என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : அ. முத்துலிங்கம்

பிரபலங்கள்  விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை,  விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும்   பக்கம்!

##~##

'எங்கள் ஊரில் ஒரு துப்பாக்கி இருந்தது.’ இப்படி ஒரு சிறுகதை ஆரம்பிக்கும். அதுபோல நானும் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.

எங்கள் ஊரில் ஒரு ரயில் நிலையம் இருந்தது. உலகத்தினுடனான எங்கள் தொடர்பு அதுதான். எங்கள் ஊரில் ஒரு தட்டச்சு மெசின் இருந்தது. அது எப்படித் தெரியுமென்றால், அரசாங்கத்துக்கு யாராவது கடிதம் எழுத வேண்டுமென்றால், அந்த மெசினில் தட்டச்சு செய்துதான் அனுப்பிவைப்பார்கள். எங்கள் ஊரில் ஒரு ரேடியோ பெட்டி இருந்தது. இரண்டு உயரமான பனைமரங்களில் ஏரியல் கட்டி, அதிலிருந்து தொங்கி வந்த வயரில்ரேடியோ இயங்கும். மகாத்மா காந்தி இறந்தபோது, அந்தச் செய்தியைக் கொண்டுவந்த ரேடியோ பெட்டியைச் சூழ்ந்து முழுக் கிராமமும் கூடியிருந்தது ஞாபகத்தில் நிற்கிறது.

எங்கள் ஊரில் ஒரேயரு ஆனந்த விகடன் இருந்தது. ஒரு பணக்கார வீட்டுக்கு தபால்காரர் வாராவாரம் விகடன் விநியோகிப்பார். அவர்கள் வருட சந்தா கட்டி, அது நேராக இந்தியாவில் இருந்து தபால் மூலம் வந்தது என்று நினைக்கிறேன். அந்தப் பணக்காரர் ஆனந்த விகடனை எவ்வளவு நேசித்தாரோ தெரியாது. ஆனால் எங்கள் கிராமத்தவர்கள், விகடனை அவரையும் மீறி நேசித்தார்கள் என்றே சொல்லலாம். வீட்டுக்காரர்கள் படித்த பிறகு, விகடன் கிராமம் முழுக்க சுற்றுக்குப் புறப்படும். ஒரு வார விகடன் மீண்டும் சொந்தக்காரரிடம் திரும்புவதற்கு மூன்று மாதக் காலம் ஆகலாம்.

நானும் விகடனும்!

முதல் ஆளாக விகடனை இரவல் வாங்கச் செல்வது நானாகத்தான் இருப்பேன். நான் அந்த வயதில் வாசிக்க ஆரம்பிக்கவில்லை. எங்கள் வீட்டில் அக்காதான் வாசகி. அவருக்காகத்தான் நான் விகடன் இரவல் வாங்கச் செல்வேன். அவர் அதை ஐயாவுக்குத் தெரியாமல் படித்து முடிக்க வேண்டும். 'பெண்கள் சும்மா இருந்தால் கெட்டுப்போய்விடுவார்கள். புகை போட்டு வாழைப்பழத்தைப் பழுக்கவைப்பதுபோல நாவல்களும் பத்திரிகைகளும் பெண்களைச் சீக்கிரத்திலே பழுதாக்கிவிடும்’ என்று ஐயா அடிக்கடி சொல்வார். ஆகவே அக்கா, விகடனை ஐயா இல்லாத சமயங்களில் ரகசியமாகப் படித்து முடித்துவிட்டு என்னிடம் தருவார். நான் மறுபடியும் போய் வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டுத் திரும்புவேன்.

