என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

ராமர் என்கிற லட்சுமணன்!

ராமர் என்கிற லட்சுமணன்!

##~##

ராமர், ஆஞ்சனேயர் வேடமிட்டு காணிக்கை கேட்கும் இளைஞர்களை அடிக்கொரு தரம் பார்த்து இருப்போம். 'அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்?’ என்று அறிந்துகொள்ளும் ஆவலோடு, கடந்த வாரம் பரிவாரங்களுடன் நடந்துவந்த ராமரை வழிமறித்துப் பேசினேன்.

 தன்னுடைய ஒரிஜினல் பெயர் லட்சுமண்(!) என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ராமர், 'நாங்க ஒரு நாடோடிக் கூட்டமுங்க. பூர்வீகம் ஆந்திரானு மட்டும் தெரியும். ஆனா, ஊர் பேர் தெரியாது. முதல்ல, சொந்த ஊர்னு ஒண்ணு இருக்குதான்னே சந்தேகமாத்தான் இருக்கு. இந்த மாதிரி வேஷம் போடுறதும், கூத்துக் கட்டுறதும்தான் பரம்பரைத் தொழில். நாங்க தமிழ்நாட்டுக்கு வந்து 20, 30 வருஷத்துக்கு மேலாச்சு. தமிழ்நாட்டுல குறவர் இன மக்களுக்கு எம்.ஜி.ஆர். எப்படியோ, அதுமாதிரி எங்களுக்கு என்.டி.ஆர். அவர் எங்களை மாதிரி வேஷம் போட்டு இருக்கார். நாங்க அவரை மாதிரி (ராமர்) வேஷம் போட்டு இருக்கோம்.

ராமர் என்கிற லட்சுமணன்!

இப்ப ஒரு சிலர்தான் வேஷம் போடுறாங்க. மத்தவங்க வேற தொழிலுக்குப் போயிட்டாங்க. மதுரையில ரோட்டோரத்துல ஹெல்மெட், கூலிங் கிளாஸ், சீட் கவர் விற்கிறதும் தெருக்கள்ல பிளாஸ்டிக் பூ விற்கிறதும் முன்னாள் ராமர், லட்சுமணருங்கதான். வருமானம் பெருசா வர்றது இல்லை. வருமானம் அதிக மாகிட்டா கடவுள்களுக்குள்ளேயே கூட சண்டை வர ஆரம்பிச்சிருது' என்றார் சிரித்துக்கொண்டே. 'என்னோட பேரு ராஜ். எனக்குத் தெரிஞ்சு எங்க கூட்டம் கொஞ்ச காலமா நிரந்தரமாத் தங்கி இருக்குதுனா அது சக்கிமங்கலம் பக்கத்துல இருக்கிற கல்லூத்து கிராமத்துலதான். அங்கே குடிசை போட்டு குடியிருக்கோம். அங்கே நிரந்தரமாத் தங்குனதால ஒரு புண்ணியம் கிடைச்சிருக்கு. எங்க ஏரியாவுல பள்ளிக்கூடம் திறந்து இருக்காங்க. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடுங்கிறது கரெக்ட்தான். ஒருநாள் எங்க ஏரியாவுக்கு வாங்களேன்' என்றார் லட்சுமணன்.

ராமர் என்கிற லட்சுமணன்!

மறுநாள் காலையில் அங்கு சென்றோம். இரை தேடிச் செல்லும் பறவைகள்போல, மொத்தக் கூட்டமும் கால்நடையாகவும் மினி பஸ் மூலமும் பிழைப்புக்காக இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. நடக்கவே முடியாத வயோதிகர்களும் சிறு பிள்ளைகளும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். நான்கைந்து நாள் வெளியூர்ப் பயணம் செய்பவர்கள் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அனைவருக்குமான கல்வித் திட்ட உண்டு உறைவிடப் பள்ளியில் விட்டுச் சென்றிருந்தார்கள்.

'இந்தக் கூட்டத்துல பெரியவங்க பலருக்கும் கோர்வையாத் தமிழ்ப் பேச வராது. ஆனா, குழந்தைங்க எல்லாம் நம்மூர் புள்ளைங்க மாதிரி தமிழ்ப் பேசுறாங்க. நரிக்குறவர்களுக்கான சிறப்புப் பள்ளிங்கிறதால, இந்தக் குழந்தைகளை நரிக்குறவர்கள்னே பதிவு செஞ்சிருக்கோம். ஆனா, உண்மையில தங்களுடைய சாதி என்னானு இந்தக் கூட்டத்துல யாருக்குமே தெரியாது'' என்கிறார் பள்ளியை நடத்திவரும் தொண்டு நிறுவன நிர்வாகி ரெஜினா!

- கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து