Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

லையின் இடுப்பில் இருந்து தவறி விழுந்த குண்டுக் குழந்தையாய் ஒரு குன்று.

 ஒரு பாறையின் உச்சியில் எமிலி; 
அவள் காலாடும் பள்ளத்தில் சின்னப்பாண்டி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐந்தாறு சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆள் துடைத்த தனிமை.

பள்ளத்தில் புள்ளிகளாய் மேய்ந்துகொண்டிருக்கும் ஆடு, மாடுகள்.

காற்றோடு இசை மீட்டும் மாட்டு மணிச் சத்தம்.

மலைவிட்ட பட்டங்களாய் ஆகாயத்தில் சில துண்டு மேகங்கள். மஞ்சள் நதியில் நீராடும் மேற்கு. புலன்களுக்குள் பூ மலர்த்தியது அந்தச் சுற்றழகு.

எல்லா நிலவியலுக்கும் ஒரே மொழி இல்லை. இடம் பொருளுக்கு ஏற்ப மாறுபடும் மொழியும் தொனியும். மௌனமே மொழியாய்த் தோன்றியது அவர்களுக்கு. சூழல் கூட்டுவித்திருக்கும் ஒரு சௌந்தர்யத்தை - மௌனத்தின் அலைவரிசையில் மட்டுமே துய்க்க வேண்டிய ஒரு நாத உபாசனையை உடைத்துவிடுமோ என்று விட்டு விலக வேண்டியிருந்தது சொற்களைவிட்டு.

மூன்றாம் உலகப் போர்

அவன் பார்த்துக்கொண்டே இருந்தான் அந்தப் பாறைப் பௌர்ணமியை. மழை கழுவிய வானம்போல் சலனமற்று இருந்தது அவள் முகம். காற்று தண்டிக்கும் கற்றை முடியைக் கைகளால் அடிக்கடி சரிசெய்துகொண்டே வானம்தான் என் பொழுதுபோக்கு என்பதுபோல் அடிக்கடி அந்தரத்தில் எறிந்துகொண்டிருந்தாள் தன் கண்களை. பேசத்தான் அழைத்தாள் அவனை. ஆனால், சொற்களுக்குச் சுதி கூட்டும் ஒரு முயற்சியும் இல்லை அவள் உதடுகளில்.

பேசு பெண்ணே பேசு!

நான்தான் சொல்லிறந்து போனேன்; நீயேனும் பேசு.

உன் செர்ரித் திருவாய் திற; மனசின் ரகசியக் கிடங்கிலிருந்து வார்த்தை எடு; சொல்லிவிடு!

நீயும் என்னைக் காதலிக்கிறாயா? போதும் உன் பாசாங்கு. இதயத்தின் நார் இற்றுக்கொண்டேபோகிறது.

உன் மௌனத்தின் கொலை முயற்சியை நிறுத்து.

உன்னால் என் தட்பவெப்பம் தடம் மாறுகிறது.

என் மூளை சூடாகிறது; பாதம் குளிர்ந்துபோகிறது.

என் குடும்பம் என்ற சங்கிலியிலிருந்து விடுபட முடியாத கண்ணி நான்.

பிற்போக்கின் கையிலிருக்கிறது என் பிடரி. சொற்களுமில்லை... சூழலுமில்லை என் பிரியத்தைச் சொல்லுவதற்கு.

நீ அட்லாண்டா
நான் அட்டணம்பட்டி

நீ மேற்கு
நான் கிழக்கு

நீ ரோஜா
நான் நீலோற்பலம்

நீ டாலர்
நான் பைசா

நீ ஆப்பிள்
நான் கள்ளிப்பழம்

நீ வார்த்தை
நான் மௌனம்

அதனால் நான் சொல்லிருந்தும்

சொல்லாமல் நிற்கிறேன்;

அருகிருந்தும் தள்ளி நிற்கிறேன்.

ஒரு மலையின் தலையில் என் ஆசைகளை இறக்கிவைத்தால், அது கோடி கோடிக் கூழாங்கற்களாய் நொறுங்கிப்போகும். நானே சுமந்து நிற்கிறேன்; இரக்கமில்லையா? வா... என் ஆசைகளை உன் நெஞ்சில் வாங்கி வை; அல்லது பாரம் பகிர்ந்துகொள்.

