என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

##~##

ஷிமுராவோட அப்பா மசாமி மரத்துக்கும் அவுக அம்மா காமியாமா மரத்துக்கும் மம்பட்டியில இழுத்து இழுத்து மண்ணு அணைச்சுக்கிட்டிருந்தாரு கருத்தமாயி. பசப்படிக்க ஆரம்பிச்சிருச்சுக ரெண்டு மரங்களும்; வேர் புடிச்சதுக்கு அடையாளமா அங்கங்க புது இலையும் விட்டு நிக்குதுக அரச மரங்க.

 சீனிச்சாமி வகையறா மரங்களுக்குக் குடம் சுமந்து தண்ணி ஊத்திக்கிட்டிருக்கான் இஷிமுரா. சாக்குல கொண்டாந்த மாட்டு எருவக் கொட்டிக்கிட்டிருக்கான் மரங்களுக்கு சின்னப்பாண்டி.

தண்ணி விட்டுக்கிட்டே அவுக அப்பா அம்மாவோட அவுக பாஷையில என்னமோ பேசிக்கிட்டிருந்தான் இஷிமுரா. மம்பட்டி இழுத்துக்கிட்டே மகன்கிட்டப் பேசுறாரு கருத்தமாயி.

''மகனே சின்னப்பாண்டி! ஆத்தாளக் காதறுத்த உங்கண்ண னைக் கட்டி ஏறிக் கண்டிக்கப் போயிட்டியாமே... உன் தரத்துக்கு அது சரியாடா மகனே? நீ சிங்கம்டா; சிங்கம் சிங்கத்தோடதான் சண்டை போடணும். அது நாயி. சிங்கம் நாயக் கடிக்கலாமா? கடிச்சிட்டாலும் அன்னைக்கிருந்து நல்லதத் திங்குமா நாயி? நான்தான் காட்டுப் பய. அருவாளத் தூக்கி அலஞ்சு திரிஞ்சு வந்தேன். நீ பெரிய படிப்புப் படிச்சவனில்லையா? அந்த வெங்கம்பயலோட மோதலாமா? விட்டுத்தள்ள வேண்டியதுதான! உங்க ஆத்தா அவனத் தொப்புள்கொடி அறுத்தா. உங்க ஆத்தாள அவன் காதறுத்துட்டான். சரிக்குச் சரி சரியாப்போச்சு. அவனா ஆடி அடங்கட்டும். நெஞ்சுல வஞ்சம் வைக்காம உன் காரியத்த நீ பாரு மகனே!''

மூன்றாம் உலகப் போர்

''அண்ணன் எனக்கொரு கெடுதல் பண்ணுனாலும் பொறுத்துப் போயிருவனப்பா. ஆத்தாளுக்கு ரத்தப் பலி காட்டவும் பொறுக்க முடியல.''

''மரம் விளைஞ்சா வைரம் இருக்கணும்; மனுசன் விளைஞ்சாப் பொறுமை இருக்கணும்.''

''எப்படி அப்பா நீ இப்பிடிப் பொறுமைசாலி ஆயிட்ட? உணர்ச்சி செத்துப்போச்சா ஒனக்கு?''

மம்பட்டியக் கீழ போட்டுட்டு நிமிர்ந்தவரு மகனையே குறுகுறுனு பாத்தாரு.

''தருமன பீமன் கேட்ட மாதிரி கேக்கறடா மகனே!''

''அது என்னாது அது?''

''நாட்டைப் பறிச்சாலும் பொறுமையா இருக்கிற; ஊரைப் பறிச்சாலும் பொறுமையா இருக்கிற; வீட்டைப் பறிச்சாலும் பொறுமையா இருக்கிற; பொண்டாட்டி சீலைய ஒருத்தன் இழுக்கிறபோதும் பொறுமையா இருந்துட்டியே! உனக்கு உணர்ச்சியே இல்லையா?ன்னு கேட்டுட்டான் பீமன் தருமன. அப்பவும் ஒரு சிரிப்புச் சிரிச்சுட்டு 'எள்ளு இருக்கா வீட்டுக்குள்ள’ன்னு கேட்டாரு தம்பிய. என்னா எதுக்குன்னு கேக்காம அவனும் போயி எள்ளை எடுத்துட்டு வந்தான். நெஞ்சுல கையக் கட்டி நின்னுக்கிட்டு 'எறிடா தம்பி எள்ளை என் மேல’ன்னாரு தருமரு. அவனும் எறிஞ்சான். எறிஞ்ச எள்ளு பொட்டுப் பொட்டுன்னு வெடிச்சுப் பொரிபொரியாச் செதறுச்சாம். 'எள்ளை எறிஞ்சாப் பொரியாத் தெறிக்கிற மாதிரி உள்ள வச்சிருக்கேன் அம்புட்டுக் கோவத் தை’ன்னு சொன்னாராம் தருமரு. எனக் குள்ளேயும் இருக்குடா மகனே சூடு சொரணை. எப்பக் காமிக்கணுமோ அப்பத்தான காமிக்கணும். நீ மெத்தப் படிச்ச அறிவாளி; நான் தற்குறி; ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கிருவியா?''

