Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்படம் : சொ.பாலசுப்பிரமணியன்

நானும் விகடனும்!

இந்த வாரம் : இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்படம் : சொ.பாலசுப்பிரமணியன்

Published:Updated:

பிரபலங்கள்  விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை,  விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும்   பக்கம்!

##~##

'' 'நானும் விகடனும்!’ எனக்கு ரொம்பவே பொருத்தமான தலைப்பு! 'விகடன்’கிறதை நான் ஆனந்த விகடன்னு மட்டும் பார்க்காம, விகடனோட குழுமப் பத்திரிகைகள், எஸ்.எஸ்.வாசன், எஸ்.பாலசுப்ரமணியன், சினிமானு பல பரிணாமங்களில் பார்க்கிறேன். இங்கே ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். எனக்கும் விகடனுக்குமான உறவு 1969-லயே ஆரம்பிச்சிருச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போ அண்ணா முதலமைச்சர். தமிழ்நாட்டில் முதல்முறையா லாட்டரிச் சீட்டை அறிமுகப்படுத்துறாங்க. முதல் பரிசு ஒரு லட்ச ரூபாய். தமிழ்நாடே பரபரப்பா சீட்டு வாங்குச்சு. லட்சாதிபதி கனவுல நிறைய ஏழைக் குடும்பங்கள் கடன் வாங்கி சீட்டு வாங்கினாங்க. அதில் எங்க அண்ணன் கண்ணுதல் வாங்குன சீட்டுல அதிர்ஷ்ட தேவதை பெயர் எழுதியிருந்ததுபோல. என் அண்ணன்தான் தமிழ்நாட்டின் முதல் லாட்டரி லட்சாதிபதி.

அப்போ மத்த பத்திரிகைகள்ல என் அண்ணன் போட்டோவை மட்டும்தான் போட்டிருந்தாங்க. விகடன்ல மட்டும்தான் எங்க ஒட்டுமொத்தக் குடும்பப் படங்களோட பெரிய கட்டுரையே வந்துச்சு. அதனாலயே, விகடன் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. தொடர்ந்து விகடன் வாங்க ஆரம்பிச்சேன். எனக்கு ஓவியங்கள் மேல பெரிய ஈர்ப்பு. அதுவும் நான் ஓவியர் ஜெயராஜின் ரசிகன். விகடன் கைக்கு வந்ததும் அவரோட ஓவியங்களை அப்படியே வரைஞ்சு பார்ப்பேன். ஜெயராஜின் ஓவியங்களாலதான் சுஜாதா கதைகளைப் படிக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் சுஜாதா எனக்குப் பரிச்சயம். விகடன் குழுமத்துல இருந்து வர்ற ஒவ்வொரு பத்திரிகை யிலுமே எனக்குத் தொடர்பு உண்டு. பசுமை விகடன் அறிமுகமானப்ப, முதல் இதழில் என் கட்டுரை வெளியானது. பசுமை விகடன்ல என் கட்டுரை வெளி

நானும் விகடனும்!

வந்ததை நான் ரொம்பப் பெருமையா நினைக்கிறேன்.

என் படங்களுக்கு வர்ற எல்லாப் பத்திரிகை விமர்சனங்களையும் சேர்த்துவெச்சு மொத்தமாப் படிப்பேன். நாம யோசிக்காத கோணத்தில் புதுசா ஏதாவது சொல்லியிருந்தா, அதைக் குறிச்சுவெச்சுப்பேன். அதிலும் ஆனந்த விகடன் விமர்சனத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பேன். 'இயற்கை’ பட விமர்சனத்துல என்னைப் பாராட்டி எழுதி இருந்தாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. படத்தில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்பர் ஒருத்தர் நடிச்சிருந்தார். விமர்சனத்துல அவரை 'நீக்ரோ’னு குறிப்பிட்டு இருந்தாங்க. 'விமர்சனத்தில் நீங்க குறிப்பிட்ட 'நீக்ரோ’ என்பது ஒரு கெட்ட வார்த்தை. அவங்களைக் கறுப்பர்கள்னு மட்டும் சொல்லலாம்’னு சும்மா ஒரு போன் பண்ணித்தான் சொன்னேன். அப்போலேர்ந்து 'நீக்ரோ’ங்கிற வார்த்தையை விகடன் பயன்படுத்தலை. தவறுகள் எங்கேயும் எப்போதும் நடக்கும். அதை உடனே ஏத்துக்கப் பெரிய மனசு வேணும். அந்தமனசு விகடனுக்கு உண்டு.

