Published:Updated:

என் ஊர் - குற்றங்கள் இல்லாத குறையில்லா பூமி !

படங்கள்: பா.கந்தகுமார்

ஜி.குப்புசாமி

##~##

''வைரமுத்து தன்னுடைய பிறந்த ஊரைப்பற்றிய கவிதையில் 'என்னை வளர்த்த ஊர் என்பதன்றி வரலாறும் அதற்கு இல்லை’ என்பார். அதைப்போல நான் சொல்ல முடியாது. தொண்டை மண்டலத்தின் முக்கிய ஸ்தலமான 'ஆரணி’க்கு, முதலாம் ராஜராஜனின் ஜெயம்கொண்ட சோழ மண்டலத்துக்கும் முந்தைய வரலாறு உண்டு. சிவாஜி படையெடுப்பு, சம்புவராயம், விஜயநகரப் பேரரசு, ஆற்காடு நவாப் ஆட்சிகளிலும் ஆரணிக்கு முக்கிய இடம் இருந்திருக்கிறது. ராபர்ட் கிளைவும் மருதநாயகமும் ஓரணியில் நின்று  ஆரணி கோட்டையைத் தாக்கியது சரித்திரம்'' என்று ஆரணியின் பெருமைகளைச் சொல்லத் தொடங்கினார் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி.

''பல நூற்றாண்டுப் பழமைவாய்ந்த ஆரணியின் வரலாற்றுச் சின்னங்கள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டுவருகின்றன. 1760-ல் ஆங்கில-பிரெஞ்சு படைகளுக்கு இடையேயான கர்நாடகப் போரில், வீர மரணம் எய்திய லெப்டினன்ட் கர்னல் ராபர்ட் கெல்லியின் நினைவாக அமைக்கப்பட்டு, பின் எதற்காகவோ 'கோரி’ என்று அழைக்கப்படுகிற 60 அடி உயர நினைவுத் தூண் மட்டுமே எஞ்சியிருக்கிறது. காஜிவாடையில் இருந்த மற்றொரு 'கோரி’ இடிக்கப்பட்டு, அந்த இடம் மனைகளாக மாறக் காத்திருக்கிறது. ஆரணி கோட்டையைச் சுற்றியிருந்த அகழி, கான்கிரீட் கட்டடங்களுக்கு அடியில் புதைந்து போனது. முன்பு, எங்கள் இலக்கிய விவாதங்கள் எல்லாம், அபூர்வமாக வெள்ளம்வரும் கமண்டல நாக நதிக் கரையில்தான் நடக்கும். நீரற்ற ஆறு இன்று மணலற்ற ஆறாக மாறியிருக்கிறது. ஆற்றங்கரையில் இருக்கிற எருக்கஞ் செடிகளும் முட் செடிகளும் இன்றைக்கு ஆற்றுப்படுகையில் மண்டிக் கிடக்கின்றன. பஃறுளியாற்றை கடல் கொண்டதைப்போல, இன்றைய ஆறுகளை ஜே.சி.பி. இயந்திரங்கள் கொள்கின்றன.

என் ஊர் - குற்றங்கள் இல்லாத குறையில்லா பூமி !

என்னைச் சந்திக்கவரும் நண்பர்களை, நான் அழைத்துச் செல்கிற பூசிமலைக் குப்பம் கண்ணாடி மாளிகையும் திருமலை சமண குகைக் கோயிலும் அற்புதமானவை. பல்லவர் காலத்து கைலாசநாதர் ஆலயமும் புத்திர காமேட்டீசுவரர் ஆலயமும் உள்ளே காலெடுத்து வைத்ததுமே 800 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லக்கூடியவை. ஆரணிக்கு வெளியே உள்ள சத்திய விஜய நகரத்தில், 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரமாண்டமான ஜாகீர்தார் அரண்மனையில் இப்போது பொறியியல் கல்லூரியும் அரசு ஊழியர் பயிற்சி மையமும் செயல்படுகின்றன.

பட்டும் அரிசியும் ஆரணியின் பெருமைக்குரிய அடையாளங்கள். அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த ஆரணி சேலைகள், ஏ.சி. ஷோ-ரூம்களில் 'காஞ்சிப் பட்டு’ என்ற பெயரில் விற்கப்படுகின்றன.  ஏற்றுமதி செய்யப்படும் உயர் ரக அரிசிக்கு 'ஆரணி அரிசி’ என்பது ஒரு 'பிராண்ட் நேம்’.

ஆரணிக்கான தனித்துவம், எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத மனோபாவம். மாவட்ட தலைமை மருத்துவமனையும் அரசு கலைக் கல்லூரியும் சர்க்கரை ஆலையும் சிப்காட்டும் கைநழுவிப் போனாலும்... நியாயமான உரிமைகளுக்காகக் கூட குரலெழுப்பாமல், 'தான் உண்டு தன் வேலை உண்டு’ என்று இருக்கும் சாத்வீகிகள்தான் ஆரணியர்கள்.

காவல் துறை புள்ளிவிவரப்படி ஆரணி, தமிழகத்திலேயே குற்றங்கள் குறைந்த பகுதியாக இருக்க, எம்மக்களின் இந்தச் சாத்வீகக் குணமே காரணம். இந்த வெள்ளந்தி மனிதர்களைத்தான் என் பதின்பருவத்தில் ரசனையற்றவர்களென்றும் நவீன கலை இலக்கியங்களில் ஞான சூன்யங்கள் என்றும் அலட்சியப்படுத்தினேன். 'அவள் அப்படித்தான்’, 'பூட்டாத பூட்டுக்கள்’ போன்ற படங்களை இரண்டே நாட்களில் தியேட்டரைவிட்டுத் தூக்கியபோதும் ஆரணியில் 'தீபம்’, 'கணையாழி’ போன்ற இதழ்கள் கிடைக்காதபோதும் இதைப்போன்ற இலக்கிய வறட்சிப் பிரதேசத்தில் வாழ நேர்ந்ததற்காக எரிச்சல் அடைந்திருக்கிறேன். அதன் பிறகு சென்னை உள்ளிட்ட ஊர்களில் நான் சந்தித்த உயர்ந்த ரசனைகொண்ட கலாபிமானிகளிடம் பொதிந்திருக்கும் வன்மத்தையும் துவேஷத்தையும் கண்ட பிறகு, அழகியல் ரசனையல்ல - மனிதத்துவம்தான் உயர்ந்தது என்பது புரிந்திருக்கிறது.

அறிவு ஜீவிகள் சூழ வாழ்வதைவிட, சாத்வீகிகளோடு வாழ்வது மேலானதுதானே!''

நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு’, புக்கர் பரிசு பெற்ற ஜான் பான்வில்லின் 'கடல்’ ஆகிய நாவல்கள் இவரது மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ளன!

பான்வில்லின் 'கடல்’ நாவலின் கதைக் களம் அயர்லாந்து. கதை நடந்த இடங்களை நேரடியாகப் பார்வையிட்டு மொழிபெயர்ப்பதற்காக அயர்லாந்து அரசு இவரைத் தன் செலவில் வரவழைத்து டப்ளின் நகரில் ஒரு மாதம் தங்கவைத்து நல்கை வழங்கி உள்ளது!

ஜி.குப்புசாமி இதுவரை ஒன்பது நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஹாருகி முரகாமி, பேர்லாகர் க்விஸ்ட், ஓரான் பாமுக் போன்ற பல முக்கிய எழுத்தாளர்களின் படைப்புக்கள் இவருடைய மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளன!

இவர், அரசின் தணிக்கைத் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்!

அடுத்த கட்டுரைக்கு