''சொல்லப்பா...''

''மனசு பின்னாடி மனுசன் போனான்னா, அவன் மிருகம்; மனுசன் பின்னாடியே மனசு வந்துச்சுன்னா, அவன் தெய்வம்!''

திகைச்சுப்போன சின்னப்பாண்டி, ''நீ மிருகமா? தெய்வமா?''ன்னு கேட்டுப்புட்டான் ஒரு கேள்வி.

எதிர்பார்க்கல கருத்தமாயி அந்தக் கேள்விய.

மம்பட்டியில புடிச்சுக்கெடந்த மண்ணப் பூவரசங்குச்சியில சுரண்டிக்கிட்டே சொன்னாரு: ''நான் ரெண்டும்தானடா மகனே. மாறிமாறித்தான் இருக்கேன். ஆனா ஒண்ணு; தெய்வமா இருந்தாத் தெரியுது எனக்கு; மிருகமா இருந்தாத் தெரியல.''

''என்னியப் பத்திச் சொல்லப்பா - நான் மிருகமா? தெய்வமா?'' - சிரிச்சுக்கிட்டே கேட்டுட்டான் சின்னப்பாண்டி இன்னொரு கேள்விய.

''நேத்து உங்கண்ணனைக் கழுத்தப் புடிக்கப் போனபாரு - அப்ப மிருகம்;மத்தபடி கூட்டிக் கழிச்சுப் பாத்தா நீ தெய்வம்தாண்டா மகனே!''

''நான் தெய்வமாக்கும்?''- கடகடன்னு சிரிச்சுட்டான் சின்னப்பாண்டி.

''ஈரும் பேனுமாக் கெடந்த ஊரச் சிக்கெடுத்துச் சீவி முடிச்சு சிங்காரிச்சுட்டியே மகனே. இந்தக் கொலகாரப் பாவி வகுத்துல எப்பிடிடா இப்பிடி நல்லவனா வந்து பெறந்த?''-மம்பட்டியத் தூக்கித் துண்டா எறிஞ்சுட்டு, மகன் கையப் புடிச்சு தாடி முளைச்ச கன்னத்துல கைய வச்சு ஆசையாத் தடவுனாரு கருத்தமாயி.

''என்னியவிட நல்லவரப்பா நீயி.''

அப்பனும் மகனும் ஒண்ணு சொன்னாப்புல கண்ணீர்விடவும் அது வருத்தம் இல்ல - சந்தோசக் கண்ணீருன்னு மட்டும் புரியுது இஷிமுராவுக்கு.

''எமிலி... உனக்கு நன்றி.

இஷி... உனக்கு நன்றி.

பிறந்தமேனியாகவே இருந்த எனது ஊர், இப்போதுதான் ஆடை கட்டுகிறது. நெசவாளிகள் நீங்கள்; அணிவித்தவன் மட்டுமே நான்.

எத்துணை கூரிய அம்புக்கும் வில் ஒன்று தேவைப்படுகிறது. வில்லாக வந்தவர்களே... உங்களை இந்த மண்ணும் நானும் மறக்க மாட்டோம். இது மாற்றத்தின் தொடக்கம்தான்; நிலைப்படுத்துவதும் கடினம்தான். ஆனால், முற்றும் தொடங்காத ஒரு நல்ல காரியத்தைவிட, மோசமான தொடக்கமே நன்று.

மூன்றாம் உலகப் போர்

எல்லாச் சித்திரங்களும் தொடங்குவது ஒரு கோட்டில் இருந்துதான். இது கோடு; அல்லது கிறுக்கல். கிறுக்கலைக் காட்டுகிறேன்; திருத்துங்கள். எங்கே என்னோடு வாருங்கள் ஓர் ஊர்வலம் போய் வருவோம்.''