என்னோட 'ஈ’ படத்துக்கு நல்ல விமர்சனம் எழுதியிருந்தாங்க. அந்த மாதிரி வித்தியாசமான கதைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் விகடன் விமர்சனங்களுக்குப் பெரிய பங்கு உண்டு. 'பேராண்மை’ விமர்சனத்தில் என் பெயரைக் குறிப்பிடலை. அதில் எனக்கு இப்போதும் வருத்தம் உண்டு. விகடன் விமர்சனம் பண்ற ஸ்டைல் பிடிக்கும். ஆனா, என் படங்களுக்கு விகடன் மார்க் போடுறது பிடிக் காது. பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே, நான் சரியா மார்க் வாங்கலை. அதே மாதிரி விகடன்லயும் ரொம்பக் குறைச்சலா மார்க் வாங்கிட்டு இருக்கோ மோங்கிற ஃபீலிங். 'பேராண்மை’ படத்துல ஒரு வசனம் வெச்சிருப்பேன். தன்ஷிகா 'ஜெயம்’ ரவிகிட்ட, 'உங்களுக்கு மார்க் போட வாத்தியாரே இல்லை’னு சொல்லுவாங்க. 'தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் படிச்சுட்டு வந்த ஒருத்தன், தகுதியும் திறமையும் இல்லாம இருப்பான்’கிற பொதுவான மனநிலைதான் அந்தப் பெண்களிடம் இருக்கும். ஆனா, அவன் தகுதி அபரிமிதமானது. அவனுக்கு அனுபவ அறிவு அதிகம். அதுக்கு ஒரு கேள்வித் தாள் கொடுத்து பரீட்சை வெச்சு அறிஞர்களால் மார்க் போட முடியாது. அந்த வசனத்தை விகடன் விமர்சன மார்க்கை மனசுல வெச்சுத்தான் எழுதினேன். 'நீ என் நண்பன் தான். ஆனா, நீ எனக்கு மார்க் போடக் கூடாது!’ அப்படிங்கிற உரிமையான கோபம் அது.

எஸ்.எஸ்.வாசனைப் பத்தி சொல்லலைன்னா, விகடனைப் பத்தி சொல்றது முழுமை அடையாது. நான் சினிமாவில் ரோல் மாடலா நினைக்கிறதும் சினிமா கத்துக்க வர்றவங்களுக்கு சுட்டிக்காட்டுறதும் வாசனைத்தான். 'சந்திரலேகா’ படத்தை முதல்முறையா உலகம் முழுக்க வெளியிட்டார். அதுக்காக எக்கச்சக்க விளம்பரம் பண்ணார். 'இந்தியப் படங்களுக்கு உலக அளவில் மார்க்கெட் இல்லை. இதுக்கு இவ்வளவு விளம்பரம் பண்ணா நஷ்டம்தான் வரும்’னு சாந்தாராம் எச்சரிச்சாராம். ஆனா, வாசன் விளம்பர வியூகங்கள் மூலமா ஒரு சினிமாவை ஓடவைக்க முடியும்னு நிரூபிச்சார்.

'ஒளவையார்’ படத்துல யானைங்க கும்பலா மோதிக் கோட்டையை உடைக்கிற மாதிரி ஒரு காட்சி. யானைகளைக் கொண்டுபோய் நிஜமா சுவத்துல மோதவைக்க முடியாதே? அதனால கோட்டையை ஒட்டி யானைகளை நிறுத்தி ரிவர்ஸ்ல நடக்கவெச்சு படம் பிடிச்சிருக்காங்க. எல்லாமே ரிவர்ஸ் ஷாட். என்ன ஒரு ஐடியா? எடுத்ததை போட்டுப் பார்க்கும்போது, 'அப்படியே இங்கிலீஷ் படம் மாதிரி

நானும் விகடனும்!

