Published:Updated:

மேட்டூரிலிருந்து தஞ்சாவூர் வரை!

மேட்டூரிலிருந்து தஞ்சாவூர் வரை!

மேட்டூரிலிருந்து தஞ்சாவூர் வரை!

மேட்டூரிலிருந்து தஞ்சாவூர் வரை!

Published:Updated:
##~##

ரண்டு மாதங்களுக்கு முன், 'மேட்டூரில் நீர்மட்டம் குறைந்துவிட்டது; நிலைமை மோசமாகிக்கொண்டுவருகிறது; மின் வெட்டு இருந்தே தீரும்’ என்று செய்திகள் வந்தபடியே இருந்தன. சில நாட்களுக்கு மின் வெட்டுகூட அமலில் இருந்தது. இந்த மாதமோ, திடீரென்று நிலைமை தலைகீழாகிவிட்டது. 'மேட்டூரில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டேபோகிறது. அதிகப்படியான தண்ணீரைத் திறந்துவிட வேண்டி இருக்கிறது. அதனால், காவிரியிலும் கொள்ளிடத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளிலும் உள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது’ என்ற பரபரப்பான செய்தி அனைவரை யும் கவலையில் ஆழ்த்தியது. 'பார்த்தீங்களா சார், இயற்கையின் திருவிளையாடலை? நாம் என்னமோ திட்டங்கள் போடுகிறோம், அணைகள் கட்டுகிறோம். மழை ஏமாற்றிவிட்டாலோ, அல்லது அளவுக்கு மீறிப் பெய்துவிட்டாலோ ஒன்றும் செய்ய முடியாமல் திண்டாடுகிறோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டார்கள். தினந்தோறும் காலையிலும் மாலையிலும் பத்திரிகைகளை வாங்கி, 'மைசூரில் மழை பெய்கிறதா? மேட்டூரில் எத்தனை கியூசிக்ஸ் தண்ணீர் விடுகிறார்கள்? கொள்ளிடம் உடைப்பு என்ன ஆயிற்று? கும்பகோணத்தில் வெள்ளம் வடிந்து விட்டதா?’ என்றெல்லாம் கவலையோடுபார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

மேட்டூரிலிருந்து தஞ்சாவூர் வரை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 வெள்ளத்தைப் பற்றிப் பேசியும் படித்தும் எங்களுக்கு அலுத்துவிட்டது. மேட்டூருக்குப் போய்ச் சேர்ந்தோம். மேட்டூர் நீர்த்தேக்கம் நிரம்பி இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே நீர்ப்பரப்புதான். ஒரு பக்கத்தில் நீர்த் தேக்கத்தில் இருந்த அதிகப்படியான தண்ணீர் ராட்சஸ வேகத்தில் வெளியே பாய்ந்துகொண்டு இருந்தது.

'அடேயப்பா, என்ன வேகம். என்ன இரைச்சல்?’ என்றேன் நான். 'இது என்னங்க தண்ணி! ரெண்டு நாளைக்கு முன்னே பார்க்கணும். ஏகப்பட்ட தண்ணி விட்டாங்க. 'சேலம் கேம்ப்’ல வீட்டுக்குள்ளே எல்லாம் தண்ணீர் வந்துடுச்சு’ என்றார் எங்கள் டிரைவர். நாங்கள் அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது, அங்கு இருந்த அதிகாரி ஒருவர் வேறு ஒருபுறமாக கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.

''என்ன சார், பார்க்கிறீர்கள்?''

''வேறென்ன சார், மைசூர் பக்கம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அங்கே மர்க்காராலே மழை பெய்துட்டு இருக்காம். இன்னிக்கு கிருஷ்ண ராஜ சாகர்ல நிறையத் தண்ணீர் ரிலீஸ் பண்ணுவான், மறுபடியும் நமக்குத் தலைவலிதான்!''

''அங்கே மழை ஓயாமல் பெய்துட்டே இருந்தா என்ன செய்வது?''

''எங்க இன்ஜினீயரிங் மூளையை எல்லாம் செலவு செய்து ஏதோ சமாளிச்சுட்டு இருக்கோம். அதுக்கு மேல 'அவன்’தான் காப்பாத்தணும்'' என்று கையை மேலே உயர்த்திக் காண்பித்தார் அவர்.

