என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

கலைஞரையே கண்ணாடிக்குள்ள அடைச்சிட்டியேய்யா!

அடடே அசத்தல்

##~##

'ஸ்ரீதர் என்ற வாலிபர், கண்ணாடி பாட்டில்களுக்குள் துல்லியமாக ஓவியம் வரைந்து அசரடிக்கிறார். டிரம்ஸ் வாசிப்பதிலும் வல்லவர். இந்த இரு கலைகளிலும் தன் திறமையை நிரூபித்து இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறார். இவரை நீங்கள் சந்திக்கலாமே?’ - வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் தந்த கே.கே.நகர் வாசகர் குமரேசனின் விருப்பத்துக்கு இணங்க ஸ்ரீதரைச் சந்தித்தேன்.

 ''சாதிக்கணும்கிற வெறி சின்ன வயசுல இருந்தே உண்டுங்க. அப்பவே நல்லா ஓவியம் வரைவேன். ஸ்கூல், காலேஜ்ல ஓவியப் போட்டினா எனக்குத்தான் முதல் பரிசு. சென்னை மாணவர்களுக்கான ஒரு ஓவியப் போட்டியில கலந்துகிட்டப்ப எல்லாருக்கும் வரையறதுக்கு சார்ட் கொடுத்தாங்க. 'எப்பப் பார்த்தாலும் ஏன் ஒரே மாதிரி சார்ட்லயே படம் வரையணும்?’னு யோசிச்சுட்டு தண்ணி குடிக்கற கண்ணாடி டம்ளர்ல வீரசிவாஜி ஓவியத்தை வரைஞ்சேன். 'நீ ரூல்சை மீறிட்ட. அதனால உனக்குப் பரிசு கிடையாது. ஆனா, மத்தவங்க வரைஞ்சதைவிட நீ வரைஞ்ச ஓவியம்தான் பெஸ்ட்’னு பாராட்டினாங்க. அந்தப் பொறிதான் இந்தச் சாதனைகளுக்குத் தூண்டுதல்.

கலைஞரையே கண்ணாடிக்குள்ள அடைச்சிட்டியேய்யா!

வாய் அகலமா உள்ள கண்ணாடி பாட்டில்கள்ல கையைவிட்டு எளிதா ஓவியம் வரைஞ்சுடலாம். ஆனா, குறுகலான பாட்டில்கள்ல ஓவியம் வரையறது சவாலானது. அதுவும் தலைகீழா வரைஞ்சாத்தான் பாட்டிலைத் திருப்பிப் பார்க்கிறப்ப ஓவியம் நேராத் தெரியும். தப்பா வரைஞ்சா அழிக்கிறதும் கஷ்டம்.  எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின்னு தலைவர்கள்தான் என் சாய்ஸ். ஒரு பாட்டில்ல ஓவியம் வரையறதுக்கு ரெண்டு நாள் எடுத்துப்பேன். ஒருமுறை, கலைஞரோட ஓவியத்தை அவர்கிட்ட காட்டி கையெழுத்து வாங்குறப்ப, 'எங்க அப்பாவையே பாட்டிலுக்குள்ள அடைச்சுட்டீயே?’னு சிரிச்சுக்கிட்டே ஸ்டாலின் சார் என்னைப் பாராட்டினார்.

இங்க பாட்டில்கள் கிடைக்கிறதுதான் பெரும் கஷ்டம். ஐந்து ரூபாய்ல இருந்து 200 ரூபாய் வரைகூட விலைகொடுத்து பாட்டில் வாங்கி இருக்கேன். 'வெளியில கிடக்கிற குப்பையை எல்லாம் ஏண்டா வீட்ல கொண்டுவந்து கொட்டுற’னு வீட்லயும், 'பாட்டில்ல படம் வரையிறதெல்லாம் ஒரு பொழப்பா?’னு நண்பர்களும் கிண்டலடிச்சாங்க. எதையும் காதுல போட்டுக்காம நான் இதையே முழுநேரத் தொழில் ஆக்கிக்கிட்டேன். இப்படியே 1,000 பாட்டில்கள்ல கிட்டத்தட்ட எல்லாத் தலைவர்களோட படங்களையும் வரைஞ்சேன். இதுலயே இன்னும் ஏதாவது ரிஸ்க் எடுத்து சாதனை பண்ணணும்னு தோணுச்சு. 100 பாட்டில்களைவெச்சு திருவள்ளுவர் ஓவியம் வரைஞ்சேன். அதே மாதிரி உலகத் தலைவர்கள்ல இருந்து சினிமா ஸ்டார் வரை 181 பிரபலங்களை ஒரே பாட்டிலுக்குள் வரைஞ்சேன். இந்த ரெண்டையும் வரைஞ்சு முடிக்கிறதுக்கு ஒன்பது மாசம் ஆச்சு. இது இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிச்சது.

கலைஞரையே கண்ணாடிக்குள்ள அடைச்சிட்டியேய்யா!

ரொம்பவே நுணுக்கமா ஓவியம் வரையறதால கண்ணுல கொஞ்சம் பிரச்னை வந்துச்சு. பாட்டில்ல ஓவியம் போடுறதைக் கொஞ்சம் கொஞ்சமாக் குறைச்சுக்கிட்டு டிரம்ஸ் கத்துக்கலாம்னு முடிவு பண்ணி, பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சேன். ஒருநாள் சாயங்காலம் 6 மணி வாக்கில் என் ஃப்ரெண்டுக்கு டிரம்ஸ் வாசிச்சுக் காட்டினேன். 'நேரமாகிடுச்சு நான் கிளம்புறேன்’னு சொல்லிட்டு அவன் போனபிறகும் தொடர்ந்து வாசிச்சுட்டே இருந்தேன். ஆர்வத்துல விடிய விடிய வாசிச்சுக்கிட்டு இருந்தது மறுநாள், அதே ஃப்ரெண்டு மறுபடியும் வீட்டுக்கு வந்தப்பதான் எனக்கே புரிஞ்சுது. இந்த சம்பவம்தான் ஒருநாள்

கலைஞரையே கண்ணாடிக்குள்ள அடைச்சிட்டியேய்யா!

முழுவதும் தொடர்ந்து டிரம்ஸ் வாசிக்க முடியும்ங்கிற நம்பிக்கையை எனக்குள்ள விதைச்சது. இந்தச் சாதனையை பண்ண வீட்டுல பணம் கேட்டதும் தயங்காம ரெண்டரை லட்ச ரூபாயை எடுத்துக்கொடுத்தாங்க. சில நண்பர்களும் சி.எஸ்.எஸ். நிறுவனமும் செஞ்ச உதவியால இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சார் முன்னிலையில் 24 மணி நேரம் தொடர்ந்து டிரம்ஸ் வாசிச்சு இந்திய சாதனை புத்தகத்தில் மறுபடியும் இடம்பிடிச்சேன். சாதிக்கணும்... சாதிக்கணும்... சாதிக்கணும்... இந்த யோசனைதான் என் ரத்தத்துல எப்பவும் ஓடிக்கிட்டே இருக்குங்க சார்'' என்கிறார் ஸ்ரீதர்!

நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ஜெ.தான்யராஜு