உன் காதலை நீ சொல்லலாம்;

நீ சுதந்திரச் சூறாவளி;

நான் சைக்கிள் சக்கரத்தில் அடைபட்ட காற்று.

மூன்றாம் உலகப் போர்

காதலின் முதல் எதிரிகள் காதலிப்பவர்கள்தான் என்று காதலிக்கும் வரை எண்ணியிருந்தேன். தாழ்வுமனப்பான்மைதான் காதலின் முதல் எதிரி என்று காதலின் வருகையில் கண்டுகொண்டேன். நீயாவது சொல்லிவிடு பெண்ணே. உன் வாயூறும் சொல்லில் கரையட்டும் என் தாழ்வுமனப்பான்மை.

இந்திய மரபில் ஒவ்வொரு நெஞ்சும் காதலின் புதைகுழியாகவே போய்விடுகிறது. ஆனால், எந்தப் புதைகுழியும் இறந்துபோவதில்லை. ஒரு புல்லை முளைக்கவைக்கிறது; அல்லது ஒரு பூவை மலர்த்திவைக்கிறது.

யார் இல்லையென்றாலும் யாரும் வாழ்ந்து போக முடியும் என்று தெரிந்த பின்னும், நீ இல்லையென்றால் நான் வாழ முடியாது என்று கருதச் செய்வதே காதல். உன்னைக் கடக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என் காதலை உன் காலடியில் கொட்டிவிடவே நினைத்தேன்; தடுத்தேவிட்டது என் தாழ்வு மனப்பான்மை. பைரன் சொன்னானே... வாளுக்கு முன்பே உறை தேய்ந்துபோவதாக - அப்படித்தான் உணருகிறேன் சொல்ல வரும் முன்பே என் மொழி தேய்ந்து போவதாக.

எங்கேயோ பார்க்கிறாய்; என்னைப் போலவே நீயும் பாசாங்கு செய்கிறாய். பாறை இடுக்கில் அருகம்புல் பறித்து அணில் கடி கடிக்கிறாய். காற்றில் பறக்கும் ஆடையை ஒரு கையிலும் கலையும் முடியை மறுகையிலும் சரிசெய்கிறாய். ஏதுமறியாத குழந்தைபோல் என் மீது அடிக்கடி வீசு கிறாய் உன் பவித்திரப் பார்வையை.

நீதானே அழைத்தாய்; முதலில் நீ சொல். பிறகு நான் சொல்கிறேன் - உன் மீது நான் சரிந்த சந்தர்ப்பங்கள் எவையெவை என்று. நீ பெண்களின் பொறாமை; ஆண்களின் இயலாமை. எல்லோரையும்போலத்தான் என் மீதும் அளாவியது உன் அழகின் ஆதிக்கம். ஆனால், என்னை ஈர்த்தவை உன் உடலின் நிறப்பிரிகையும் தசைச் செப்பமும் அல்ல. உன் அங்கங்களின் குணங்கள் என்னை அடிமைகொண்டன.

சதைப் பிடிப்பால் அல்ல; நாகரிகத்தின் நளினத்தால் ஒளி பெறுகிறது உன் உடல். நீல நட்சத்திரங்கள் மிதப்பதால் அல்ல;  சத்தியத்தின் சாட்சிகளாய் இருப்பதனால் என்னை ஈர்த்தன உன் கண்கள். சங்கீத இழை ஓடுவதால் அல்ல;  உண்மையின் ஒலியாக இருப்பதனால் சுடர்விடுகிறது உன் குரல். சிற்பங்களை வம்புக்கிழுப்பதால் அல்ல; நன்னடையால் கவனிக்கவைத்தன உன் கால்கள். சிலுவை பூண்ட ஒரேயரு பிளாட்டினம் சங்கிலி தவிர ஆபரணமேதும் அணிந்திருக்கவில்லை நீ. ஆனால், உன் உடல் மொழி என்னும் ஆபரணம் ஒவ்வோர் அங்கத்தையும் அலங்கரித்துவிடுகிறது.

பெண்ணே! எல்லோரையும் ஈர்க்கும் உன் இளமையின் செழுமை நாளை வற்றிப்போகலாம். காலச்சூட்டில் தங்க மலைகள் உருகிப்போகலாம். ஆனால், உன் அழகுக்கு அழகு சேர்க்கும் சத்தியமும் நாகரிகமும் கண்ணிய மும் கருணையும் எந்நாளும் அழிவதில்லை என்று என்னுள்ளம் நம்பியதால் உன்னோடு காதலுற்று உயிர் தேய்கிறேன் எமிலி. சொல்லாத காதல் என்பது ஆண் சுமக்கும் கர்ப்பம். பெண்ணே வா... எனக்குப் பேறுகாலம் பார். காதல் வந்த நாள் முதலாய் எனக்கு மூச்சு முட்டுகிறது.