''அவன் காப்பாற்றுவானாக'' என்று பிரார்த்தனையுடன் கோவை ஜில்லாவில் இருக்கும் பவானிக்கு வந்து சேர்ந்தோம்.

''காவேரிலயும் பவானிலயும் வெள்ளம் வந்துட்டு இருக்கிறபோது, போலீஸ்தான் வேன்ல வந்து, எங்களைக் காலி பண்ணச் சொல்லி ரேடியோல சொன்னாங்க. மொத்தமா 8,000 பேர் கிளம்பிப் போனோம். வெள்ளம் வடிஞ்சதும் திரும்பிட்டோம். இங்க வந்து பாருங்க... எத்தனை வீடு விழுந்துபோயிட்டுதுங்க.''

மேட்டூரிலிருந்து தஞ்சாவூர் வரை!

காவிரிக் கரையோரமாகச் சுமார் 50 வீடுகள் இடிந்து தரையோடு தரையாக இருந்ததைப் பார்த்தோம். அவற்றின் சொந்தக்காரர்களும் இடிந்துபோய் உட்கார்ந்து இருந்தார்கள். பவானியில் மட்டும் சுமார் 300 நெசவாளர்கள் வீடு இழந்து, கைத்தறிச் சாதனங்களை இழந்து தவித்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் சொன்ன சோகக் கதைகள் எங்கள் நெஞ்சத்தை உருக்கிவிட்டன. நெசவாளர் குடும்பங்களுக்குத் தற்காலிகமாக உணவு, உடை அளிக்கும் அரும்பணியை டவுன் காங்கிரஸ் கமிட்டித் தலைவரின் தலைமையில் அமைக்கப்பட்ட நிவாரணக் குழு செய்துவருவதாக அறிந்து, அவர்களைப் பாராட்டிவிட்டு, அங்கே இருந்து திருச்சிக்குக் கிளம்பினோம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகால் சோழனால் கட்டப்பட்டு, இன்றும் அவரது ஆற்றலுக்கு அழியாச் சின்னமாக நின்றுகொண்டு இருக்கும் கல்லணையில், காவிரி நீர்மட்டம் உயர்ந்துகொண்டு போகவே, அதைக் கொள்ளிடத்தில் திருப்பிவிட்டுக்கொண்டு இருந்தார்கள். கொள்ளிடம் துள்ளியோடி, கல்லணைக்குக் கீழே, கோயிலடியில் கரையை உடைத்துக்கொண்டு பஸ் போகும் சாலையைப் பிளந்து, பேய்போலப் பாய்ந்து ஓடிக்கொண்டு இருப்பதைக் கண்டோம். இரண்டு, மூன்று நாட்களாக மனித சக்திக்கும் இயற்கையின் சக்திக்கும் இடையே அங்கு ஒரு பெரும் போராட்டம் நடந்துகொண்டு இருப்பதை, திருச்சி கலெக்டர் குலாம் மகமத் பாஷாவும் நீர்ப்பாசனப் பிரதம இன்ஜினீயர் கே.வி.ஏகாம்பரமும் விவரித் தார்கள். அவர்கள் மேற்பார்வையின் கீழ், ராணுவத்தினரும் போலீஸ் படைகளும் 2,000 கூலியாட்களும் தோளோடு தோள் நின்று, அந்த உடைப்பை அடைப்பதில் ஈடுபட்டு இருந்தார்கள். சாக்குப் பைகளையும் கற்களையும் ஆட்களையும் கட்டை மரங்களையும் ஏற்றிக்கொண்டு, லாரிகள் வந்த வண்ணம் இருந்தன. அங்கு ஒரு பெரிய அணைக்கட்டு வேலை நடந்துகொண்டு இருப் பதுபோல்தான் தோன்றிற்று. தகர பீப்பாய்களில் கற்களைப் போட்டு நிரப்பி, அவற்றின் மீது மணல் மூட்டைகளை அடுக்கிக்கொண்டு இருந் தார்கள். ஆனால், வெள்ளமோ அடங்குவதாகக் காணோம். இருந்தும், அங்கு வேலை செய்தவர் களின் நம்பிக்கையும் ஊக்கமும் குறையவே இல்லை. ''இதுதான் எல்லாவற்றையும்விடப் பெரிய உடைப்பு. இதை அடைத்துவிட்டோ மானால், தஞ்சாவூருக்கு ஏற்பட்டு இருக்கும் அவதியைப் பெரும் அளவில் குறைத்துவிடலாம். வெள்ளம் கொஞ்சம் ஒத்துழைத்தால், அதைக் கட்டுப்படுத்திவிடுவோம்!'' என்று பிரதம இன்ஜினீயர் சொன்னார்.