அந்த நாள் மறக்க முடியாதது. ஆனந்த விகடனைக் கொடுப்பதற்காக எங்கள் கிராமத்தின் புழுதி மண்டிய ஒடுங்கிய ஒழுங்கைகள் வழியாகப் போய்க்கொண்டுஇருந்தேன். சூரியன் மறைவதற்கு இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது. ஆனந்த விகடனைத் திறந்து படங்களைப் பார்த்தவாறு நடந்தேன். அதிலே வரைந்திருக்கும் கோட்டுப் படங்கள் பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஒரு பக்கத்தில் நகைச்சுவைச் சித்திரமாக மூன்று படங்கள் பக்கத்துப் பக்கத்தில் வரைந்திருந்தன. முதல் படத்தில், வைக்கோல் வண்டி ஒன்றின் உச்சியில் ஒருவன் தூங்கி வழிந்தபடி இருக்கிறான். இரண் டாவது படத்தில், வண்டியின் பாதையில் உயரமான தந்திக் கம்பம் ஒன்று குறுக்கிடுகிறது. மூன்றாவது படத்தில், தந்திக் கம்பியின் மீது அந்த மனிதன் தூங்கியவாறு உட்கார்ந்திருக்கிறான். தூரத்தில் வண்டி போய்க்கொண்டிருக்கிறது. இன்றும் என் மனதில் அந்தச் சித்திரத்தை நினைக்கும்போது சிரிப்பு வரும்.

சரியாக அன்றிலிருந்து நான் ஆனந்த விகடன் வாசகன் ஆனேன். நகைச்சுவையில் ஆரம்பித்து ஒவ்வொன்றாகப் படித்து முன்னேறத் தொடங்கினேன். ஒருகட்டத்தில் அக்காவுக்குப் போட்டியாகப் படிக்க ஆரம்பித்தேன். ஆனந்த விகடன் கிடைக்கும் அன்று எங்களுக்குள் சண்டை மூளும். சாதாரண விகடனுக்கே இப்படி என்றால் தீபாவளி மலரைப் பற்றிச் சொல்லவே தேவை இல்லை. இரண்டு கைகளாலும் அதைத் தூக்கினால்தான் உண்டு. அத்தனை பாரமாக இருக்கும். வீட்டுக்காரர்கள் படித்து முடித்து எங்களுக்குக் கிடைக்கும்போது பொங்கல் வந்துவிடும். ஒருநாள் அக்காவுக்குத் தெரியாமல் மலரை நான் பள்ளிக்கூடத்துக்கு எடுத்துப் போய்விட்டேன். அதை இலகுவில் மறைக்க முடியாது. நான், பாடம் நடந்துகொண்டிருந்தபோது மேலே பள்ளிக்கூடப் புத்தகத்தைப் பரப்பிவைத்து, கீழே மலரைப் படித்தபோது மாஸ்டரிடம் பிடிபட்டுவிட்டேன். அவர் தண்டனையாக மலரைப் பறித்துக்கொண்டு போய்விட்டார். ஒரு வாரமாக இழுத்தடித்து, இனியில்லை என்று என்னை இம்சித்த பின்னர், மலரைத் தந்தார். பாரிஜாத மலரைக் காட்டிலும் அபூர்வமாகக் கிடைக்கும் விகடன் மலரை, அவரும் அவரது மனைவியும் மகளும் படிக்க ஒரு வாரம் எடுத்துக்கொண்டார்கள் என்ற தகவல் வெகுநாள் கழித்துத்தான் எனக்குத் தெரியவந்தது.

தீபாவளி மலருக்கு நான் சண்டைபோடுவதற்கு முக்கியக் காரணம்,

தி.ஜானகிராமன் அதில் சிறுகதை எழுதுவதுதான். தி.ஜா-வின் சிறுகதைகளை மிகுந்த ஆவலுடன் நான் படித்துவந்த காலம் அது. ஆனந்த விகடனில் அவர் தொடர் நாவலும் எழுதியிருக்கிறார். என்னுடைய வாசிப்பு விரிவான தளத்தை எட்டவில்லை என்றாலும் எனக்கு தி.ஜா. எழுதுவது உலகளவில் முதல் தரமான சிறுகதைகள் என்றே பட்டன. அவை என்னில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. அதற்குச் சற்று பிந்திய கால கட்டத்தில் ஆனந்த விகடன் அறிமுகப் படுத்திய கி.ராஜநாராயணனுடைய 'கோபல்லபுரத்து மக்கள்’ நாவல் தொடராக 34 வாரங்கள் வந்து மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அவர் எழுதிய மொழியும் விவரித்த பின்புலமும் எனக்கு முற்றிலும் புதுமையானதாக இருந்தன. அந்த

