Published:Updated:

ஈழம்.. நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுக:திருமா

சென்னை, ஏப்.27,2011

இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்து விவாதிப்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். ##~~##

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் ஈவிரக்கமற்ற முறையில் தமிழர்களை கொன்றதையும், உலக நாடுகளை ஏமாற்றியதையும், செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. மன்றம் முதலான சர்வதேச அமைப்புகளையும் அங்கே செயல்படவிடாமல் தடுத்ததையும் ஐ.நா. அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
 
அதுமட்டுமின்றி இலங்கையில் நீதித்துறை சுதந்திரமாக இயங்கவில்லை என்பதை தற்போது இலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்ட ஓர் அமைப்பு தான் என்பதையும் ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளை விசாரித்து அதற்கு காரணமான ராஜபக்சே உள்ளிட்டவர்களை தண்டிப்பதற்கு சர்வதேச அளவிலான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் ஐ.நா. அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

நாம் இதுவரையில் கூறி வந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை தான் என்பதை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது.
 
இந்நிலையில் இந்திய அரசும், இங்குள்ள அரசியல் கட்சிகளும் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் உறுதியாக குரல் எழுப்பி ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காப்பாற்றிட முன் வரவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றங்கள் தான் என ஐ.நா. அறிக்கை கூறியிருக்கிறது. அவை போர்க் குற்றங்கள் மட்டுமல்ல, அவற்றை ஓர் இனப் படுகொலையாகப் பார்க்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
 
பாதுகாப்பு காரணம் என்று சொல்லி சர்வதேச அரங்குகளில் இலங்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. இனிமேல் அந்த நிலை தொடரக்கூடாது.

இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையை ஆய்வு செய்ய தமிழக அரசோடும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோடும் இந்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.
 
ஐ.நா. அறிக்கை ஈழத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் இனம் முழுமைக்குமே ஒரு முக்கியமாக அறிக்கையாகும்.

இந்த அறிக்கையை விவாதிப்பதற்காக உடனடியாக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என இந்திய அரசை விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது," என்று திருமாவளவன் கூறியுள்ளார்.