என் சுவாசப் பாதையில் ஒரு பாறாங்கல்லாய் ஏனிப்படி நிற்கிறாய் எமிலி? என்னைத் தனிமையில் கிடத்திச் சிறு வார்த்தையும் சொல்லாமலே சிரச்சேதம் செய்கிறாயே... தகுமா? என்னதான் திரண்டு நிற்கும் தேகமாயினும் மனசு பூஞ்சைதானே... தாங்குமா?

தன் புஜ வலிமை காட்ட முருங்கை மரத்தைத் தேர்ந்தெடுத்த புயலைப் போல உன் காதலின் கத்தி தீட்ட என்னைத் தேர்ந்தெடுத்தாயே... என்ன நியாயம் எமிலி?

வான் பார்க்கிறாய்;

பறவைகளோடு உரையாடுகிறாய்.

பாலாங்கொடி ஒன்று பறித்து அதில் முடிச்சிட்டு முடிச்சிட்டு அவிழ்த்து அவிழ்த்து விளையாடுகிறாய்.

திறந்து திறந்து மூடுகிறாய் கைப்பையை.

நீ ஒவ்வொரு முறை திறக்கும்போதும் பையில் இருந்து வெளிவந்துவிடாதா எனக்கான காதல் தேவதை என்று ஏமாந்து கழிகிறது என் காலம். 'எமிலியைச் சந்தி; உனக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது’ என்றான் இஷி என்னிடம். இனி எந்தப் பரிசு நீ தந்தாலும் என்னிடமுள்ள ஒரு பரிசுக்கு ஈடாகுமா? அது நீ தந்த பரிசல்ல; நான் கொண்ட பரிசு.

ஓர் இரவு.

என் வீட்டில் நீ படுத்திருந்தாய்.

நீ உள் வீட்டில்; நான் வெளித் திண்ணை யில்.

உன்னையும் என்னையும் பிரித்தது வெறும் நாலங்குலச் சுவர்தான்.

அந்த இரவில் விடிய விடிய விழித்துக்கிடந்தது நட்சத்திரங்களும் நானும் மட்டும் தான். என் இதயத்தின் 'லப்டப்’ ஓசையே என்னைத் தூங்கவிடாததும் அதே இரவுதான்.

மூன்றாம் உலகப் போர்

விடிந்து விழித்து நீ வெளிவந்ததும் தாவியோடித் தடவினேன் உன் தலையணையை. தொலைந்து மீண்ட குழந்தையைத் தலை கோதிக்கொடுக்கும் தாயைப்போல அதை வருடி அணைத்துக்கொண்டேன். உன் தலைச்சூடு ஆறாத இடத்தில் வாய் வைத்து முத்தமிட்டேன். பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன் அந்தத் தலையணையை. உன்னோடு பேச முடியாத சேதியெல்லாம் காதில்லாத தலையணையோடு பேசிப் பேசிக் காலம் கழிக்கிறேன். தெரியுமா? அதில் வேப்பெண்ணெய் வாசம் போய்விட்டது. உன் வாசம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.

என்னையே உற்றுப் பார்க்கிறாய். கையில் பூங்கொத்துக்களோடு எரியும் அடுப்பில் உட்கார்ந்திருப்பவனைப்போல் நெளிந்துகொண்டே இருக்கிறேன் நான். என்னைப் பார்த்து ஒரு சீனிச் சிரிப்பு சிரிக்கிறாய். அதை வாங்கிக்கொள்வதற்கோ திருப்பிச் செலுத்துவதற்கோ வசதியற்ற தருணம்தான் எனக்கு வாய்த்திருக்கிறது.

