என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

என் ஊர் : நுங்கம்பாக்கம்

பிள்ளைத்தாச்சி வயிறுபோல பிதுங்கி நிற்கும் ஏரியா!

##~##

''இது, சென்னையின் பழமையான, அதேசமயம் கால மாற்றத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை நவீனமாகவும் மாற்றிக்கிட்டப் பகுதி' - தான் பிறந்து வளர்ந்த நுங்கம்பாக்கம் அனுபவம் பேசுகிறார் நடன இயக்குநர் கலா மாஸ்டர்.

 'மகாலிங்கபுரம் - காம்தார் நகர் மெட்ரோ ஃபிளாட்தான் எனக்கும் நுங்கம்பாக்கத்துக்குமான முதல் பரிச்சயம். ஆரம்பத்துல அங்க வாடகைக்குத்தான் குடியிருந்தோம். அப்புறம் அந்த வீட்டையே சொந்தமா வாங்கினோம். அந்த அளவுக்கு இது அதிர்ஷ்டமான ஏரியா. இங்க வந்தபிறகுதான் அசிஸ்டென்ட்டா இருந்த எனக்கு டான்ஸ் மாஸ்டர் புரொமோஷன் கிடைச்சுது.

என் ஊர் : நுங்கம்பாக்கம்

அப்ப இங்க டிராஃபிக்ங்கிற பேச்சுக்கே இடம் இல்லை. எப்பயாவது ஒண்ணு, ரெண்டு வாகனங்கள் வந்தா உண்டு. நானும், என் சிஸ்டர்ஸும் ரோட்ல கிரிக்கெட் விளையாடினது இப்பவும் ஞாபகம் இருக்கு. அப்ப ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறைதான் இந்தப் பகுதியில பஸ் வரும். ஒரு பஸ்ஸைத் தவறவிட்டா அடுத்த பஸ்ஸுக்கு ஒரு மணி நேரம் காத்திருக்கணும். எங்க போகணும்னாலும் சைக்கிள் பயணம்தான். 'உலகம் சுற்றும் வாலிபன்’ போல, நுங்கம்பாக்கத்தை சைக்கிள்ல சுற்றிவந்த நாட்கள் இனிமையானவை. இன்னைக்கு சாமானிய மக்களின் வீட்லகூட பைக் இருக்கு. இது ஆடம்பரம்கிற நிலையில இருந்து அத்தியாவசியம்கிற அளவுக்கு வாழ்க்கை முறையும் மாறிடுச்சு.

பொட்டல்காடா இருந்த இந்த இடத்தில், அப்ப மருந்துக்குக்கூட மரங்கள் கிடையாது. ஆனா, இன்னைக்கு மரங்கள் நிறைஞ்ச பசுமையான பகுதியா மாறிடுச்சு. இவ்வளவு மரங்களை யார் நட்டு வளர்த்தாங்கனு தெரியலை. அவங்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும். அப்ப அங்கொண்ணும் இங்கொண்ணுமா ஒரு சில வீடுகளே இருந்துச்சு. சில பெட்டிக்கடைங்களைத் தவிர வேற கடைகளே இந்தப் பக்கம் கிடையாது. காய்கறி வாங்கணும்னா கோடம்பாக்கம் பாலத்துக்குக் கீழே இருக்கிற மார்க்கெட்டுக்கும் துணிமணிகள் வாங்க பாண்டி பஜார் பக்கமும்தான் போகணும். ஆனா, இன்னைக்கு வீடுகள் எல்லாம் அபார்ட்மென்ட், பங்களாக்களா உருமாறிடுச்சு.

என் ஊர் : நுங்கம்பாக்கம்

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் ஏரியா அவ்வளவு அமைதியா இருக்கும். பாவாடை, சட்டை போட்டுக்கிட்டு ஐயப்பன் கோயிலுக்குப் போயிருக்கேன். கார்த்திகை மாசம் மக்கள் கூட்டத்தால் அந்த ஏரியாவே பிள்ளைத்தாச்சி வயிறுபோல பிதுங்கி நிற்கும். நான் இப்ப நுங்கம்பாக்கத்தைவிட்டு வேற இடத்துக்குப் போயிட்டாலும் எனக்கும், நுங்கம்பாக்கத்துக்குமான பிணைப்பை இன்னும் முறியாம வெச்சிருக்கிறது இந்தக் கோயில்தான்.  

மத்திய அரசுக்கும் நுங்கம்பாக்கத்துக்கும் நெருங்கின தொடர்பு உண்டு. வருமான வரி அலுவலகம், தொழிலாளர் காப்பீட்டு நிறுவன மண்டல அலுவலகம், சுங்கவரி அலுவலகம், பாஸ்போர்ட் ஆபீஸ்னு பல சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஆபீஸ் இங்கத்தான் இருக்கு. சிரஞ்சீவி, அல்லு அர்விந்த், எஸ்.பி.பி., இயக்குநர்கள் ஹரிஹரன், பாக்யராஜ்னு சினிமா ஜாம்பவான்கள் வாழுற இடமும் இதுதான். ஆனாலும், இந்த ஏரியாவுல ஒரு தியேட்டர்கூட கிடையாது. படம் பார்க்கணும்னா மவுன்ட் ரோடுதான் போகணும்.

திருவள்ளுவர் நினைவா கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம் இங்கதான் இருக்கு. திருவாரூர் கோயில் தேர் மாதிரி பளிங்குக் கல்லால் செதுக்கப்பட்ட தேர்தான் வள்ளுவர் கோட்டத்தின் ஸ்பெஷல். ஆனா, உண்மையைச் சொல்லணும்னா சின்ன வயசுல வள்ளுவர் கோட்டத்துக்கும், எனக்கும் ஒட்டுதலே கிடையாது. இப்ப நிறைய கண்காட்சிகள் அங்க நடக்குது. சின்ன வயசுல போகாததுக்கும் சேர்த்துவெச்சு எந்தக் கண்காட்சி நடந்தாலும் போயிட்டு இருக்கேன். நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் கிரவுண்ட்லதான் ஜனவரி மாசம் 'சென்னை ஓப்பன் டென்னிஸ்’ போட்டி நடக் கும். ரஃபேல் நடால், மகேஷ் பூபதி, சோம்தேவ் தேவ்வர்மன்னு நட்சத்திர வீரர்கள் விளையாடின பெருமை இந்த கிரவுண்டுக்கு உண்டு.

என் ஊர் : நுங்கம்பாக்கம்

87 வருஷப் பழமையான லயோலா கல்லூரியும் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டுலதான் இருக்கு. ஏகப்பட்ட வி.ஐ.பி-க்கள் இங்க படிச்சவங்கதான். புகழ்பெற்ற எம்.ஓ.பி. வைஷ்ணவா, விமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜ் இரண்டும் ஒரே ரோட்டுல இருக்கிறது இன்னொரு சிறப்பு. அதனால்தான் இந்த ரோட்டுக்கு காலேஜ் ரோடுனே பேர் வந்துச்சு. இப்படிச் சொல்லச் சொல்ல நுங்கம்பாக்கத்தோட சிறப்பு சலிக்காது!'

- சி.காவேரி மாணிக்கம்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்