என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

பணம் என்னடா பணம்... மனம்தானடா நிரந்தரம்!

கேரளத்தின் மனிதநேயன்

##~##

யக்குநர் பார்த்திபனின் மனிதநேய மன்றத்தின் சார்பாக 'மனிதநேயன் விருது’ வழங்கும் விழா, சென்னை அசோக் நகர் லட்சுமி ஹாலில் நடந்தது. நீதிபதி சந்துரு, இயக்குநர் பாக்யராஜ், நடிகர் பிரசன்னா உட்பட பலர் கலந்துகொண்ட இந்த  நிகழ்ச்சியில் மனிதநேயன் விருது பெற்றவர் கேரளாவைச் சேர்ந்த லாட்டரி சீட்டு விற்பனையாளர் சுரேஷ். அவருக்கு ஏன் இந்த விருது வழங்கப்பட்டது?

 கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குண்டூரைச் சேர்ந்தவர் சுரேஷ். எர்ணாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலுவாகடுநல்லூர் என்ற ஊரில் லாட்டரி டிக்கெட் விற்பவர். கடந்த ஜனவரி 21-ம் தேதி, ஐயப்பன் என்ற 60 வயது முதியவர் இவரிடம் லாட்டரி டிக்கெட் வாங்க வந்தார். ஐந்து டிக்கெட் வாங்கியவர், பணம் தரவில்லை. 'இந்த ஐந்து டிக்கெட்டையும் தனியா எடுத்து வெச்சுடுறேன். காலையில பணத்தைக் கொடுத்துட்டு டிக்கெட் வாங்கிக்குங்க’ என்று சொல்லியிருக்கிறார் சுரேஷ். மறுநாள் லாட்டரிச் சீட்டு குலுக்கல் முடிவில், ஐயப்பனுக்காக சுரேஷ் எடுத்து வைத்த ஐந்து லாட்டரி டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு கோடியே நாற்பதாயிரம் ரூபாய் பரிசு கிடைத்தது தெரியவந்தது. உடனடியாக, அந்த ஐந்து டிக்கெட்டுகளையும் எடுத்துக்கொண்டு ஐயப்பன் வீட்டுக்குச் சென்ற சுரேஷ், அவரிடம் விவரத்தைச் சொல்லி, டிக்கெட்டுக்கான 250 ரூபாய் பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு லாட்டரிச் சீட்டுகளை அவரிடமே கொடுத்துவிட்டு திரும்பியிருக்கிறார். இந்த நேர்மைக்காக சுரேஷைக் கேரளாவே கொண்டாடிக்கொண்டு இருக்கும் சூழலில்தான், பார்த்திபன் அவரை சென்னைக்கு அழைத்துவந்து 'மனித நேயன்’ விருது வழங்கினார்.

பணம் என்னடா பணம்... மனம்தானடா நிரந்தரம்!

'' 'நான்தான் பணம் தரலையே டிக்கெட்டை எடுத்துக்கிட்டு பணத்தையும் நீங்களே வாங்கிக்குங்க’னு ஐயப்பன் சொன்னார். ஆனால், 250 ரூபாய் பணத்தை வாங்கிட்டு டிக்கெட்டை அவர் கையில திணிச்சுட்டு வந்துட்டேன். 'கடவுள் நமக்கு இதைக் கொடுக்கலை. அதனால உரியவங்ககிட்ட இந்தப் பணம் போய்ச் சேர்றதுதான் நியாயம்’னு என் மனைவியும் சொன்னாங்க. 'என்னய்யா பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கியே’னு அக்கம்பக்கத்துல கிண்டல் பண்ணினாங்க. ஐயப்பனுக்கு 30, 28 வயசுல ரெண்டு பெண் குழந்தைகள். அவங்களை எப்படிக் கரை சேர்க்கறதுனு திண்டாடிக்கிட்டு இருந்தார். அதனால அவங்களைக் கைதூக்கிவிட கடவுள் தந்த பரிசு இது. எனக்கு ஒரு தமிழ் நடிகர் பாராட்டி விருது தந்தது, தமிழ்நாடே பாராட்டிய உணர்வை ஏற்படுத்துது'' என்று நெகிழ்ந்தார் சுரேஷ். இத்தனைக் கும்,

பணம் என்னடா பணம்... மனம்தானடா நிரந்தரம்!

தினமும் 18 கி.மீ. சைக்கிள் மிதித்து லாட்டரி விற்பது, டீக்கடைவைத்து நடத்தும் அண்ணன், செங்கல் அறுக்கும் தம்பி, கூலி வேலைக்குச் செல்லும் அக்கா என, சுரேஷின் பின்புலமும் சோகமயமானதுதான். ''நாங்க அந்த ஒரு கோடி ரூபாயை எடுத்திருந்தாக்கூட எங்களுக்கு இந்தளவுக்குப் பெருமை வந்திருக்காது. அவ்வளவு நல்லவங்களை இப்போ பார்க்கிறோம். இதுவரைக்கும் 61 மேடைகள்ல எங்களைப் பாராட்டியிருக்காங்க. வி.கே. லாண்ட் தீம் பார்க் உரிமையாளர், எங்க பசங்க படிப்புக்கு உதவி செய்றதா சொல்லியிருக்கார். எங்க மாநில முதல்வர் நேரில் அழைச்சு பெருமைப்படுத்துறார். ஆயுசுக்கும் இதுபோதும் சார் எங்களுக்கு'' என்று நெகிழ்கிறார் சுரேஷின் மனைவி தீபா. எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஸ்ரீலட்சுமியும், நான்காம் வகுப்பு படிக்கும் மகன் ஸ்ரீஹரியும் அப்பாவைக் கட்டிக்கொண்டு முத்தமழை பொழிகிறார்கள்.

விழாவை நடத்திய நடிகர் பார்த்திபன், ''ஒரு குக்கிராமத்தில் இவ்வளவு மனிதநேயத்தோட இருக்கிற ஒருத்தரைப் பாராட்டாம விட்டா தப்புனு தோணுச்சு. அதிகம் பேசத் தெரியாத அப்பாவி; நல்ல மனசுக்காரர். சுரேஷை கேரளாவில் இருந்து விமானத்துல சென்னைக்கு அழைச்சிட்டு வந்தேன். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தங்கவெச்சேன். ஒரு கோடி வேணாம்னு சொன்ன ஈரமுள்ள இந்த மனுஷனை ரெண்டு கோடி மதிப்புள்ள லிமோசன் கார்ல விழாவுக்கு வரவழைச்சேன். அவருக்கு அந்தத் தகுதி கண்டிப்பா இருக்கு. 100 லட்சம் வேணாம்னு சொன்னவருக்கு எங்களோட அன்புப் பரிசா நூறாயிரம் தந்தது எங்களுக்குப் பெருமை'' என்றார்!

-க.நாகப்பன்
படம்: அ.ரஞ்சித்