என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

சங்கீதராஜர்... செளந்தரராஜர்!

சங்கீதராஜர்... செளந்தரராஜர்!

சங்கீதராஜர்... செளந்தரராஜர்!

##~##

சென்னை, தி.நகர் சர்பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் 90-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் இருந்து வாசகர்களுக்காகச் சில துளிகள்.

தன் குடும்பத்தாருடன் விழா அரங்கில் நுழைந்த டி.எம்.எஸ்ஸை அவருடைய ரசிகர்கள் மலர்த் தூவி மேடைக்கு அழைத்து வந்தனர். பின்னணியில், 'மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்’ என்ற பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது. டி.எம்.எஸ். ராஜசிம்மாசனத்தில் அமர்ந்தபோது, அரங்கமே கரவொலிகளால் அதிர்ந்தது.

பிறந்த நாள் கேக் வெட்டிய டி.எம்.எஸ்., முதல் துண்டை தன் மனைவிக்கு ஊட்டிவிட முயல அவர் வெட்கத்தில் தலைகுனிய, அரங்கில் சிரிப்பலை. பிறகு, தனக்கு ஊட்டியது போக டி.எம்.எஸ். கையில் மீதமிருந்த கேக்கை வாங்கித் தன் கணவருக்கு ஊட்டி மகிழ்ந்தார் டி.எம்.எஸ்ஸின் மனைவி. இரண்டாவது கேக் துண்டை நண்பர் எம்.எஸ்.வி.க்கு ஊட்டினார். இடையிடையே 'கலைமாமணி... சிம்மக் குரலோன்... இசைச் சக்கரவர்த்தி... வாழ்க வாழ்க...’ என்ற கோஷங்கள் இடைவிடாது ஒலித்தபடி இருந்தன.

சங்கீதராஜர்... செளந்தரராஜர்!

இலங்கையில் இருந்து வந்து, இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்த சாம்பசிவ மணிகுருக்கள் பேசும்போது, ''எனக்கு பைபாஸ் சர்ஜரி பண்ணி ஒரு மாசம்தான் ஆச்சு. நான் அவர்கிட்ட நேர்ல போய், 'உங்களுக்குப் பிறந்த நாள் விழா எடுக்கப் போறேன்’னேன். 'நீ சின்னப் பையன். பெரியவங்களுக்குப் பிறந்த நாள் விழா எடுத்தா உன் உடம்புக்கு ஆகாது’ன்னார். உடனே நான் என் சட்டையைக் கழற்றிக்காட்டி, 'இப்பதான் சர்ஜரி பண்ணிட்டு உங்களுக்கு விழா எடுக்கணும்னு ஆசையா வந்திருக்கேன். மறுக்காதீங்க’னேன். 'ஓ.கே. வர்றேன்’னு சம்மதம் சொல்லிட்டார். 2005-ல் இவர் பாடின பாட்டு டியூன்கள்ல பக்திப் பாடல்களைப் பாடி நான் கேசட்கள் போட்டிருந்தேன். அதைக் கேட்டுட்டு, 'யோவ் அச்சு அசலா என்னை மாதிரியே பாடிட்டீயே’னு சொல்லி தன் கழுத்துல இருந்த ரெண்டு பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றி எனக்குப் போட்டுவிட்டார். இசையை நேசிக்கிறவங்களுக்கு வாரிவாரி வழங்கிய டி.எம்.எஸ். வாழ்க’ என, அவர் பேசப் பேச டி.எம்.எஸ். கண்களில் கண்ணீர்.

அடுத்து மைக் பிடித்த எம்.எஸ்.வி., ''ஒரே சூரியன், ஒரே நிலா, ஒரே டி.எம்.எஸ்.தான்'' என்று சுருக்கமாகத் தன் பேச்சை முடித்துக்கொண்டார். ''டி.எம்.எஸ். ஒரு சகாப்தம். இவரும் நடிகர்தான். ஆமாம், குரலிலேயே நடிப்பார். எனக்குப் பாட வேண்டும் என்றால் என்னைப் போலப் பாடுவார். சிவாஜிக்கு, சிவாஜி பாடுவதுபோலவே பாடுவார். இனி யாராலும் இவருடைய இடத்தைப் பிடிக்க முடியாது'' என்றார் எஸ்.எஸ்.ராஜேந்திரன். பாடகி சுசீலா, ''எனக்கு அப்ப தமிழ் தெரியாது. எம்.எஸ்.வி.தான் என்னைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். டி.எம்.எஸ்ஸையும் அவர்தான் அறிமுகப்படுத்திவைத்தார். 90 வயசுலயும் நானும் அவரும் பாடிக்கிட்டுதான் இருக்கோம். தமிழ் சினிமாப் பாடல்கள்னா எம்.எஸ்.வி., டி.எம்.எஸ்., சுசீலானு மூன்று பேரும் எப்பவும் இருந்துகிட்டே இருப்போம்'' என்றார்.