எமிலியையும் இஷிமுராவையும் அழைத் துக்கொண்டு அட்டணம்பட்டிக்குள் தெருத் தெருவாய் நுழைந்தான் சின்னப்பாண்டி.

அன்று புதிதாய்ப் பிறந்தனவாய்த் தெரிந்தன தெருக்கள். எல்லா வீட்டு வாசலிலும் அரிசிமாக் கோலங்கள். ''கல் மாவிலும் கோலமிடலாம். எங்களூரில் ஏன் அரிசிமாக் கோலம் தெரியுமா? இந்த பூமியின் பூர்வகுடிகள் எறும்புகள். எறும்பு களின் மண்ணில்தான் மனிதன் வீடு கட்டி யிருக்கிறான். எறும்புகள் பாவம் எங்கு போகும் உணவுக்கு? எறும்புகள் தின்னட்டும் என்றுதான் அரிசிமாக் கோலம்.''

''அதோ அங்கொருவன் சாக்கடையில் பூச்சிமருந்து தெளிக்கிறான். மூட வேண்டாம் மூக்கை; சுவாசிக்கலாம் நீங்கள்; உங்கள் நுரையீரல் நோயுறாது. ஈக்களுக்கும் கொசுக்களுக்கும் அவன் தெளிப்பது ரசாயன மருந்து அல்ல; நீலகிரித் தைலத்தில் வேப்பெண்ணெய் கலந்து விசிறியடிக்கிறான். அது கொசுக்களை அண்டவிடாது; சுற்றுச்சூழலை மாசுறுத்தாது.''

''அதோ போகிறாளே வயசுக்கு வராத ஒரு வளர்பிறை - அவளை நிறுத்தி விசாரி யுங்கள்.''

''பெண்ணே உன் பெயரென்ன?''

''நூர்ஜஹான்.''

''எங்கே போகிறாய்?''

''இரவுத் தங்கலுக்கு செல்வி வீடு

செல்கிறேன்.''

''ஏன்? உன் வீட்டில் இடம் இல்லையா?''

''இல்லை... என் வீட்டில் செல்வி தங்குகிறாள்; செல்வி வீட்டில் நான் தங்குகிறேன்.''

''ஏன் இப்படி இடம் மாறுகிறீர்கள்?''

''எங்கள் ஊரின் புதிய ஏற்பாடு இது. வாரம் ஒரு நாள் ஒவ்வொரு வீட்டிலும் சென்று ஒரு குழந்தை தங்க வேண்டும். பன்னிரண்டு வயதுக்குள் இந்த ஊரே எங்களுக்கு உறவாகிவிடும். வருகிறேன்; பங்கஜம் அத்தை காத்திருப்பாள்'' - சொல்லி விரைந்தாள் நூர்ஜஹான்.

''சைக்கிள்காரரே... நிறுத்தும்.

அது என்ன கட்டு - உங்கள் சைக்கிளின் பின்னிருக்கையில்?''

''வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, வேலங் குச்சி. வீட்டு வீட்டுக்கு இப்போது இதுதான் பல்குச்சி.''

''ஏன்? நைலான் பிரஷ் என்னவாயிற்று?''

''முற்றிலும் துறந்துவிட்டோம். அது மாதம் ஒரு பல்குச்சி; இது நித்தம் ஒரு பல்குச்சி. எது சுகாதாரம்? நீங்களே யோசியுங்கள். இன்னொன்று - பற்பசை உள்ளேயே இருக்கிறது இந்தப் பல்குச்சிக்கு; அது கிருமிநாசினி.''

''சபாஷ்! சைக்கிள்காரரே... எனக்கும் ஒரு பல்குச்சி.''

''என்ன இது? ஊரே நிசப்தத்தில். மின்சாரம் இல்லையா?''

''இருக்கிறது. இது பிள்ளைகள் படிக்கும் நேரம். அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சியை அணைத்துவிடச் சொல்லி ஆணையிட்டுக்கொண்டோம் நாங்கள். ஒரு வழியில் மின்சாரமும் மிச்சம்.''

''ஆகா... கை தட்ட வேண்டும் போலிருக்கிறது; ஆனால், என் கரவொலி உங்கள் மௌனத்தைக் காயப்படுத்தும் என்று கட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது.''