செவ்வண்ணம் உறைந்துகிடக்கும் உன் அதரங்களை நான் திருட்டுத்தனமாய்த் தீண்டியிருக்கிறேன். ஒரு பயணத்தில் தாகத்திற்கு இளநீர் கேட்டாய். இளநீரை வாங்கிவந்து நீட்டினேன். 'ஸ்ட்ரா’ இல்லையா என்றாய். 'அப்படியே அருந்து’ என்றேன். 'பழக்கமில்லையே’ என்றபடி, அண்ணாந்து குடிக்க முயன்றாய். மூச்சுக் குழலுக்குள் இளநீர் இறங்கப் புரையோடிப் போன நீ இருமிச் செருமி இளநீர் சிந்தி என்னிடமே திருப்பித் தந்தாய். எங்களூர் சாங்கியத்தில் தலையைத் தட்டும் சாக்கில் உன்னை ஸ்பரிசித் தேன். இளநீரில் நீ எச்சில்வைத்த மிச்சத்தை நான் பருகினேன். என்ன ஆச்சர்யம்... இளநீர் கரித்தது; நீ வாய் வைத்த இடம் மட்டும் தித்தித்தது. உதடு பட்ட இடத்தில் உதடு பட்டதால், உதடு படாமலே உதடு பட்ட தித்திப்பை அந்தத் திருட்டுத் தீண்டல் தந்தது பெண்ணே. அதன் பிறகு நீ கண் காண எறிந்தேன் குடித்த இளநீர்க்கூட்டை; உன் கண் காணாமல் எறிந்தேன் என் பையில் மறைத்துவைத்திருந்த ஸ்ட்ராவை.

சொல்லியிருக்கலாம் உன்னை நான் சுற்றிவளைத்து நேசித்த கதையை. எண்ணெய் பூசிய கம்பத்தில் ஏறி ஏறி வழுக்கும்  சிறுவனைப்போல ஒரு நூறு முறையாவது வழுக்கி விழுந்திருப்பேன் என் சொற்களோடு நானும். என் கைத்தொலைபேசியில் அதிக மாக அழுத்தப்பட்டதும் ஒரு முறைகூடப் பேசாததும் பெண்ணே உன் எண்ணேதான். லட்சியங்களுக்குச் சக்கரம் கட்டிவிடுவதும் வாழ்வுக்கு நங்கூரமிடுவதும் காதல்தான் என்று கண்டுகொண்டதும் உன்னைக் கண்ட பிறகுதான் எமிலி.

பேசு.

சாதகமான தீர்ப்புதான் என்றாலும் சாவதற்குள் சொல்லிவிடு.

சொல்ல வந்ததைச் சொல் எமிலி.

அடைகாக்கப்படாத முட்டையும்கூட சூடு பொறுக்காமல் சில நேரம் தானே பொரிந்துவிடும் என்பார்கள். நீயோ, நானோ வெடித்துவிடுவதற்குள் சொல்லிவிடு.

அதிர்ச்சி அடைவேன் என்று பார்க்கிறாயா? உணர்ச்சிவசப்பட்டு எலும்பு நொறுங்க  ஆலிங்கனம் செய்துவிடுவேன் என்று அஞ்சு கிறாயா? எவ்வளவு உயரம் பறந்தாலும் விழுந்து விடாத பறவை நான். இத்தனை நாட்கள் கட்டுப்பாடு காத்தவன் இனியும் காக்க மாட்டேனா? ஒருவேளை... கட்டுப் பாடு கடப்பதையே நீ விரும்புவாயா?

என் மனவோட்டம் புரியாமல் நீ வேறு திசை பார்க்கிறாய். பாறையோரத்துக் கள்ளிச் செடியில் பால் வழிய வழிய நகம் கிழிக் கிறாய்.

என்னவோ எழுதுகிறாய்.

chi... என் பெயர்தான்; என் பெயரைத்தான் எழுதுகிறாய்.

chinna pandi என்றுதான் நான் எழுதுவேன்.

நீயோ தமிழின் நெடுங்கணக்கு. நெடிலுக் கேற்ப இரண்டு a a இட்டு, paandi என்று எழுதுகிறாய்.

கள்ளி எழுத்து அழியலாம் பெண்ணே...

உன் உள்ளத்து எழுத்து அழியுமா?

நீ சொல்ல வேண்டுமென்று நான் - நான் சொல்ல வேண்டுமென்று நீ - நம் இருவர் இழுப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் கசிந்து நைகிறது காதல் கயிறு.

என் காதலை உனக்குச் சொல்லியிருந்தாலும் சொல்லியிருப்பேன். நீயும் சராசரி இளைஞன்தானா என்று நீ என்னைக் கேட்டுவிடக் கூடாது என்றுதான் கேட்கவில்லை. ஏனென்றால், நானும் சராசரி இளைஞன்தான்.

