Published:Updated:

என் ஊர் : கோடம்பாக்கம்

Neelima Rani

கோடம்பாக்கம் நினைத்தாலே மனசு 'அலைபாயுதே'!

என் ஊர் : கோடம்பாக்கம்

கோடம்பாக்கம் நினைத்தாலே மனசு 'அலைபாயுதே'!

Published:Updated:
Neelima Rani
##~##

'கோடம்பாக்கம்னாலே முதல்ல ஞாபகத்துக்கு வர்றது சினிமாதான். ஒரு காலத்துல தமிழ் சினிமாவின் பலதரப்பட்ட கலைஞர்களும் குடியிருந்த பகுதி. ஆனா, இன்னைக்கு கொஞ்சம் பேரைத் தவிர மத்தவங்க வெவ்வேற இடங்களுக்குக் குடிபெயர்ந்துட்டாங்க. ஒண்ணு ரெண்டு இருந்த தியேட்டர்களையும் மூடிட்டாங்க!'' - தான் வளர்ந்த கோடம்பாக்க நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகை நீலிமா ராணி.

 'நம்பர் 6, அஜீஸ் நகர் 2-வது தெரு. இது சின்ன வயசுல நான் குடியிருந்த வீட்டு அட்ரஸ். ஒரே ஒரு ரூம், கிச்சன்... மொத்த வீடே அவ்வளவுதான். அந்த வீட்லதான் ஏழு வருஷத்துக்கு மேல இருந்தோம். அப்புறம் எதிர்த்திசையில இருந்த அடுக்குமாடி வீட்டுக்கு மாறினோம். இந்தத் தெருவைப் பொறுத்தவரைக்கும் அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கும் வீடுகள்ல எந்த மாற்றமும் இல்லை. ஆனா, நாங்க குடியிருந்த வீடு மட்டும் இப்போ இல்லை. இடிச்சுட்டாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர் : கோடம்பாக்கம்

வீட்டுக்குப் பக்கத்துல ரயில்வே டிராக். நடந்து போற தூரம்தான் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன். அதனால எப்பப் பார்த்தாலும் ரயில் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். வீடு விட்டா ஸ்கூல், கார்லயே ஷூட்டிங் ஸ்பாட்னு இருந்ததால ரொம்பநாள் வரைக்கும் நான் எலெக்ட்ரிக் டிரெயின்ல போனதே இல்லை. ஆனா, ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் நேரம் கிடைக்கிறப்ப கோடம்பாக்கம் டு தாம்பரம் வரைக்கும் சும்மா போயிட்டு வந்து என் டிரெயின் பயண ஆசையைத் தீர்த்துக்கிட்டேன். ரயில்வே டிராக்கைத் தாண்டினால் தி.நகர். அப்ப எங்க தெருவுல ஒரு ரயில்வே கேட் இருக்கும். அந்த வழியாத்தான் மக்கள்

என் ஊர் : கோடம்பாக்கம்

தி.நகருக்கு ஷாப்பிங் போவாங்க. ஆனா, இப்ப அந்த கேட்டை மூடிட்டு பாலம் கட்டிட்டாங்க. பாலத்துல மேல ஏறிப் போகணும்னா சுத்திக்கிட்டுப் போக வேண்டியதாயிருக்கு. அதனால தி.நகருக்கும் என் ஏரியாவுக்கும் இடைவெளி அதிகமானது மாதிரி இருக்கு.

அப்ப அதே தெருவுலயே அத்தை, சித்தப்பானு என் சொந்தக்காரங்க குடியிருந்தாங்க. ஒரு வாட்ச் வாங்கினாக்கூட எங்க வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே அவங்க வீட்டுக்கெல்லாம் போய்க் காமிச்சிட்டு வந்துடுவேன். ஆனா, இப்ப சென்னையில் பெரும்பாலும் எல்லா ஏரியாவிலுமே நியூக்ளியர் ஃபேமிலிதான். இன்னைக்கு உள்ள குழந்தைகளுக்குச் சொந்தங்களோட கண்டிப்பும் செல்லமும் கிடைக்குதாங்கிறது சந்தேகம்தான்.