''கையில் என்ன பெரியவரே?''

''காகிதப் பை.''

''பையில்?''

''கசாப்புக் கடைக் கறி.''

''பாலித்தீன் பை இல்லாமல் இது என்ன புதுப் பழக்கம்?''

''இனி, எங்கள் ஊரில் இதுதான் வழக்கம். பொருள் வாங்குவதும் அந்தப் பொருளின் கழிவைக் கடத்துவதும் முடிந்த வரையில் காகிதப் பையில்தான். பாலித்தீன் பையைப் புதைத்தால் மக்காது; அப்படிப் புதைத்தால், இந்த மண் எங்களை மன்னிக்காது.''

''பாலித்தீன் ஒழிந்ததா சின்னப்பாண்டி?''

''முடிந்தவரை ஒழிந்தது எமிலி. பாலித்தீன் பைகளில் தானியங்களை அடைப்பது பறவைகளுக்குச் செய்யும் துரோகம். சணல் சாக்கில் தானியம் அடைப்பதே தர்மம்.''

''எப்படி?''

''எங்களை நம்பியிருக்கும் பறவைகள் எங்கு போகும்? பாலித்தீன் பைகளைக் கொத்திக் கொத்தி அலகுடைந்துபோயின எங்கள் பறவைகள். கோணிச்சாக்குகளில் கொத்தித் தின்னட்டும் பறவைகள். பறவைகள் உயிர்த் தொகுதிகளின் பகுதிகள். பறவைகளின் காடுகளில் மனிதன் தின்னும்போது, மனிதர்களின் தானியத்தைப் பறவைகள் கொள்ளலாகாதா? கொத்தித் தின்ன உகந்தது கோணிச் சாக்குதான். அலகிட்ட துளை வழியே ஒழுகும் தானியங் கள் எறும்புகளின் உணவாகட்டும். கழற்றி எறிந்தால் கோணிச் சாக்குதான் மண்ணில் மக்கும். மண்ணின் வயிறு செரிக்க முடியாத எதுவும் மண்ணுக்கு உணவாக வேண்டாம்.''

''பாராட்டுகிறேன்.''

''ஏற்றுக்கொள்கிறேன்.''

''அது என்ன ஊருக்கு வெளியே பெருங்குவியல்?''

''மக்காத பொருள்களின் குப்பை அது. புதைத்தாலோ, எரித்தாலோ... மண்ணோ, காற்றோ மாசுறும்.''

''அதனால்?''

மூன்றாம் உலகப் போர்

''மக்காப் பொருள்களை அரைத்துச் சாலை இடும் தார்களில் கலந்துவிடுவோம்; அல்லது பெரும் கண்மாய்களின் மத்தியில் இந்தக் குப்பைகளைக் கொட்டி ஒரு தீவுத் திடல் செய்து, அதில் ஒரு சோலை உண்டாக்குவோம். படகில் எங்கள் குழந்தைகள் குப்பைத் தீவுக்குச் சுற்றுலா சென்று வரலாம்; பொதுப் பணித் துறைக்கு எழுதி யிருக்கிறோம்!''

கூட்டம்; பெருங்கூட்டம்.

பள்ளித்திடலில் ஊரே வழிந்தது.

பஞ்சாயத்துப் பெரியவர்களும் சின்னப்பாண்டியும் எமிலியும் இஷிமுராவும் மேடையில்.

வானொலியில் வாசிக்கிறவன் எங்கோ இருக்க, கீதம் கைதட்டல் பெறுவது மாதிரி, மூலம் சொன்னவள் மௌனமாய் இருக்க... மொழிபெயர்த்தவன் கைதட்டல் பெறு கிறான்.

எமிலியின் ஒவ்வொரு சொல்லும் திருவோட்டில் விழும் காசுகள் பிச்சைக்காரனால் கவனிக்கப்படுவதுபோல் கவனம் பெறுகின்றன.

''நான் அமெரிக்கப் பெண். விருந்தாளியாக வந்தேன்; உங்கள் வீட்டுக்கு வெள்ளைஅடித்துவிட்டுப் போகிறேன். ஊர் என்பது வெறும் மண்ணல்ல; மண்ணில் தண்ணீர் கலப்பதுபோல் ஓர் ஊரோடு தத்துவம் கலக்க வேண்டும். அந்தத் தத்துவத்தோடு சேர்ந்துதான் ஓர் ஊர் முழுமையை நோக்கி முன்னேறுகிறது.