எழுத்தாளரை நான் கேள்விப்பட்டதே கிடையாது. அதன் பின்னர்தான் அவர் ஏற்கெனவே எழுதியிருந்த 'கோபல்ல கிராமம்’ நாவலைத் தேடிப் பிடித்துப் படித்தேன். படித்தது மட்டுமல்ல, பல வருடங்களுக்குப் பின்னர் அவரைத் தேடிச் சென்று அவர் வீட்டில் சந்தித்தேன். ஓர் எழுத்தாளரைத் தேடி நான் அவர் வீட்டுக்குப் போனது அதுவே முதல் தடவை. அதற்கு நான் ஆனந்த விகடனுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

ஆங்கில எழுத்தாளர்களில் சார்ல்ஸ் டிக்கன்ஸுக்கு ஒரு தனி இடம் உண்டு. அவர் எழுத ஆரம்பித்தபோது, ஆங்கிலத்தில் இருந்தது 66 நாவல்கள் மட்டுமே. அவர் காலத்தில் ஆங்கில இலக்கியத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. தொடர் நாவலை அவர் அறிமுகப்படுத்தியதோடு, அதைப் பிரபலப்படுத்தினார். அவர் எழுதிய பத்திரிகையைத் தாங்கிய கப்பல் நியூயார்க் துறைமுகத்தை அடையும்போது, அங்கே 6,000 வாசகர்கள் காத்துக்கொண்டிருப்பார்களாம். தன் வாழ்நாளிலேயே புகழுடனும் வசதியுடனும் வாழ்ந்த ஆங்கில எழுத்தாளர் அவர். தமிழில் டிக்கன்ஸுடன் ஒப்பிடக்கூடிய எழுத்தாளர் ஜெயகாந்தன். அவர் தொடர்ந்து எழுதிய வருடங்கள் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம். லட்சக்கணக்கானோர் அவர் எழுதியதைப் படித்தார்கள். அவருடைய முதல் கதையே முத்திரைக் கதையாக விகடனில் வெளிவந்து பெரும் வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பிவிட்டது. புதிய தமிழ் இலக்கிய அலை ஒன்று அவரால் உருவாகியது. அவருடைய 'பாரீசுக்குப் போ’, 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்கள் விகடனில் தொடர்களாக வெளியானபோது, அவை என்றும் இல்லாதவாறு பெரும் பரபரப்பைக் கிளப்பின. அவற்றைப் பற்றிய காரசாரமான விவாதங்கள் அடுத்த அத்தியாயம் வரும் வரை தொடரும்.

ஒரு தலைமுறையினரின் இலக்கிய ரசனையை ஆற்றுப்படுத்திய பெருமை விகடனுக்கு உண்டு. ஆனந்த விகடனில் தொடர்ந்து எழுதிய தி.ஜா., கி.ரா., ஜெயகாந்தன் ஆகிய எல்லோருக்கும் சாகித்திய பரிசு கிடைத்ததில் ஆச்சர்யம் இல்லை. அவர்களை விகடன் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு வாசகர்களிடம் கொண்டுசேர்த்ததுதான் ஆச்சர்யம்.

'தில்லானா மோகனாம்பாள்’ மற்றும் 'வாஷிங்டனில் திருமணம்’ போன்ற பிரபல தொடர்களும் விகடனில் வெளியாகின. நான் இலங்கையைவிட்டு வெளியேறி 25 வருடங்களாக ஒன்றுமே எழுதாதபோதும் தொடர்கள் படிப்பதை நிறுத்தவில்லை. ஆனந்த விகடனுக்கு சந்தா கட்டியிருந்ததால், நான் எங்கேயிருந்தாலும் வந்துவிடும். சியாரோ லியோன், சூடான், பாகிஸ்தான், சோமாலியா, கென்யா என்று நான் பிரயாணப்பட்டேன். தமிழ் எழுத்துலகில் என்ன நடக்கிறது என்பதை ஓரளவுக்கு விகடன் மூலம் அறியக் கூடியதாகவிருந்தது. ஒருமுறை ஆப்கானிஸ்தானுக்குப் போனபோது என் பயணப் பெட்டியில் விகடன் இருந்தது. அப்பொழுது ஸ்ரீதேவி மிகவும் பிரபலம். அங்கே எந்த வாகனத்தைப் பார்த்தாலும் அதன் பின்பகுதியில், எல்லாப் பற்களையும் பயன்படுத்தி ஸ்ரீதேவி சிரிக்கும் படம் ஒன்று ஒட்டியிருக்கும். ஆப்கன் நண்பர் ஒருவர் அந்நிய எழுத்தில்கிடந்த விகடனைப் புரட்டிப் பார்த்தபோது ஸ்ரீதேவியின் படத்தைக் கண்டு திடுக்கிட்டார். ஸ்ரீதேவி ஏதோ தங்களுக்குத்தான் சொந்தம் என்பதுபோல, எப்படி அந்தப் படம் அங்கே வந்தது என்று கேட்டார். அந்தக் கேள்வி குதிரைச் சவுக்கை வைத்திருக்கும் ஒருவர் கேட்டதுபோல இருந்தது. நான் 'ஸ்ரீதேவி தமிழ்ப் பெண். நான் படிக்கும் பத்திரிகையும் தமிழ்ப் பத்திரிகை’ என்று சொன்ன பிறகுதான் கொஞ்சம் சாந்தமானார்.