அடுத்துதான் அதிரடி. ''எல்லோரையும் கேட்கவைத்தவர்/ இன்று கேக் கொடுத்தவர்/சங்கீதராஜர்/ வெங்கலக் குரலுக்குச் சொந்தக்காரர்/எங்கள் சௌந்தரராஜர்/ நான் பிறந்தது மாயவரம்/ அதனால் வந்தது எனக்கு ஸ்வரம்''. ஆமாம், அடுத்து வந்து வாயாலேயே வயலின் வாசித்தவர் டி.ராஜேந்தர். 'டிண்டாக்கு... டிண்டா... டிண்டா... ஜிமுக்கு ஜிப்பா ஜிமுக்கு...'' என பத்து நிமிடங்களுக்கும் மேல் வாயாலேயே பல்வேறு வாத்தியக் கருவிகளின் ஒலிகளை கொண்டுவந்தவரை, 'தலைவா நீ இங்க இருக்க வேண்டிய ஆளே கிடையாது’ என ரசிகர் ஒருவர் மேலும் சூடேற்றிவிட, மீண்டும் தொடங்கிய வாய் வாத்தியம் அடங்க வெகுநேரம் பிடித்தது.

''எனக்காக இவ்வளவு நல்ல உள்ளங்கள் இருக்கிறதைப் பார்க்கறப்ப மனசுக்கு நிறைவா இருக்கு. என் ரசிகர்களுக்கும் எனக்காக  இங்கே வந்திருக்கிற எல்லாருக்கும் நன்றி'' என்று ஏற்புரையைச் சுருக்கமாக முடித்தார் டி.எம்.எஸ்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி
படம்: அ.ரஞ்சித்

'அம்மா' வைத்த பெயர்!

'மௌன ராகம்’ முரளி, தமிழ் சினிமாப் பாடகர்களுக்கு ரொம்பவே நெருக்கம். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் ஆயிரம் இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியவர், சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் தன் முதல் திறந்தவெளி அரங்க நிகழ்ச்சியை நடத்தினார். 'ரசிகர்களுடன் எஸ்.பி.பி’ என்பதுதான் கான்செப்ட். ரஜினிக்காகத் தான் பாடிய பாடல்களை எஸ்.பி.பி. பாடப் பாட, அரங்கமே ...ச்சும்மா அதிர்ந்துச் சுல்ல?

சங்கீதராஜர்... செளந்தரராஜர்!

'சின்ன வயசுல இருந்தே எப்பவும் சினிமாப் பாட்டுப் புத்தகமும் கையுமாத்தான் இருப்பேன். இளையராஜா, எம்.எஸ்.வி. பாட்டு கேட்கிறதுதான் என் முழு நேரப் பொழுதுபோக்கே. அந்தச் சமயத்துலதான் 'நாமே ஏன் ஒரு இசைக் குழுவை தொடங்கக்கூடாது?’னு தோணுச்சு. பெரும் போராட்டத்துக்குப் பிறகே இந்தக் குழுவை ஆரம்பிக்க முடிஞ்சுது. எங்க குழுவுக்கு இந்தப் பெயரைவெச்சது எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாதான். மூணு பெயர்களை எழுதிட்டு போய் அவங்ககிட்ட கொடுத்தேன். அவங்க தேர்வு பண்ணிக் கொடுத்ததுதான் 'மௌனராகம்’. இதுவரை 1,000 கச்சேரிகளுக்கு மேல் நடத்தியிருக்கோம். தமிழ் சினிமாவுல இதுவரை வந்த எல்லாப் படப் பாடல்களையும் பாடிட்டோம். இன்னைக்கு எஸ்.பி.பி., மனோவில் ஆரம்பிச்சு எல்லாப் பாடகர்களையும் வெச்சு நிகழ்ச்சி நடத்துற அளவுக்கு உயர்ந்து இருக்கோம். 'திரையில் பரதம்’, 'தமிழ்த் திரையில் காந்தக் குரல்கள்', 'ரஜினியும் நானும்’னு ஏகப்பட்ட கான்செப்ட்டுகள்ல நிகழ்ச்சிகளை நடத்துறோம். இதுவரை எவ்வளவோ நிகழச்சிகள் பண்ணியிருந்தாலும், முதல்முதலா திறந்தவெளியில் நடத்துற இந்த அனுபவம் ரொம்பவே புதுசு'' என்கிறார் முரளி!

நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ப.சரவணகுமார்