Published:Updated:

என் ஊர் : ராமசெட்டிபாளையம்

என் ஊரின் வயது 150 ஆண்டுகள்

என் ஊர் : ராமசெட்டிபாளையம்

என் ஊரின் வயது 150 ஆண்டுகள்

Published:Updated:
##~##

சூர்யகாந்தனின் எழுத்துகளில் கொங்கு மண்டலத்தின் மண் வாசனை அதிகம். இவருடைய நாவல்கள் ஆங்கிலம், மலையாளம், இந்தி, தெலுங்கு, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தற்போது கோவை அரசு கல்லூரியில் தமிழ்த் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், தன்னுடைய சொந்த ஊரான ராமசெட்டிபாளையம் குறித்த நினைவுகளை இங்கே பகிர்கிறார்!

 ''ஆழமான கிணற்றில் பரபரவென இறங்கி ஆண்களுக்குச் சமமாகச் சம்மட்டித் தூக்கிப் பாறைகளை உடைத்த பெண்களும், கொளுத்தும் வெயிலில் ஏர் பிடித்து ஊருக்குச் சோறு போட்ட உழவர்களும் வாழ்ந்த ஊர் இது. என் ஊரில் தெற்கே தெரியும் தொடர் மலைகள், கிழக்கே மதுக்கரை மலைக் கரட்டில் தொடங்கி தென் மேற்கு முகப்பில் இருக்கிற அய்யாசாமி மலை என்னும் இடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையுடன் இணைந்துகொள்கின்றன. இந்த மலைகளின் அடிவாரத்தில் உள்ள பூண்டியும் மேலே இருக்கும் சிறுவாணி அணையும் கோவையின் ஆகப் பெரிய அடையாளங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர் : ராமசெட்டிபாளையம்

பாலக்காட்டுக் கணவாய் வழியாகக் கேரளத்தில் இருந்து வரும் ஈரக்காற்று, கோவையின் பஞ்சாலைகளை வாழவைத்தது. இப்போது அந்தக் காற்றில் ஈரம் இல்லை. பஞ்சாலைகள் திருமண மண்டபங்களாகவும் கல்லூரிகளாகவும் மாறிப்போயின. ஊருக்கு மேற்கே ஓடும் வேடச்சிப்பள்ளம், மலைக் காடுகளில் பெய்யும் மழை நீரைச் சுமந்தபடி செட்டிபாளையம் வாய்க்காலில் கலந்து சாரப்பண்ணை வழியாக ஊரின் வடகிழக்கே உள்ள குளத்தை நிரப்பும். இதனால், கறவை இனங்களும், சோளம், கம்பு, சாமை, பாசிப் பயறு, தட்டப்பயறு, கொள்ளு என விவசாயமும் செழித்தது. இப்போது, இந்த மண் கான்கிரீட் அசுரனாக மாறிப்போனது. குடியானவன் கூலிக் காரனாக மாறிவிட்டான்.  

பக்கத்து ஊரான சுண்டக்காமுத்தூரில் இருந்து இங்கு முதலில் குடியேறியவர் ராமசெட்டி. அதனால், இந்த ஊர் ராமசெட்டிபாளையம் ஆனது. இந்தக் கிராமத்தின் வயது சுமார் 150 ஆண்டுகள். ஆரம்பத்தில் இந்த ஊர், ஊருக்குத் தெற்கே ஒன்றரை மைல் தொலைவில் 20, 25 வீடுகளைக்கொண்ட குக்கிராமமாகத் தோன்றியது. பெருந்தலைவர் காமராஜர், ப.ஜீவானந்தம், கே.பாலதண்டாயுதம், பார்வதிகிருஷ்ணன், கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் எல்லாம் இங்குவந்து பேசி இருக்கிறார்கள்!

என் ஊர் : ராமசெட்டிபாளையம்

கற் சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற கொங்கின் ஏழு தலங்களில் ஒன்று பேரூர் பட்டீஸ்வரர் கோயில். இதற்கான கற்கள் எங்கள் கிராமத்தின் தெற்கே உள்ள மலைகளில் இருந்து கொண்டுசெல்லப்பட்டதாம். இந்தக் கிராமத்தின் தெற்கே உள்ள பச்சபாளி என்னும் சிறு குன்றில் சமணர்கள் தங்கி இருந்ததாகவும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் தெரிவிக்கின்றனர். பண்டைய நாளில் பேரூர் நாட்டில் இருந்து சேர நாட்டுக்குச் சென்ற முக்கியப் பாதையான ராஜகேசரிப் பெருவழியும் இங்குதான் கண்டறியப்பட்டுள்ளது.

என் ஊர் : ராமசெட்டிபாளையம்

வீரபாண்டியக் கட்டபொம்மனையும் மதுரை வீரனையும் உலகம் சுற்றும் வாலிபனையும் 40 ஆண்டு காலங்களுக்கு முன்பு எங்களுக்கு அறிமுகப்படுத்திய பேரூர் சௌந்திரம் தியேட்டர், இப்போது இடிக்கப்படுவதைக் கண்ணீருடன் பார்க்கிறோம் நாங்கள்.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்புவரை வேளாண் பணி நிமித்தம் சென்ற எங்கள் கிராமத்து மக்கள், அங்கே கண்டெடுத்த முதுமக்கள் தாழிகளின் சிறு துண்டுகளையும் பண்டைய மக்களின் மண் கலயங்களையும் எடுத்துவந்து அபூர்வமாகப் பார்த்த அந்தக் காலங்கள் போய்விட்டன.இப்போதோ டி.வி.டி-க்களும் இணைய மையங்களும் பெருகி, அடுத்தடுத்து நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் விதைத்தபடி நம்மைக் கடந்து சென்றுகொண்டே இருக்கின்றன. சரி, தவறுகளைத் தாண்டி... 'பிடிக்கிறது’, 'பிடிக்கவில்லை’யை மீறி மாற்றங்களை  ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதுதானே இயற்கையின் நியதி?!''

- செந்தில் ராஜாமணி, படங்கள்: தி.விஜய்