ஆனந்த விகடனில் சுஜாதா தொடர்ந்து எழுதிய 'கற்றதும் பெற்றதும்’ மிகவும் பிரபலமானது. கட்டுரைத் தொடர் ஒன்று படிப்பதில் வாசகர்கள் இத்தனை ஆர்வம் காட்டியது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். அப்பொழுது கணினி பாவனை ஏற்கெனவே பரவலாகிவிட்டது. நான் எந்த நாட்டில் இருந்தாலும் கட்டுரையைப் படித்துவிட்டு உடனே மின்னஞ்சலில் அவருக்கு எழுதுவேன். ஒருமுறை புவியியல் பற்றி ஏதோ கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். சுஜாதாவுக்குத் தன் அபார மேதைமையைக் காட்ட வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. 'வாசகருடைய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், மீதியை அவராகவே தேடிப் படித்துக்கொள்வார்’ என்பது அவர் கொள்கை. நான் அப்பொழுது புதிதாக வெளிவந்த வெகு சுவாரஸ்யமான டவா சோபெல் (ஞிணீஸ்ணீ ஷிஷீதீமீறீ) எழுதிய லாஞ்சிட் யூட் (லிஷீஸீரீவீtuபீமீ) புத்தகத்தை வாங்கி அவருக்கு அனுப்பினேன். உடனேயே அடுத்த வாரம் அதைப் படித்துவிட்டு நீளக்கோடு பற்றிய அருமையான கட்டுரை ஒன்றை எழுதி னார். சுஜாதாவின் எழுத்தில் பெரும்பா லான பகுதியை மக்களிடம் கொண்டு சேர்த்தது ஆனந்த விகடன்தான்.  

விகடனில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், அது ஈழம் தொடர்பாக எடுத்த கொள்கை நிலைப்பாடு. இன்று ஈழத் தமிழர்கள் பத்து லட்சம் பேர் நியூஸிலாந்தில் இருந்து கனடா வரை பரவி இருக்கிறார்கள். இவர்கள் வாழ்புலத்தை 'சூரியன் மறையாத புலம்’ என்று அழைக்கலாம். நீண்ட ஈழப் போர் நடந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் விகடன் தன் கொள்கையில் உறுதியாக இருந்தது. போர் உச்சகட்டத்தில் இருந்த சமயம் ஈழ மக்கள், அவர்கள் எங்கே இருந்தாலும், ஆனந்த விகடன் என்ன சொல்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்தார்கள். வேறு பத்திரிகைகளில் காணக் கிடைக்காத நேர்மையுடனும் தார்மீக உணர்வுடனும் விகடனின் குரல் தொடர்ந்து ஒலித்தது; ஒலிக்கிறது. இதற்கு ஈழ மக்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர் களாக இருப்பார்கள்.

பத்து வருடங்களுக்கு முன்னர் நடிகை பத்மினி கனடாவுக்கு வந்து என் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த சமயம் ஏற்பட்ட அனுபவத்தைக் கட்டுரையாக ஆனந்த விகடனில் எழுதியிருந்தேன். முதன்முதலாக ஒரு சினிமா நடிகைபற்றி நான் எழுதிய கட்டுரை அது. அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு எனக்குப் பல வாசக கடிதங் கள் வந்தன. இன்றைக்கும் சிலரைச் சந்திக்கும்போது அந்தக் கட்டுரையை நினைவுகூர்வார்கள். அப்போதெல்லாம் விகடனின் பரந்துபட்ட வாசக தளத்தை நினைத்து நான் அதிசயப்படுவதுண்டு.