இருக்கு’னு ஒருத்தர் சொல்லியிருக்கார். 'அட... இங்கிலீஷ் படத் தோட காட்சிகளை உருவிட்டதா சொல்வாங்களோ?’னு நினைச்ச வாசன், அதே காட்சி களை மறுபடியும் படம் பிடிக்கச் சொல்லி இருக்கார். ஆனா, வித்தியாசத்தைக் காட்ட சிம்பிளா எல்லா யானைகளுக்கும் நெத்தில விபூதிப் பட்டை அடிக்கச் சொல்லிட்டார். யானைகளுக்கு விபூதிப் பட்டை வேற எந்த நாட்டுலயும் அடிக்க மாட்டாங்கள்ல! நாங்க எடுத்தது ஒரிஜினல் காட்சிகள்தான்னு காட்டு றதுக்கு மனுஷன் எவ்வளவு செலவு பண்ணியிருக்கார்னு நினைச்சாலே ஆச்சர்யமா இருக்கு.

ஏற்கெனவே இருக்கிற ஒரு டிரெண்டை மாத்துறவன்தான் கலைஞன். தான் நினைக்கிறதை மத்தவங்களை ஏத்துக்கவைக்குறது பெரிய சாதனை. அது வாசனுக்குக் கை வந்த கலை. என்னைக் கேட்டா, அவர்தான் அந்தக் காலத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ஒரு சினிமாக் காரனா அவரைப் பிடிச்சதாலேயோ என்னவோ, எனக்கு விகடனையும் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு.

நான் விகடனை நாலஞ்சு விதமாப் படிப்பேன். முதல்ல படங்கள், ஓவியங்களைப் பார்த்துட்டு தலைப்புகளை மட்டும் வாசிச் சுட்டு வெச்சிருவேன். அப்புறம் ஜோக்ஸ் படிப்பேன். அப்புறம் கட்டுரைகளைப் படிப்பேன். ஒரு வாரம் முழுக்க வெச்சு வெச்சுப் படிப்பேன். அப்படி ஒரு வெரைட்டியும் அடர்த்தியும் விகடன்ல மட்டும்தான் உண்டு. சில கட்டுரைகளைப் படிச்சுட்டு சிரிச்சிருக்கேன். சில கட்டுரைகளைப் படிச்சுட்டு அழுதிருக்கேன். சில கட்டுரைகளை ரசிச்சுப் படிக்க நேரம் இல்லாம மாசக்கணக்குல காத்திருந்து படிச்சிருக்கேன்.  

சினிமாக் கலைஞர்கள் எல்லாருக்குமே விகடன் எப்பவுமே ஸ்பெஷல்தான். தன் படத்தைப் பத்தி ஒவ்வொரு இயக்குநரும் கொடுக்கிற முதல் பேட்டி விகடன்லதான் வரணும்னு ஆசைப்படுவாங்க. அதிலும் கவர் ஸ்டோரி வரும்போது 'இது என் படம்டா!’னு பெருமிதமா இருக்கும். நிறையப் பேர் போன் பண்ணி விசாரிச்சுட்டே இருக்கும்போது, சந்தோஷமா சலிப்பு வரும். நீங்க வித்தியாசமா ஏதாவது பண்ணா, நிச்சயம் விகடனோட ஞாபகத்துல இருப்பீங்க. சில மாதங்களுக்கு முன்னாடி

நானும் விகடனும்!

விகடன்ல, மனிதர்களை வெச்சு மருந்துப் பரிசோதனை செய்றதைப் பத்தி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதில் 'ஈ’ படத்தைக் குறிப்பிட்டு இருந்தாங்க. விகடன்ல நம்மைப் பத்தி செய்தி வர்றதே கௌரவம். அதுவும் ஒரு முக்கியமான கட்டுரையில் என்னை ரெஃபர் பண்ணி இருக்கிறதைப் பெரிய கௌரவமா நினைச்சு சந்தோஷப்பட்டேன்.

தமிழ் எழுதப் படிக்கத் தெரிஞ்ச எல்லாருக்கும் விகடனுடன் பரிச்சயம் இல்லாம இருக்க முடியாது. எனக்கும் விகடனுக்குமான உறவு அதையும் தாண்டியது. விகடன் எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கு. அதே சமயம் எனக்கும் விகடன் மேல இருக்கிற உரிமையில் விகடன் தாத்தாவுக்கு ஒரு வேண்டுகோள்.

1969-ல் வந்த அந்த லாட்டரி லட்சாதிபதிக் கட்டுரையில என்னோட குடும்பப் படம் வந்திருக்கு. இப்போ என்கிட்ட எங்க குடும்பப் படம் எதுவும் கிடையாது. அதை எனக்குத் தேடிப் பிடிச்சுத் தர முடியுமா விகடன் தாத்தா?''