Published:Updated:

ஸ்நேக் சினேகிதன்!

பாரதபுரம் பாம்புப் பிடி சர்வீஸ்

##~##

செங்கல்பட்டுவாசிகளுக்கு '100’, '108’ போல், பாரதபுரம் முத்துஷாவின் செல்போன் எண்ணும் அவசர உதவி எண்தான். செல்போன் மணி அடித்தால், 'ஹலோ’ என்பதற்குப் பதில், ''எந்த ஏரியா, எத்தனை பாம்பு?'' என்றுதான் கேட்கிறார். அதே தெருவைச் சேர்ந்த ஒருவருடைய வீட்டில் புகுந்த பாம்பை லாகவமாகப் பிடித்து பையில் போட்டபடி வீட்டுக்கு வந்தவரைச் சந்தித்தேன்.

 'திண்டிவனத்தில் உள்ள மாமா மக்பூலிடம்தான் வளர்ந்தேன். அவர் வீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு கண்ணாடிக் கூண்டைவெச்சு அதுல பாம்புகளை வளர்த்துட்டு வந்தார். சாரை, கட்டுவிரியன், நாகப்பாம்புனு கிட்டத்தட்ட எல்லா வகை பாம்புகளும் அங்க இருக்கும். ஆரம்பத்துல அந்தப் பக்கம் போறதுக்கே பயப்படுவேன் ஆனா, மாமாவோட பழகிப் பழகி பாம்புகளும் பழக்கமாயிடுச்சு. அப்புறம் எலி, தவளைங்களைப் பிடிச்சு பாம்புகளுக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன். பாம்புகளும் என்கிட்ட நெருங்கிப் பழக ஆரம்பிச்சுடுச்சு. கண்ணாடிக் கூண்டை சுத்தம் செய்றது, பாம்புகளை இடமாற்றம் பண்றதுனு பாம்புகளோடவே வாழ ஆரம்பிச்சுட்டேன். அப்ப எனக்குத் தொழுநோய் அறிகுறி இருந்ததால செங்கல்பட்டு பக்கத்துல இருக்கிற திருமணி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்தேன். அப்புறம் அங்கேயே தங்க வேண்டிய நிலைமை. சிகிச்சை முழுசா முடிஞ்ச பிறகும் இந்த ஊரைவிட்டுப் போக மனசு இல்லை. இங்கயே தங்கி பொழைக்கலாம்னு சைக்கிள் கடைவெச்சேன். அப்புறம் கார்ப்பென்ட்டர். இப்ப பாம்பு பிடிக்கிற தொழில் செய்துகிட்டு வர்றேன்.

ஸ்நேக் சினேகிதன்!

காடு மலை சூழ்ந்த பகுதிங்கிறதால இங்க பாம்பு நடமாட்டம் அதிகம். வீடுகள்ல புகுந்த பாம்பை நான் ஆர்வமாப் போய்ப் பிடிச்சுட்டு வர்றதைப் பார்த்துட்டு இந்தப் பகுதியில எங்க பாம்பு புகுந்தாலும் என்னைக் கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. பிடிச்ச பாம்புகளை சிலர் கொல்லச் சொல்வாங்க. ஆனா நான் கொல்ல மாட்டேன். காடுகள்ல கொண்டுபோய் விட்டுடுவேன். பயம் இல்லாமல் பிடிச்சாலும் நாகப்பாம்பு நாலு முறையும் கட்டுவிரியன் ரெண்டு முறையும் கடிச்சிருக்கு. இந்த ரெண்டு வகை பாம்புமே அதிக விஷமுள்ளது. இங்க பக்கத்துலயே ஆஸ்பத்திரி இருக்கிறதால உடனே சிகிச்சை எடுத்துடுவேன். போகப்போக எனக்கு பாம்புக் கடி பழகிடுச்சு. என் விஷம் அதுங்களுக்கு ஏறிடுச்சா என்னன்னு தெரியலை, என்னைக் கடிச்சதுல ரெண்டு பாம்புக செத்துடுச்சுங்க'' என்று சொல்லிச் சிரிப்பவர், தொடர்கிறார்.  

ஸ்நேக் சினேகிதன்!

'' 'பாம்புகள் பிடிச்சு தரப்படும்’னு விசிட்டிங் கார்டு போட்டு, தெரிஞ்சவங்க எல்லாருக்கும் கொடுத்திருக்கேன். சுற்றுவட்டாரக் கிராமம் தவிர  செங்கல்பட்டு, கல்பாக்கம், மதுராந்தகம்னு நாலாப் பக்கத்துல இருந்தும் அழைப்பு வரும்.  இந்தத் தொழிலுக்கு வந்து 25 வருஷமாச்சு. தினமும் ரெண்டு மூணு பாம்புகளாவது சிக்கிடும். இதுவரைக்கும் ஒரே நாளில் 11 பாம்புகளைப் பிடிச்சதுதான் அதிகபட்சம்.

கருநாகம், நல்ல பாம்பு, கோதுமை நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சாரைனு  இதுவரைக்கும் 30 ஆயிரம் பாம்புகளுக்கு மேல  பிடிச்சிருக்கேன். என் குடும்பத்துல யாரும் பாம்புக்குப் பயப்பட மாட்டாங்க. ஒரே நேரத்துல ரெண்டு மூணு இடங்கள்ல இருந்து அழைப்பு வந்தா என் மகன்கள் நூர் முகமது,  அமீர் கான் ரெண்டு பேரையும் பாம்பு பிடிக்க அனுப்பிவைப்பேன். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மையம்னு ஆராய்ச்சிக்கு பாம்பு தேவைனா என்னைத்தான் தேடுவாங்க. பாம்பு கடிச்சா பயப்படக் கூடாது; முதலுதவி எடுத்துக்கிட்டு உடனே மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குப் போயிடணும்'' என்று டிப்ஸுடன் வழியனுப்புகிறார் முத்துஷா.

- பா.ஜெயவேல்

அடுத்த கட்டுரைக்கு