் 'பசுமையை நோக்கி’ என்ற தலைப்புக்கு ஏற்ப, ஒரு மரத்தை மனிதன் தன் இரு கைகளால் உயர்த்திப் பிடித்திருப்பது போன்று லோகோவை உருவாக்கினோம். இந்த லோகோ, மற்ற கல்லூரி மாணவர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. ஏதோ இது இரண்டு நாள் கூத்து என்று நினைத்துவிட வேண்டாம். ஒவ்வொரு சிம்போஸீயம் முடியும்போதும் ஒவ்வொரு மாணவனும் ஒரு மரம் நட வேண்டும். பெரும்பாலும் மருத்துவக் குணங்கள்கொண்ட தாவரங்களே எங்கள் தேர்வாக இருக்கும்.

இந்த ஆண்டு புதிதாக ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது எங்கள் மாணவர் குழு. 'தானம் என்றால், பொருட்களாகவோ பணமாகவோ மட்டும்தான் இருக்க வேண்டுமா? ஏன் அது விலை மதிக்க முடியாத புத்தமாக இருக்கக்கூடாது?’ என்று நினைத்தோம், யோசனையை உடனே அமலுக்குக் கொண்டுவந்தோம். 'மாணவர்கள் பயன்படுத்திப் படித்து முடித்த புத்தகங்களை எடைக்குப் போட வேண்டாம். எங்களிடம் கொடுங்கள், அதை இல்லாதவர்களுக்குக் கொடுக்கலாம் வாருங்கள்’ என்ற வேண்டுகோளுடன் ஒரு கொட்டகை அமைத்தோம். மொத்தமாக இரண்டு நாட்களும் சேர்த்துகிடைத்த புத்தகங்கள் 162. மேலும், விழா இரு நாட்களில் முடிந்தாலும் ஒரு வாரம் இந்தக் கொட்டகை மட்டும் அப்படியே இருக்கும். இப்படிக் கிடைக்கும் புத்தகங் களை ஏழை மாணவர்களுக்கு அளிக்க முடிவு செய்து இருக்கிறோம்.

தமிழ் நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளிலும் சராசரியாக ஐந்து துறைகள் என்று வைத்துகொண்டாலும், மொத்தமாக 2,500 நாட்கள் பிளாஸ்டிக் உபயோகப்படுத் தாமல் இருக்கலாம். இப்படியே இந்த நாட்களை அதிகப்படுத்தினால் எல்லா நாட்களும் இனிய நாட்களே!'' என்கிறார் பிரவீன்குமார்!

கேட்கவே நல்லா இருக்கே!

-ரா.ராபின் மார்லர்