''வெள்ளம் எப்போது அடங்கும் என்று நினைக்கிறீர்கள்?''

''மைசூரில் மழை நிற்கும்போது!''

இதற்கு மேல் அவரை என்ன கேட்பது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. ''உங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிட்ட வேண்டும்'' என்று அவரை வாழ்த்திவிட்டு, நாங்கள் தஞ்சாவூரை நோக்கி காரைச் செலுத்தினோம்.

தஞ்சையில் யாரைப் பார்த்தாலும், வெள்ளத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். ''இன்னிக்கு காவிரியில் தண்ணீர் அதிகம் ஏறிக் கொண்டே இருக்கிறது'' என்று எல்லோரும் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். ''என்னமோ சார், சுற்றுப்புறத்தில் இருக்கும் கிராமத்து ஜனங்கள் எல்லாம் வெள்ளம்போல் வந்துகொண்டே இருக் கிறார்கள். சர்க்கார் எப்படித்தான் நிலைமையைச் சமாளிக்கப்போகிறதோ?'' என்று தம் தலையில் அத்தனை பாரமும் விழுந்துவிட்டது போல் ஒருவர் அலுத்துக்கொண்டார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் 6,000 பேர் கட்டின வீடுகளைவிட்டு, கட்டிய துணியுடன் ஆண்டவனிடம் அடைக்கலம்புகுந்து இருப்பதைக் கேள்வியுற்று, பெரிய கோயிலுக்குள் நுழைந்தோம். மக்கள் உள்ளம் நொந்து, உடல் குறுகி ஒரு மூலையில் முடங்கிக்கிடந்தார்கள். முனிசிபல் அதிகாரிகள், தொற்று நோய் பரவாமல் இருக்கும்பொருட்டு அவர்களுக்கு எல்லாம் ஊசி போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

மேட்டூரிலிருந்து தஞ்சாவூர் வரை!

பிறகு, அரசன் ஆண்ட அரண்மனையில் அநாதைகளுக்கு அன்னமிட்டுக்கொண்டு இருந்த காட்சியைப் பார்த்தோம். தஞ்சையில் திரும்பிய இடமெல்லாம், உதவி நாடி நின்ற ஏழை மக்கள்தான்... தெருவெல்லாம் கருணை உள்ளம் படைத்தவர்களின் அன்ன தானம்தான். 'சோழ வளநாடு சோறுடைத்து’ என்று ஒருதரம் பெருமையுடன் சொல்லிக்கொண்டேன்.

பிறகு, திருவையாறு பாதையில் ஏற்பட்டு இருந்த உடைப்புகளைப் போய்ப் பார்த்தோம். அந்த கான்கிரீட் ரோடு 10 இடங்களில் பிளக்கப்பட்டு இருந்த பரிதாபத்தைப் பார்த்தபோது, வெள்ளத்தின் வேகத்தை ஒருவாறு புரிந்துகொள்ள முடிந்தது.

நாங்கள் சென்ற இடம் எல்லாம், சர்க்கார் முன்யோசனையுடன் மக்களை வெளியேற்றியதைப் பற்றி எல்லோரும் ஒருமுகமாகப் பாராட்டினார்கள்.

சர்க்கார் செய்யும் உதவி ஒருபுறம் இருக்க, தெய்வமும் கருணை காட்டி இருக்கிறது. திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் மழையே பெய்யவில்லை என்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். இந்தச் சமயத்தில், வெள்ளப் பகுதிகளில் இத்தனை தொல்லைகளுடன் கடும் மழையும் சேர்ந்துகொண்டு இருந்தால், அது நிவாரண வேலைகளுக்குப் பெரும் தடையாக இருந்திருக்கும். அதன் விளைவை நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

- படங்கள்: ஆரென்