என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

பேத்திக்குப் புடவை கொடுத்த தாத்தா!

பேத்திக்குப் புடவை கொடுத்த தாத்தா!

##~##

'உண்மையை என்றும் அழிக்க முடியாது.’

 இந்த வாக்கியத்தை 20 தடவை எழுத வேண்டும். கட்டளை இட்டவர் காந்திஜி. 'வேறு வழி இல்லை’ என்று கஸ்தூரிபாய் குஜராத்தியில் எழுதுவார்.

''எனக்கும் பாவுக்கும் வாராவாரம் பரீட்சை உண்டு. அதில் சரியாக எழுதாவிட்டால், இந்த மாதிரி தண்டனை கிடைக்கும். என்னைவிட அதிக முறைகள் பாவுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது'' என்றார் 'மனு’ என மகாத்மாவால் செல்லமாக அழைக்கப்பட்ட, அவர் பேத்தியான குமாரி மனுபாய் காந்தி.

அமைதியும் சாந்தமும் ததும்பும் முகம். மெலிந்த தேகம். ஆனால், பாபுவின் வாரிசாக முகத்தில் மிளிரும் புன்சிரிப்பு. 'எம்.எஸ். ப்ளூ’ என நாம் சிறப்பித்துக் கூறும் நீல நிறத்தில், கோபி நிறத்தில் அச்சிடப்பட்ட கதர் துணியை குஜராத்தி பாணியில் புடவையாக உடுத்தி, அதே வண்ண சோளி அணிந்து பளிச்சென்று விளங்கு கிறார். எளிமை... கற்பனைக்கும் மீறிய எளிமை!

பேத்திக்குப் புடவை கொடுத்த தாத்தா!

மகாத்மாவின் நூற்றாண்டு விழாவையட்டி, காந்திஜியின் வாழ்க்கை வரலாறு, அவரது கொள்கைகள் ஆகியவற்றைச் சிறந்த முறையில் மக்களுக்கு உணர்த்துவதற்காக அமைக்கப்பட்ட 'காந்தி தர்ஷன்’ ரயிலில் சென்னைக்கும் வந்திருந்தார் மனுபாய் அவர்கள்.

''நான் பள்ளிக்குச் சென்று படித்ததே கிடையாது. நான் கற்றதெல்லாம் பாபுஜியிடம்தான்'' என்கிறார். பள்ளிக்கே செல்லாத இவர், இதுவரை எழுதி வெளியிட்டு இருப்பவை 22 புத்தகங்கள். அனைத்தும் காந்திஜியையும் காந்தியத்தையும் பற்றியவை.

காந்திஜியுடன் வெகு காலம் நெருங்கி வாழ்ந்துவந்த இவர், தனது வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளில் இரண் டைக் கூறினார்.

''அன்று எனக்கு 103 டிகிரி ஜுரம். பாபுவுக்குத் தினமும் நான் தயாரிக்கும் உணவான காக்ரா (கோதுமை மாவில் தயாரித்த பண்டமான இது, வட்டமாக அப்பளம்போல் மொறுமொறுவென்று இருக்கும்) இரண்டைச் சுட்டு எடுத்துக்கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.

ஜுர வேகம் நிறைந்த என்னைப் பார்த்தவுடன் ரொம்பக் கோபம் வந்துவிட்டது பாபுவுக்கு. 'உனக்கு ஜுரமாக இருக்கும்போது, உன்னை வருத்திக்கொண்டு எனக்காக நீ ஏன் சமைக்க வேண்டும்?’ எனக் கடிந்து கொண்டு, சாப்பிடாமலேயே போய்விட்டார். நானும் பிடிவாதமாகப் பேசாமல் இருந்தேன். நாள் முழுவதும் அவர் என்னுடன் பேசாதது சித்ரவதையாக இருந்தது. கடைசியில், இரவில் 'பாபு என்னை மன்னித்துவிடுங்கள்’ என அழுதுவிட்டேன் நான். உடனே வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொண்டு, பரிவோடு 'குழந்தாய்! உன் உடல் நலத்தை நீ பார்த்துக்கொள்ள வேண்டாமா?’ என்றார் கம்மிய குரலில். என்னிடம் கோபித்துக்கொண்டதற்காக அன்று முழுவதும் அவர் சாப்பிடவில்லை; அவருக்கு அவரே கொடுத்துக்கொண்ட தண்டனை அது.

பாபுவுக்கு அடிக்கடி கோபம் வரும் என்றாலும், அவர் அன்பின் சிகரம். நவகாளி யாத்திரைக்குப் பிறகு பீகாரில் யாத்திரை செய்துகொண்டு இருந்த சமயம் எனக்கு அப்பென்டிசைட்டிஸ் காரணமாக மிகவும் அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. நள்ளிரவில் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சையின்போது, அறுவை சிகிச்சை அரங்கிலேயே மருத்துவர்களைப் போல் வாயையும் மூக்கையும் துணியால் கட்டிக்கொண்டு முழு சிகிச்சையையும் கவனித்துக்கொண்டு இருந்தார் பாபு. அந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது'' என்கிறார் மனு.

பேத்திக்குப் புடவை கொடுத்த தாத்தா!

பாபுஜி தன் கையினாலேயே நூற்ற அந்த நூலைக் கொண்டு இவருக்கு ஒரு புடவை நெய்து தந்திருக்கிறார். அதனை இவர் பெரும் பொக்கிஷமாக மதித்துப் பத்திரமாக வைத்திருக்கிறார்.

காந்திஜியின் பேச்சுக்களில் ஒன்றைக் கூறும்போது மனுவுக்குக் குரல் தழுதழுத்தது. அது, ''நான் வியாதியில் படுத்து மிகவும் துன்பப்பட்டு இறந்தால், நான் உயர்ந்த மனிதன் அல்ல என நீங்கள் பொதுமக்களுக்குக் கூறுங்கள். திடீரென்று யாராலாவது நான் தாக்கப்பட்டு தெய்வத்தின் பெயரைக் கடைசித் தருணத்திலும் உச்சரித்தபடி என் உயிரை விடுவேனாயின் உண்மையிலேயே தெய்வத்தின் மகன் நான் எனக் கூறலாம்.''

இந்த வார்த்தைகளை காந்திஜி கூறியது அவர் குண்டுக்குப் பலியாவதற்குச் சரியாக 24 மணி நேரத்துக்கு முன்புதானாம்.

புனிதர் காந்திஜியுடன் வாழும் பாக்கியம் பெற்ற சந்ததியினர் புனிதமானவர்கள்தான். அவர்களுள் யாருக்கும் கிட்டாத பாக்கியம் மனுவுக்குக் கிடைத்திருக்கிறது.

ஆம்! காந்திஜி - கஸ்தூரிபாய் இருவருமே இவரது மடியில் படுத்தவாறுதான் உயிர் துறந்தார்கள்!

- குயிலி