இல்லாத எதையுமே மாற்றிவிட முடியாது. எங்களுக்குள் இருந்த ஒன்றுதான் கண்டெடுக் கப்பட்டிருக்கிறது. வசதியில்லாத ஊர் சுகாதாரமாக இருக்க முடியாது என்று யார் சொன்னது? வசதியில்லாத கூட்டுக்குள் வசிக்கும் ஒரு பறவை தன் அலகால் கோதிக் கோதிக் குஞ்சுப் பறவையைச் சுத்தம்

செய்கிறது. தன் கூடு கழிப்பறையாகிவிடாமல் காத்துக்கொள்கிறது. பறவைகளுக்கான வாழ்க்கைமுறைகூட மனிதர்களுக்கு இல்லையா என்ன?

உங்களைப் போன்ற உழைப்பாளிகள் உலகத்தில் மிகக் குறைவு. கல்வியும் பொரு ளாதாரமும் வாய்த்துவிட்டால் உலகத்தில் முன்னேறிய சமூகங்களைக்கூட நீங்கள்முந்தி விடுவீர்கள்.

நான் ஒரு சுற்றுச்சூழல் போராளி. தீய வாயுக்களை வெளியிட்டு உலகை மாசுபடுத்தும் வளர்ந்த நாடுகளை என்னால் நேசிக்க முடியவில்லை - அது என் தாய்நாடாக இருந்தால்கூட. வாயு வெளியீட்டைக் குறைத்துக்கொள்ளும் என்று வளர்ந்த நாடு கள் மீது எனக்கிருந்த நம்பிக்கை கொஞ்சம் குறையத் தொடங்கியிருக்கிறது. உடன் படிக்கைகள் எல்லாம் கையப்பமிட்ட பொய்களாகவே போய்விடுமோ என்று அஞ்சுகிறேன்.

புவி வெப்பமாகிக்கொண்டே இருக்கிறது என்பது சூடான உண்மை. அது பருவநிலை களைப் பாதிக்கிறது என்பது விஞ்ஞான யதார்த்தம். உங்கள் விவசாயம் அழிவதற்கு அதுவும் ஒரு பெருங்காரணம் என்பது நீங்கள் அறிந்தும் அறியாத செய்தி. நிலங் களை விற்க மாட்டோம் என்ற நிலைப் பாடு எடுத்த நீங்கள், பூமியை விட்டுவிட மாட்டோம் என்றும் போராட முன்வருவீர் களா?

உலக வெப்பத்திற்கு எதிரான போர் முறையை உலகத்தின் புதிய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுப்போம்... பூமியை மரங்களால் நிரப்புவோம். மரங்களெல்லாம் புவி வெப்பத்திற்கு எதிராய்க் கை தூக்கிப் போராடும் போராளிகள். பள்ளிப் பிள்ளைகள் இதில் ஈடுபடட்டும். விதைகளைக்கொண்டு மரங்களை நடுவோம்.

அறிவும் பண்பாடும் நம் பிள்ளைகளுக்கு இணை தண்டவாளங்களாக இருக்கட்டும். அறிவு ஈட்டிக் கொடுக்கும்; பண்பாடு காத்துக் கொடுக்கும். பிள்ளைகளே! ஆசிரியர் களை வீட்டுக்கு விருந்துக்கு அழையுங்கள். அவர்கள் உங்களைப் பெறாத பெற்றோர்கள். ஆசிரியர்களே! உங்கள் வகுப்பின் கடைசி மாணவர்களைத் தத்தெடுத்துக்கொள்ளுங்கள். வகுப்பில் வாழ்க்கை முறையும் சொல்லிக்கொடுங்கள்.

மிக உயர்ந்தது என்று கண்டறியப்பட்ட பொருள் எதுவோ, அது உங்கள் ஊரில் மலிவாகக் கிடைக்கிறது. பப்பாளி, நெல்லி, முருங்கை - மூன்றும் உங்கள் அன்றாட உணவாய் ஆகிப்போகட்டும். இந்த மூன்றும் உங்கள் கொல்லைப்புறத்து மரங்கள்ஆகட்டும்.