ஒரு முன் அந்தியில், மஞ்சளாற்றங்கரையில்,  நரை விழுந்தோடிய நதி மணலில் நீயும் நானும். அம்மா கொடுத்த அவித்த வேர்க்கடலையைத் தூக்குச் சட்டியில் கொண்டுவந்திருக்கிறேன். இருவரும் எதிரெதிரே அமர்ந்து வேர்க்கடலை சாப்பிடும்போது ஒரு வினோத விளையாட்டுக்குள் நுழைகிறோம். தின்னும் வேர்க்கடலையை ஒருவர் வாயில் ஒருவர் குறி பார்த்து எறிவது. எறிந்த வேர்க்கடலை குறி தவறாமல் வாயில் விழுந்தால் எறிந்தவருக்குத் தண்டனைஇல்லை. ஆனால், குறி தவறிப்போய் வேர்க்கடலை எங்கே விழுந்தாலும் அதை எறிந்தவரே தேடி எடுத்துத் தின்றுதொலைக்க வேண்டும் என்பது நிபந் தனை. நீ எறிய நான் எறிய - நான் எறிய நீ எறிய - நீ எறிந்தது ஒருமுறை தவறி விழுந்தது ஆற்று மணலில். நிபந்தனை மாறாமல் மணலில் விழுந்த பருப்பை முகஞ்சுளிக்காமல் ஊதி ஊதித் தின்றாய்.

நான் எறிந்த பருப்பொன்று தவறி விழுந்தது தண்ணீரில். அதை நான் தேடி எடுத்துத் தின்றேன். பெரும்பாலும் குறி தவறாதவள் நீ. எல்லாக் கடலைகளையும் எறிந்தாய் என் வாயில் விழும்படி.

உன் கண்களைக் கண்டு கண்டு என் கை நடுங்கிற்றோ என்னவோ அன்று குறி தவறிக்கொண்டேயிருந்தது. நான் எறிந்த பருப்பொன்று உன் மேல்வாயில் பட்டுத்தெறித்து, மார்புக்கு மத்தியில் விழுந்து ஒளிந்துகொண்டது. தவறவிட்டால் எறிந்தவரே எடுத்துண்ண வேண்டும் என்பது நிபந்தனை. என்ன செய்யப்போகிறாய்? என்னையே நீ பார்க்கிறாய். என்ன செய்யப்போகிறேன்? என்னையே நான் பார்க்கிறேன். நான் திட்டமிட்டே செய்யவில்லை என்று தெரிவிக்கின்றன என் கண்கள். அதை அப்படியே வழிமொழிகின்றன உன் கண்கள். எந்த மொழியிலும் அர்த்தம் எழுத முடியாத புன்னகைஒன்று புரிகிறாய்.

விளையாட்டு வினையாகிவிட்டதே... வெட்கம் கலந்த துக்கத்தில் நான். உன் மீது உனக்குத் தைரியம் இருந்தால் எடுத்துக்கொள்... நெஞ்சு நிமிர்த்திய உறுதியில் நீ. என் தைரியத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; வேறு திசை பார்த்தேன் நான். எப்படியும் எடுப்பேன் என்று காத்திருந்தாய் நீ. என் கிராமம் என்னை அப்படி வளர்க்கவில்லை என்று மௌனம் காத்தேன் நான். கடைசியில் மார்பில் சிக்கிய வேர்க்கடலையை முதுகு திருப்பி நீயே எடுத்தாய். எதிர்பார்க்கவேயில்லை; என் வாயில் எறிந்தாய். நல்ல வேளை... உன் குறி தவறவில்லை.

உடைந்த மணியிலிருந்து காயத்தோடு வரும் ஒலிபோல என் உடைந்த இருதயத் திலிருந்து வரும் வார்த்தைகள் பெருமூச்சு களாகிவிட்டன. சொல்லிவிடு எமிலி. வெளியேற முடியாத காற்று பலூனை உடைத்துவிடுகிறது; வெளியேற முடியாத வார்த்தை எதை உடைக்கப்போகிறதோ?

