Published:Updated:

இந்த உலகம் மனிதநேயத்துக்காக!

##~##

''உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகுக்கு வந்துள்ளார்களே தவிர உங்களில் இருந்து அல்ல'' என்பது கலீல் கிப்ரானின் கவிதை வரிகள். ஆனால், பெற்றோராலும் சமூகத்தாலும் கைவிடப்பட்ட குழந்தைகள், நம் வாழ்வின் அவலங்கள். இத்தகையக் குழந்தைகளைக் காப்பதையே கடமையாகக்கொண்டு இயங்கிவருகிறது திருவண்ணாமலை டெரி டெஸ் (Terredes) ஹோம் என்று நம் வாய்ஸ் ஸ்நாப்பில் பதிந்து இருந்தார் வாசகர் ஒருவர். ''கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக இங்கே ஐந்து இல்லங்களை நடத்தி வருகிறோம். அரசின் உதவி மற்றும் 'டெரிடெஸ் ஹோம்ஸ் கேர் டிரஸ்ட்’ மூலம் வெளிநாட்டவர்களிடம் இருந்து பெறப்படும் நிதி உதவி போன்றவைதான் இந்த இல்லங்களுக்கான அடிப்படை'' என்று பேசத் தொடங் கினார் இல்லத்தின் நிர்வாகி செழியன்.

இந்த உலகம் மனிதநேயத்துக்காக!

 '' 'புஷ்பம் குழந்தைகள் இல்லம்’ மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக நடத்தப்படுவது. இங்கே சுமார் 48 பிள்ளைகள் தங்கி இருக்கிறார்கள். அடுத்த ஹோம் 'மாயா’. இது ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட மற்றும் தெருவில் ஆதரவற்று திரிந்த குழந்தைகளுக்காகச் செயல்பட்டுவருகிறது. இங்கே 37 குழந்தைகள் இருக்கிறார்கள். மூன்றாவதாக 'அலைகள்’, இது பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைப்படும் பெண் குழந்தைகளுக்கானது. இதில், 118 குழந்தைகள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் அடையாளம் காணப்பட்டு அரசால் அனுப்பிவைக்கப்படும் பெண் குழந்தைகளும் இங்கே பராமரிக்கப்படுகிறார்கள். எம்.டி.எம். என்ற பெயரில் இரண்டு ஹோம்கள் உள்ளன. ஒன்றில், கிராமப்புறங்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளும் சாலையோரக் குழந்தைகளும் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். 10 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளை மட்டுமே இங்கு உள்ள பெண் குழந்தை களுடன் தங்க அனுமதிக்கிறோம். 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்காகத் தனியாக இன்னொரு எம்.டி.எம். ஹோம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆறு மாதம் முதல் மூன்று வயது வரை உள்ள மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்காகவும் ஒரு தனி ஹோம் இருக்கிறது. இதில் மட்டும் 115 குழந்தைகள் இருக் கிறார்கள்.

இந்த உலகம் மனிதநேயத்துக்காக!

குழந்தைகளைப் பாதுகாக்கவும் பராம ரிக்கவும் மட்டுமே 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். இங்கு உள்ள குழந்தைகள் அனைவரும் அவர்களை அம்மா, அப்பா, அங்கிள் என்று உறவுமுறைவைத்துப் பாசத்துடன் அழைக்கிறார்கள். குழந்தைகளின் உடல் நலத்தைப் பாதுகாக்கவும் உணவு சமைக்கவும் நர்சுகள் மற்றும்  சமையல்காரர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். இருந்தாலும், பெரிய குழந்தைகள் சமைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் குழந்தைகளுக்கும் சமைக்கக் கற்றுத்தருகிறோம். அவர்கள் தினமும் சாப்பிடும் உணவுவகைகளை ஒரு மெனு போல் அவர்களையே தயாரிக்கச் செய்து அந்த உணவு வகைகளை சமைக்கக் கற்றுத்தருகிறோம். குழந்தைகள், தங்கள் துணிகளைத் துவைக்கத் தனித் தனியாக வாஷிங்மெஷின் வாங்கி வைத் திருக்கிறோம். வயது வந்த பெண் குழந்தைகள் தாங்கள் உபயோகிக்கும் நாப்கின்களை ஆங் காங்கே போட்டுவிடக் கூடாது என்று அவற்றை அழிக்கவும் தனியாக ஒரு மெஷின் வாங்கி வைத்திருக்கிறோம்.

மொத்தத்தில் இது 'ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம்’ என்கிற உணர்வே எந்தக் குழந்தைக்கும் வராது. அன்பு தவழும் இல்லம் என்கிற எண்ணமே இவர்களுக்கு ஏற்படும். அதுதானே முக்கியம்?'' என்கிறார் செழியன்.

இந்த உலகம் மனிதநேயத்துக்காக!

அதுசரி, 'டெரிடெஸ்’ என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

'இந்த உலகம் மனிதநேயத்துக்காக!’

- கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்