என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

என் ஊர் : திருவாண்டிப்பட்டி

சேர்வராயன் கொட பிடிக்கும் சேலஞ் ஜில்லா... செவத்த புள்ள கன்னம்போல இருக்கு நல்லா!

##~##

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மண்ணியல் விஞ்ஞானி டாக்டர் முருகேசபூபதி, தன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள திருவாண்டிப்பட்டியின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்!

 ''ராகி, கம்பு, கொள்ளு, பாசிப் பயறுனு வெள்ளாமை செய்ற புஞ்சைக் காட்டு விவசாயிங்க; மாடு பூட்டி கமலை இறைச்சு நிலக்கடலை, நெல்லு, மொச்சை, மாமரம்னு பயிர் செய்ற நஞ்சை விவசாயிங்க; இவங்களோட தாயா புள்ளயா விவசாயம் சார்ந்து வாழுற உழைப்பாளிங்க... இவங்க எல்லாம் சேர்ந்த கிராமம்தான் எங்க திருவாண்டிப்பட்டி.

ஊர்ல மணியக்காரர் வீடுனு எங்க வீட்டுக்குப் பேரு. தாத்தா பழனிமுத்து, கிராம முன்சீப்பா இருந்தவர். எங்க அப்பாரு பேரும் பழனிமுத்துதான். காரணம், ஊரே முருகன் ஆட்சிதான். குழந்தைங்களுக்கு முதல் மொட்டையும் பழநியிலதான். இது பல நூறு வருஷ நடைமுறை. ஜனங்க ஒண்ணுகூடி பெரிய காவடி, பால் காவடி, பன்னீர் காவடினு ஆளுக்கொரு காவடியத் தூக்கிக்கிட்டு, 'அரோகரா’ கோஷத்தோட எட்டு நாள் பாத யாத்திரையாப் பழநிக்குப் போய் தங்கத் தேர் இழுக்கலைனா ஊர்ல முக்காவாசிப் பேருக்கு நித்திரைகொள்ளாது. அந்த எட்டு நாள் பயணத்துல காவேரி, நொய்யல், அமராவதி, சண்முகநதினு ஆத்தங்கரைகள்ல காவடியைக் கம்பளம் விரிச்சு இறக்கிவெச்சுட்டு, களைப்புத் தீர ஆத்துல குளிப்போம். கட்டுச் சோத்தை ஒரு கட்டுக் கட்டிட்டு கொஞ்ச நேரம் கண் அசந்து, திரும்பவும் பாத யாத்திரையைத் தொடர்வோம்.

என் ஊர் : திருவாண்டிப்பட்டி

எனக்கு 'ஆ’னா சொல்லித் தந்த ஆசிரியர் சித்தையன், பள்ளியில சமைக்கிற மதிய உணவுக்காகப் பள்ளிக்கூட வளாகத்துலயே தோட்டம் போட்டு காய்கறிகளைப் பயிர் செஞ்சு, விவசாயத்தின் அருமையை எனக்குப் புரியவெச்ச முதல் மனிதர். வெயில் காலத்துல வீட்டுல எந்நேரமும் மண் பானையில குளுகுளுனு பசு மாட்டு மோர்ல கம்மஞ்சோறு ஊறிக்கிடக்கும். குளிர் காலத்துல கொத்தமல்லி கருப்பட்டி காபி ஆவி பறக்கக் காத்துக்கிடக்கும்.

திருவிழானு வந்துட்டா ராத்திரியில ஊர்த் திடல்ல 'சேர்வராயன் கொட பிடிக்கும் சேலஞ் ஜில்லா... ஏலேலோ சேலஞ் ஜில்லா... செவத்த புள்ள கன்னம்போல இருக்கு நல்லா... மாம்பழந்தான் இருக்கு நல்லா’னு இட்டுக் கட்டிப் பாடுவாங்க. எங்க ஊர்ல நாட்டுப் பசு மாடுகளுக்குக் குறைவு இல்லை. அப்ப

என் ஊர் : திருவாண்டிப்பட்டி

எல்லாம் கறந்த பாலைக் காசுக்கு விற்கும் பழக்கம் இல்லை. ஊருல இருக்கிற குழந்தைகளுக்கு எல்லாம் ஊத்தி ஊத்திக் கொடுப்பாங்க. மிச்சமான பால்ல வெண்ணெயை எடுத்துட்டு மாடு, கன்னு இல்லாத ஜனங்களுக்கு மோரைக் கொடுத்துடுவாங்க.

எங்க பாட்டி செம்பாயம்மாள் ஒரு விவசாய வியாபாரி. மாட்டு வண்டியில ஏறி கோழிக்கால்நத்தம் சந்தை, மோர்பாளையம் சந்தைனு போய் வெண்ணெய், நெய், புளி, காய்கறி, பாசிப் பயறு வித்துட்டு வருவாங்க. இடைத் தரகர் இல்லாமல் விவசாயிகளே நேரடியா வித்தா, கூடுதல் வருமானம் பாக்கலாம்னு சொல்லிக்கொடுத்த பொருளாதார மேதை அவங்க. இதைத்தான் இன்னைக்கு விவசாய படிப்புல ஒரு பாடத்திட்டமாவெச்சு இருக்கோம்.

வருஷம் நினைவு இல்ல... எங்க ஊருக்கு முதன்முதலா வந்த பஸ் ஸ்ரீகிருஷ்ணா சர்வீஸ். சேலம் போற வண்டி அது. அந்த பஸ்ல ஏறித்தான் சேலம் பாரதி வித்யாலயா பள்ளிக்கூடம் போய்ப் படிச்சேன். அந்த பஸ்லதான் முதன்முறையா டெய்லி பேப்பர் தினமும் சாயங்காலம் ஊருக்கு வரும். ஊர்ல சலவை, சவரத் தொழிலாளர்கள், பண்ணை ஆட்களுக்குக் கூலியாப் பணம் கொடுக்க மாட்டாங்க. கம்பு, சோளம், கேழ்வரகுதான் கொடுப்பாங்க. அதுக்கு பேர் தவசம். இந்த வழக்கம் இன்னைக்கு மாறிட்டாலும் ஊரோட மண் வாசமும் மக்களின் நேசமும் மட்டும் மாறவே இல்லைங்க!''

சந்திப்பு: ஜி.பழனிச்சாமி
படங்கள்: தி.விஜய்