என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

மேஜர் மாதேஸ்வரன்!

மேஜர் மாதேஸ்வரன்!

##~##

ழுத்தைச் சுற்றிலும் மணிகள், உடம்பு முழுக்க வண்ணத் துணிகள், கொம்புகளில் அலங்காரம் என, எப்போதாவது கண்களில்படுகின்றன 'பூம்பூம்’ மாடுகள். முண்டாசுக்கட்டி, ஒப்பனை ஏற்றிக்கொண்டு அந்த மாடுகளை பிடித்துவரும் விநோத மனிதர்களின் சிறப்பே, இவர்களுடைய சாதுர்யம் மிக்கப் பேச்சு தான். ஆனால், இன்றைக்குப் 'பூம் பூம்’ மாடுகளையும் மாட்டுக்காரர்களையும் பார்ப்பது அரிதாகிப் போனது.

 இப்படி ஒரு பூம்பூம் மாட்டுக்காரரைத் தேடிப் பிடித்தேன். கிருஷ்ணகிரி மாவட்டம், காட்னாம்பட்டியைச் சேர்ந்த அவர் பெயர் கோபால். ''இது எங்க முப்பாட்டனுக்கு முன்னமே பொறந்த தொழிலு மாதேஸ்வரா... (எதிர்படும் எவரும் அவருக்கு மாதேஸ்வரனே). நாங்க குடும்பமாகவோ, ஆம்பிளை ஆளுங்க மட்டும் குழுவாகவோ புறப்பட்டு வருவோம். எங்க சாதி சனத்துக்கு சூதுவாது தெரியாது. குலசாமி மாதேஸ்வரன், ஆதிகாலத்துல எங்க குடும்பப் பெரியவங்க மேல வந்து,  'ஊர் ஊராப் போய், மனுஷங்களை ஆட்டிப்படைக்கிற கெட்ட சக்திகளை விரட்டிவிட்டு நல்லது பண்ணுங்க. வருமானம் தேடும்போது நீதி தவறக் கூடாது. என் வாகனம் எருது எப்பவும் உங்க கூட இருக்கட்டும். இதை அலட்சியம் செஞ்சா குடும்பமே தழைக்காமப் போயிரும்’னு  அருள்வாக்கு சொல்லி இருக்கார். அதனால, எங்ககூட எப்பவும் எருது இருக்கும். எருதை 'மாதேஸ்வரா’னுதான் கூப்பிடுவோம். குலசாமி ஈசன் எங்களோட இருக்காருங்கிற தெம்புல தெனமும் எருதைப் பிடிச்சுக்கிட்டு பொழப்புத் தேடி கிளம்புவோம். அவரும் வயித்துப்பாட்டுக்குக் குறை இல்லாம எங்களுக்குப் படிஅளந்துடுவாரு'' என்றபடி, அருகில் இருந்த ஒரு வீட்டு வாசலில் நின்று உருமி மேளத்தை அதிரவிட்டார்.

மேஜர் மாதேஸ்வரன்!

கைக் குழந்தையுடன் வெளியே வந்த பெண்மணி, ''எம்பேத்தி ராத்திரி தூக்கத்துல துள்ளித் துள்ளி விழுறா. புள்ளைய ஏதாவது பீடை அண்டியிருக்கும்னு அவங்க தாத்தா சொல்றாரு. நீ பார்த்து கண்டுபுடிச்சு திருநீறும் தாயத்தும் மந்திரிச்சுக் கொடுப்பா...'' என்றார். காளையின் காதில் எதையோ ஓதிய கோபால், உருமியை உரச, காளை மாடு குழந்தையையும் அந்தப் பெண்மணியையும் மூன்று முறை நக்கியது. ''உம்பேத்திக்கு கண் திருஷ்டியும் ஓமலும் எக்கச்சக்கம். கொழந்த மேல கண்ணுவெக்காத ஆள் இல்லை. நீ பயப்படாத தாயி. அந்த மாதேஸ்வரனே ஆசி கொடுத்துட்டாரு.