எனக்கொரு கனவு இருக்கிறது - உலகத்தின் எல்லாக் கிராமங்களும் மரங்கள் என்ற வட்டத்துக்குள் சூழப்பட்டிருக்க வேண்டுமென்று. ஒவ்வொரு கிராமத்தைச் சுற்றி 360 டிகிரியில் வட்டமிடுங்கள். அதில் மூன்றடுக்கு மரங்கள் நடுங்கள். அவற்றுக்குக் 'காவல் மரங்கள்’ என்று பெயரிடுங்கள். மரங்களின் சிறகடியில் ஓர் ஊர் பத்திரமாகப் பாதுகாக்கப்படட்டும். புவிவெப்பத்திற்கு எதிராக மனிதன் தொடுக்கும் முதல் போர் இதுவாக இருக்கட்டும்.

நான் அமெரிக்கா திரும்பினாலும் மீண்டும் இங்கு வருவேன். உங்கள் ஊரை உங்கள் மாநிலமும் - உங்கள் மாநிலத்தை இந்தியாவும் - இந்தியாவை உலகமும் திரும்பிப் பார்க்கட்டும். மீண்டும் சொல்கிறேன்; மீண்டும் வருவேன்!''

அவள்தான் அழகு என்றிருந்த கூட்டம் - அவள் பேச்சு அவளைவிட அழகு என்று கைதட்டியது!

ஒரு குழந்தை மேடை ஏறி எமிலிக்கும் இஷிமுராவுக்கும் வெற்றிலை மாலை சூடியது. வெற்றிலை போட்ட வாய்போல் வெற்றிலை மாலைக்குச் சிவந்தது அவள் கன்னம்.

சின்னப்பாண்டி அறிவித்தான்; ''நம் பிள்ளைகள் மரக்கன்றுகள் நட்டார்கள். ஒவ்வொரு மரத்துக்கும் நட்ட குழந்தையின் பெயரே சூட்டப்பட்டது. நட்ட மரத்தை நன்றாக வளர்ப்பதில் முதல் பரிசு பெறுகிறாள் செல்வி மல்லிகா - ஆறாம் வகுப்பு. முதல் பரிசு என்ன தெரியுமா? இன்னும் இரண்டு மரக்கன்றுகள். அந்தக் கன்றுகளை அந்தக் குழந்தையே நட்டுத் தன் அப்பா அம்மா பெயரைச் சூட்டிக்கொள்ளலாம் என்று அறிவிக்கிறோம்!''

மேடைக்கு வந்த மல்லிகா மரக்கன்றுகளை வாங்கிக்கொள்ளவில்லை; அழுதாள். நிறுத்தவில்லை; அடைமழை போல் அழுதாள். கூட்டத்தில் நின்ற அவள் ஆசிரியர்களும் அழுதார்கள். பொதுமக்கள் சிலரும் கண் கலங்கினார்கள்.

''ஏன் அழுகிறது குழந்தை?'' என்றான் இஷிமுரா.

''அந்தக் குழந்தைக்கு அப்பா அம்மா இல்லையாம்!''

இப்போது இஷிமுராவும் அழுதான்; குழந்தையின் தலை தடவி மார்போடு அணைத்தான்.

''நானும் உன்னை மாதிரிதான். எனக்கும் அப்பா அம்மா இல்லை. ஆனால் அழாதே. அப்பா அம்மா பெயர்கள் சூட்டி மரங்களை நடு. அப்பா அம்மாதான் குழந்தையை வளர்ப்பார்கள். நீ அப்பா அம்மாவையே வளர்க்கப்போகிறாய்... கொடுத்துவைத்த பெண்ணில்லையா?''

கறுப்புக் கன்னங்களின் கண்ணீரைத் துடைத்தது மஞ்சள் விரல்.

கலைந்தது கூட்டம்.

''ஊருக்கெல்லாம் பரிசு தந்தாய் சின்னப்பாண்டி. உனக்கொரு பரிசு தர வேண்டாமா?'' என்றான் இஷி.

''உங்கள் அன்பைவிடவா?'' என்றான் சின்னப்பாண்டி.

''ஆமாம். அன்பின் பரிசொன்றை உனக்குத் தர விழைகிறாள் எமிலி. உன்னைத் தனியாகச் சந்திக்க விரும்புகிறாள்; அவளை அழைத்துப் போ.''

''எங்கே?''

''உனக்குப் பிடித்த ஓர் இடத்திற்கு!''

சின்னப்பாண்டியின் மூளைக்குள் ஒரு படபடப்பு;

ஆயிரம் பட்டாம்பூச்சிகளின் படையெடுப்பு!

- மூளும்