ரெங்கராஜபுரம் கலாமந்திர் ஸ்கூல்லதான் ஏழாவது வரைக்கும் படிப்பு. பிறகு ஸ்ரீவித்யா மெட்ரிக்குலேஷன் ஸ்கூல். ஏதோ பிரச்னையால ஸ்ரீவித்யா மெட்ரிக்குலேஷனை இடிச்சுட்டாங்க. எட்டு வருஷத்துக்கு முன்ன நான் படிச்ச ஸ்கூலே இப்ப இல்லாம இருக்கிறதை நினைச்சா மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஸ்கூல் போற வழியில பி.பி.ஆர். பேக்கரியில பன் பட்டர் ஜாம் வாங்கிச் சாப்பிடுவோம். தினமும் ஒருத்தி வாங்கித் தரணும்னு எங்களுக்குள்ள ஒரு ரூல்.  இன்னைக்கும் அந்த பேக்கரி அப்படியே இருக்கு. அதே மாதிரி இக்ளூ ஐஸ் க்ரீம் கடை, ஏரியாவுல ரொம்பப் பிரபலம். அஞ்சு ரூபாய்க்கு அப்ப ஐஸ் க்ரீம் கிடைக்கும். வெனிலா, ஸ்ட்ராபெரி, மேங்கோனு தினமும் ஒவ்வொரு டேஸ்ட்ல வாங்கிச் சாப்பிடுவோம். ஆனா, அந்தக் கடை இருந்த இடத்துல இப்ப வேறொரு கடை இருக்கு.  

அப்ப லிபர்டி தியேட்டர் ரொம்பவே ஃபேமஸ். ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸுகளோட சேர்ந்து 'ஒன் டூ த்ரீ’, 'அலைபாயுதே’, குடும்பத்தோட 'மை டியர் குட்டிச் சாத்தான்’, 'ஜுராசிக் பார்க்’னு நிறைய படங்கள் பார்த்திருக்கேன். ஒன்பதாவது படிச்சப்ப 'அலைபாயுதே’ பார்த்துட்டு கிளாஸே ஃபீலிங்கோட திரிஞ்ச நாட்கள் இப்பவும் மனசுக்குள்ள நிக்குது. ஆனா, இன்னைக்கு அந்த தியேட்டர் இல்லை. ரஜினி சாரின் ராகவேந்திரா கல்யாண மண்டபம் அப்ப இருந்து இப்ப வரைக்கும் கோடம்பாக்கத்தோட அடையாளங்கள்ல ஒண்ணு. இயக்குநர்கள் குடியிருந்த டைரக்டர்ஸ் காலனி, யுனைடெட் இந்தியா காலனி, டெய்லர்ஸ் எஸ்டேட், ரெங்கராஜபுரம், ட்ரஸ்ட்புரம்னு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கதை இருக்கு.

கோடம்பாக்கம் ஸ்டேஷன் ரோட்ல இருக்கிற நாகாத்தம்மன் கோயில் ரொம்பவே பிரபலம். குழந்தைக்கு ஜுரம்னா திருஷ்டி கழிக்க இங்கதான் கொண்டுவருவாங்க. வேப்பிலை மந்திரிச்சி, கயிறு கட்டினா எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துடும்கிறது மக்களோட நம்பிக்கை. அப்ப பிள்ளையார் சதுர்த்தினா ஏரியாவே களைகட்டும். நாலஞ்சு தெருவுலேயே 30, 40 சிலைகள் சேர்ந்துடும். ஆனா, இன்னைக்கு மனுஷங்கக்கிட்ட இருக்கிற ஒற்றுமை குறைஞ்சது மாதிரியே சிலைகளும் குறைஞ்சுடுச்சு!''

என் ஊர் : கோடம்பாக்கம்

- சி.காவேரி மாணிக்கம், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்