உன் வான வேடிக்கை முடிந்தது; திரும்பு கிறாய். என்னை இப்போது ஏறெடுத்துப் பார்க்கிறாய். துக்கம் தாங்குவதற்கு இருதயம் மட்டும் பலமாயிருந்தால் போதும்; ஆனால், சந்தோஷம் தாங்குவதற்கு உடலும் உயிரும் பலமாக இருக்க வேண்டும். இரு... இரண்டையும் பலப்படுத்திக்கொள்கிறேன்; இப்போது சொல். ஆகா... பேசிவிட்டாய்.

''சின்னப்பாண்டி... இந்தச் சூழலை நான் நேசிக்கிறேன். உலகத்தின் காற்றே இங்கிருந்துதான் உற்பத்தியாகிறதோ என்று தோன்றுகிறது எனக்கு. இங்கேயே வாழ்ந்துவிடக் கூடாதா என்று ஆசை வந்து வந்து போகிறது.''

''இங்கேயே வாழ்வதற்கு உங்கள் உலகம் உன்னை அனுமதிக்குமா எமிலி?''

''என் உலகம் வெளியே இல்லை. உள்ளேயே இருக்கிறது. நான்தான் என் உலகம். எனக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் அப்படித்தான்.''

''இல்லை. என் உலகம் நான் மட்டும் இல்லை.''

''உங்கள் உலகம் நீங்கள் மட்டும் இல்லை என்பது எண்ணம். ஆனால், நீங்கள் மட்டும்தான் என்பது யதார்த்தம்.''

''மேற்கத்திய வாழ்க்கைமுறைக்கும் இந்திய வாழ்க்கைமுறைக்குமான இடைவெளியில் நின்று பேசுகிறது உங்கள் குரல். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சமூகச் சார்பு இருக்கிறது.''

''உங்களைக் குறித்த ஒரு முடிவெடுப்பது நீங்களா? உங்கள் சமூகமா?''

''தங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே சமூகத்தைச் சார்ந்திருக்கிறார்கள். முதலில் உங்களை நம்புங்கள்; பிறகு சமூகத்தை நம்புங்கள்.''

''நம்பிக்கை என்பதுகூடச் சந்தர்ப்பம்தான்.''

''இந்தச் சந்தர்ப்பத்தில் என்னை நம்புகிறீர்களா?''

''இப்போது என் வாழ்வின் நம்பிக்கையே நீதான் எமிலி.''

''நம்பிக்கையின் குரலுக்குச் செவிசாய்ப்பீர்களா?''

''நிச்சயமாக.''

''என்னோடு அமெரிக்கா வருவீர்களா?''

அவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

''நெஞ்சுக்குப் பக்கத்தில் வந்துவிட்டாய்... வா''- உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்.

''சொல்லுங்கள் சின்னப்பாண்டி...

என்னோடு அமெரிக்கா வருவீர்களா?''

''ஏன்? எதற்கு?''

''உங்கள் மண் நல்லது; மக்கள் நல்லவர் கள்; உன்னத உழைப்பாளிகள். ஆனால், கற்கால உழைப்பைவிட்டு முற்றிலும் விடுபடாதவர்கள். உங்கள் விவசாயத்தைநவீனப் படுத்த வேண்டும். இந்திய வேளாண்மை மரபும் நவீனத் தொழில்நுட்பமும் இணைந்து இங்கே விவசாயத் தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். என்னோடு வாருங்கள். தொழில்நுட்பம் பயிலுங்கள்; முதலில் உங்கள் 'மாதிரி கிராமத்’தில் அமல்படுத்துங்கள். உங்களை அழைத்துப்போகிறேன். விரைவில் திருப்பியும் அனுப்புகிறேன். அதற்கான செலவுக்கு நான் பொறுப்பு. இதை மனம்விட்டுப் பேசத்தான் உங்களைத் தனிமையில் சந்திக்க ஆசைப்பட்டேன். சமூகத்துக்காகத் தொண்டு செய்வதற்குச் சமூக சம்மதம் எதற்கு? எங்கே உங்கள் பாஸ்போர்ட்?''

அவள் பேசப் பேச... அவன் கண்களில் நீர்மேகம் நின்றது; காட்சிகள் மங்கலாயின.

காற்றலைக்குச் சிக்காத வானொலிபோல் அவள் வார்த்தைகள் விட்டுவிட்டுக் கேட்டன.

அந்தி கறுக்க - வழித்தடம் மயங்க... மலைச்சரிவில் கதறிக்கொண்டே இறங்கியது மந்தையைப் பிரிந்த கன்று ஒன்று.

- மூளும்