மேஜர் மாதேஸ்வரன்!

திருஷ்டி எல்லாம் திரும்பி ஓடிடும். ஓமலு ஓரமாப் போயிடும். புள்ளையப் புடிச்சிருக்கும் பீடையை, அந்த மாதேஸ்வரன் பாடையில ஏத்திடுவாரு. இந்த அந்த்ரத்தை சாம்பிராணியில காட்டி, உம்பேத்தி இடுப்புல கட்டிப்புடு. நான் மந்திரிச்சுக் கொடுக்கும் சாம்பலை தினமும் ராவானா புள்ளை நெத்தியில மறக்காம இட்டுடு. கடுகு பொரியுற மாதிரி திருஷ்டி எல்லாம் பொரிஞ்சு... நாளைக்குக் காலையில கொழந்தை புதுத் தெம்போட வெளையாடலைனா என்னை நிக்கவெச்சு கேள்வி கேளு தாயி...!'' என்று முடித்துக்கொண்டு நம் பக்கம் திரும்பினார்.

''கொழந்தைகளுக்குப் பயந்த கொணம், பாலகிரகம், திருஷ்டி, ஓமலு நீக்குற மாதிரியே பெரியவங்களுக்கும் திருஷ்டி, ஓமலு கழிப்போம். மாதேஸ்வரங்கிட்ட நம்பிக்கைவெச்சு வேண்டினாலும் நினைச்சது கைகூடும். இந்த மாதேஸ்வரனை 17 வருஷமா வளர்க்கிறேன். கிருஷ்ணகிரிகாரர் ஒருத்தர், ராணுவத்துல மேஜரா இருந்தார். 10 வருஷத்துக்கு முன்ன வடக்க கார்கில் பகுதியில பெரிய போர் மூண்டப்போ அதுக்காக கௌம்பினவரு என் மாதேஸ்வரங்கிட்ட, 'நாட்டோட மண்ணுக்கும் அதுக்காக சண்டை போடுற எங்களுக்கும் பாதிப்பு இல்லாம காக்கணும்’னு வேண்டிக்கிட்டு 'அந்த்ரம்’ கட்டிக்கிட்டுப்

மேஜர் மாதேஸ்வரன்!

போனார். மூணு மாசம் கழிச்சு என்னைத் தேடி திரும்பி வந்தவர், 'வேண்டின மாதிரியே போர்ல ஜெயிச்சு மெடலும் வாங்கிட்டனப்பா. எனக்கு மெடலு வாங்கிக்கொடுத்த உன் மாதேஸ்வரனுக்கு எங்க குடும்பப் பொக்கிஷமான இந்த வெள்ளிக் காசைக் காணிக்கையாக் கொடுக்குறேன்’னு சொல்லி மாதேஸ்வரனுக்கு சல்யூட் அடிச்சிட்டுப் போனாரு. அதுல இருந்து இவனுக்கு 'மேஜர் மாதேஸ்வரன்’னு பேரு. மேஜர் மாதேஸ்வரன்கிட்ட உத்தரவு வாங்கி 'அந்த்ரம்’ கட்டிட்டா காத்துக்கருப்பு தொடங்கி ஜம்புமுனி, ஜடாமுனி வரைக்கும் ஓடிடும். தை, மாசி, பங்குனி மூணு மாசமும் பெரும்பாலும் யாரும் தொழிலுக்குப் போக மாட்டோம். கல்யாணம், காட்சினு எல்லா விசேஷமும் அப்பதான் நடத்துவோம். எங்க பேரன், பேத்திங்களை எல்லாம் படிக்க அனுப்பி இருக்கோம். அவங்க படிச்சு வேலைக்குப் போனாலும் வீட்டுக்கு ஒரு மாதேஸ்வரனை வளர்க்கணும்'' என்கிறார் கறாராக!

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்