ஆனந்த விகடன் அட்டைப் படத்தில் ஒரு கேலிச் சித்திரம் வெளியானபோது, அதை தமிழ்நாடு சட்டமன்றம் கண்டித்து, ஆசிரியரையும் சிறையில் அடைத்தது. பத்திரிகைச் சுதந்திரத்துக்காக ஆசிரியர் போராடியபோது, மக்கள் அவர் பக்கம் நின்றதால் வெற்றிபெற்றார். இந்தச் சம்பவம் என் மனதில் அவரை மிகவும் உயர்த்தியிருந்தது. இந்தியாவுக்கு நான் பலமுறை சென்றிருந்தாலும் ஆனந்த விகடன் அலுவலகத்துக்குச் சென்று ஆசிரியரைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறாமலேயே போனது. ஆனந்த விகடன் பவள விழா 2003-ல் வந்த போது எனக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனின் கையப்பத்துடன் பவள விழா மலருக்கு ஒரு சிறுகதை கேட்டுக் கடிதம் வந்திருந்தது. அடிக்கடி முகவரி மாறும் ஆள் நான். அப்படியும் எப்படியோ என் சரியான முகவரியைக் கண்டுபிடித்துக் கடிதம் எழுதியிருந்தார். நான் மிகப் பெருமையாக உணர்ந்த தருணம் அது. இரவல் ஆனந்த விகடன் தீபாவளி மலரைப் பள்ளிக்கு எடுத்துச் சென்று அதைப் பறிகொடுத்த சம்பவத்தை நினைத் துக்கொண்டேன்.

நானும் விகடனும்!

ஆசிரியர் கேட்டுக்கொண்டபடி ஒரு சிறுகதை அனுப்பி அது பிரசுரமானது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், சுஜாதா என்று தொடங்கிய எழுத்தாளர் சங்கிலி இன்று நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணதாசன் என்று தொடர்கிறது. ஓவிய வரிசை மாலி, கோபுலு, மாயா, மதன், ஸ்யாம், எஸ்.இளையராஜா என்று நீள்கிறது. விகடனின் பிரமாண்டமான 'தானே’ துயர் துடைப்பு நிகழ்வு அனைவர் மனதையும் நெகிழவைத்திருக்கிறது. பத்து வருடங்களுக்குப் பின்னர் வாசகருக்கு என்ன தேவை என்பதை இன்றே உணர்ந்து திட்டமிடுவதால்தான், விகடன் 86 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இன்று விகடனில் என் முத்திரைக் கதைகள் பலவுடன் கட்டுரைகளும் பிரசுரமாகிஇருக்கிறதென்றால், அதற்குக் காரணம் என்னை வளர்த்தெடுப்பதில் விகடன் ஆற்றிய பங்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒருகாலத்தில் ஒரு கிராமத்துக்கு ஒரு விகடன் வந்தது. இப்பொழுது ஜூனியர், சுட்டி, அவள், நாணயம், சக்தி, மோட்டார், பசுமை என்று விகடனுக்குப் பல தலைகள். அது விருட்சம் அல்ல... தோப்பு. இணையத்தில், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் விகடன் படிக்கக் கிடைக்கிறது. இன்று விகடனை ஏறக்குறைய ஒரு கோடி மக்கள் வாராவாரம் படிக்கிறார்கள். அத்தனை பரந்த தளத்தில் அது இயங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர், ஒடுக்கமான யாழ்ப்பாணத்து வீதி ஒன்றில், மங்கிய சூரிய வெளிச்சத்தில் முதன்முதல் ஆனந்த விகடனை விரித்துப் பார்த்த சிறுவனால், அந்தப் பத்திரிகை எதிர்காலத்தில் எட்டப்போகும் உயரத்தையோ, பிரமாண்டத்தையோ, வீச்சையோ ஒருபோதும் கற்பனை செய்திருக்க முடியாது!''