என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

என் ஊர் : வாகைக்குளம்

என் ஊர் : வாகைக்குளம்

##~##

துவரை 100 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகனாகவும், 200 திரைப்படங்களுக்கு மேல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிற, தேசிய விருது வென்ற நடிகரும் தி.மு.க-வின் தலைமைக் கழகப் பேச்சாளருமான 'வாகை’ சந்திரசேகர், தன்னுடைய சொந்த ஊரான வாகைக்குளம்பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

 'வாகைக்குளம், மதுரையில் இருந்து உசிலம்பட்டி போகிற பாதையில இருக்கிற கருமாத்தூருக்குப் பக்கத்துல இருக்கு. முல்லையாற்றின் புண்ணியத்துல செழிப்பா இருக்கிற பல கிராமங்கள்ல வாகைக்குளமும் ஒண்ணு. சுத்துவட்டாரத்துல இருக்கிற எல்லாரும் எங்க ஊர்க்காரங் களை 'வாக்குளத்தான்’னு கூப்பிடுவாங்க. எங்க பாட்டன், பூட்டன் எல்லாத்துக்கும் இந்த ஊர்தான் பூர்வீகம். எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்கிற நாட்டார்மங்கலத்துலதான் எங்க குலதெய்வமான 'ஆதி சிவனப்பன்’ கோயில் இருக்கு. அந்த ஊரே சிவனுக்குப் பிடிச்ச வில்வ மரங்களால சூழப்பட்டு இருக்கும். அந்தக் கோயில் எப்பவும் பூட்டியேகிடக்கும். உள்ள இருக்கிற சாமி உக்கிரமானதுனு இப்பவரைக்கும் அந்த நடைமுறையைப் பின்பற்றி வர்றாங்க. ஊர் மக்கள் எல்லாருமே பூட்டி இருக்கிற சன்னதி முன்னாடி நின்னுதான் கும்பிட்டுட்டுப் போவாங்க.

என் ஊர் : வாகைக்குளம்

எங்க தோட்டத்து வாய்க்கால்ல ராத்திரி ஒரு பானையை வெச்சுட்டுப் போயிடுவோம். மறுநாள் காலையில வந்து பார்த்தோம்னா அந்தப் பானை முழுக்க வெள்ளித் தகடு கணக்கா அயிரை மீன்கள் நீந்திட்டு இருக்கும். இதுக்கு 'பானைப்பறி’னு பேரு. இன்னைக்கும் நான் மீன் கொழம்பு சாப்பிடும்போது இந்தச் சம்பவங்களும் எங்க அம்மாவோட கைப்பக்குவமும் ஞாபகத்துக்கு வந்து கண்கலங்கவெச்சுடும்.

நான் சினிமாவுக்கு வர்றதுக்கு ஊரில் நான் நடிச்ச நாடகங்கள்தான் முக்கியக் காரணம். அந்த நாடகக் குழுவுல பழனிச்சாமினு நண்பர் ஒருத்தர் இருந்தாரு. அவரோடதான் நான் அதிகமாப் பழகுவேன். அவர் மூலமாத்தான் எனக்கு திராவிட சிந்தனைகள் மேல ஆர்வம் ஏற்பட்டுச்சு.

என் ஊர் : வாகைக்குளம்

நான் ஹீரோவா அறிமுகமான புதுசுல ஒருதடவை ஊருக்குப் போயிருந்தேன். அப்போ ஒரு பெரியவரு கண்ணை இடுக்கிக்கிட்டே வந்து, 'ஏண்டா படத்துல இம்புட்டு கரேல்னு இருக்க? படம் புடிக்கிறவருகிட்ட சண்ட கிண்ட போட்டியா? உன் செலவுலயே ரெண்டு மூணு லைட்டு வாங்கிவெச்சுக்க.. உன் ஸீன் எடுக்குறப்ப அதைப் போட்டு பளிச்னு படம் பிடிச்சுக்கோ’னு சொல்லிட்டு அவருபாட்டுக்குப் போய்க்கிட்டே இருந்தார். அந்தப் பெரியவரோட குணம்தான் எங்க ஊரோட குணமும். 87-ல் எனக்குக் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணத்தைக் குன்றத்தூர்ல வெச்சிருந்தோம். நம்பியாரும் ராதாரவியும் யதார்த்தமா எனக்கு மாலை போட வந்தாங்க. எங்க சொந்தக்காரங்க ஒண்ணுகூடி, 'இங்கப்பாரு நீ எம்.ஜி.ஆர். கூட சண்டை போட்டிருக்கலாம். நீ எம்.ஆர்.ராதா புள்ளையா இருக்கலாம். அதுக்காக எங்க முதல் மரியாதையை நாங்க விட்டுத் தர முடியாது’னு சண்டை போட்டாங்க. நம்ம பையனுக்கு நாமதான் செய்யணும்கிற உரிமையும் உணர்வும்தான் சண்டைக்குக்  காரணம்.

என் ஊர் : வாகைக்குளம்

சினிமாவுல வித்தியாசமா நெறைய கேரக்டர்கள் பண்ணினதுக்கு எங்க ஊர் மனுசங்கதான் முழுக் காரணம். நான் பார்த்த மனிதர்களோட உடல்மொழியை வேற வேற மனிதர்கள் மேல பொருத்திப் பார்ப்பேன். அப்படிச் செய்யும்போது எனக்கு எக்கச்சக்கக் கதாபாத்திரங்கள் கிடைச்சுது. அந்த நன்றிக்காகவே சாதாரண சந்திரசேகர், 'வாகை’ சந்திரசேகரா மாறிட்டேன்!''

  - உ.அருண்குமார்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி