Published:Updated:

ஆயுள் பெருக்கும் இயற்கைக் கட்டடம்!

ஆயுள் பெருக்கும் இயற்கைக் கட்டடம்!

ஆயுள் பெருக்கும் இயற்கைக் கட்டடம்!

ஆயுள் பெருக்கும் இயற்கைக் கட்டடம்!

Published:Updated:
##~##

''மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் தெற்கு பாளையம் என்னும் இடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்படுகிறது 'கல்ப விருட்சா ஆயுர்வேத சிகிச்சை மையம்’. பழங்காலத் தமிழர் களின் கட்டடக் கலையின் அடிப்படையில் முழுக்க, முழுக்க இயற்கை முறையில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தைப்பற்றியும் மூலிகை மற்றும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருட்களால் அமைக்கப்பட்ட இதன் உள் கட்டமைப்பு வசதிகள்பற்றியும் என் விகடனில் பதிவு செய்யுங்களேன்...'' என்று கோவையில் இருந்து நமது வாய்ஸ் ஸ்நாப்பில் பேசி இருந்தார் அந்த மையத்தின் நிறுவனர் ஆறுமுகம்.

 அந்த மையத்துக்குச் சென்றோம். உண்மையில் இயற்கையின் மடியில் குளுகுளு சூழலில் இருந்தது மையம். பார்க்க மருத்துவமனை மாதிரி தெரியவில்லை. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் சுற்று லாப் பயணிகள் தங்கும் அமைதியான ரிசார்ட்ஸ்போல காணப்பட்டது அது. இந்த மருத்துவமனையை நிர்வகிக்கும் மருத்துவர் உமாவிடம் பேசினேன். ''இந்திய மருத்துவ முறைகளில் பழமையானது ஆயுர்வேதா. இதன் பிறப்பிடம் கேரளா. இயற்கைக்கு மிகவும் நெருக்கமான மருத்துவம் இது. அதனால், எங்கள் மையத்தையும் துளியும் செயற்கைப் பொருட்கள் இல்லாமல் இயற்கையான முறையில் கட்ட நினைத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயுள் பெருக்கும் இயற்கைக் கட்டடம்!

பழங்காலத்தில் தமிழர்கள் கட்டிய அணைகள், கோட்டைகள் எல்லாம் இந்தத் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டவைதான். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் 15 ஏக்கர் வளாகத்துக்குள் மூன்று ஏக்கரில் இந்தக் கட்டடத்தைக் கட்டி இருக்கிறோம். இங்கு இருந்தே தோண்டி எடுக்கப்பட்ட மண், களிமண், சுண்ணாம்பு மண், மணல், கடுக்காய், பனை வெல்லம், வெட்டி வேர், கதிர் வீச்சை தடுக்கும் சில மூலிகைகள் கலந்து செய்யப்பட்ட செங்கல்தான் இந்தக் கட்டடக் கலைக்கு அடிப்படை. பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன இயந்திரத்தைக்கொண்டு இந்தச் செங்கல்லை இங்கேயே தயாரித்து, கட்டடம் கட்டப்பட்டது.

இதனால் என்ன பலன் என்று கேட்கலாம். இது வெறும் பழம் பெருமை மட்டும் அல்ல. எவ்வளவு குளிர் அடித்தாலும் சரி... வெயில் அடித்தாலும் சரி... கட்டடத்தின் உள்ளே மிதமான ஏ.சி. போட்டதுபோல குளுமை நிலவும். இந்தப் பகுதியில் வாய்ப்பு இல்லை என்றாலும்கூட எந்தவித கதிர்வீச்சும் இந்தக் கட்டடத்தை ஊடுருவ முடியாது. புளியம், அதி மதுரம், வேம்பு, ஆல், அரசு, அத்தி, நுணா என சுமார் ஐந்தாயிரம் மரங்கள் மற்றும் அஷ்வகந்தி, திருநீற்றுப் பச்சிலை, சர்பகந்தி, சிற்று அரத்தை, குறுந்தொட்டி உட்பட ஆயிரக்கணக்கான மூலிகைச் செடிகளாலும் இந்த மையம் சூழப்பட்டு உள்ளதால், இயற்கையாகவே இங்கு தங்குபவருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்; மேலும் வெளியே இருந்து நோய் கிருமித் தொற்று நெருங்க முடியாது.

பழங்கால கோட்டை, மாளிகை, அரண்மனைகளில் சிறு அறைகளில் கூட காற்றோட்டம் இருக்கும். அதன் கட்டட வடிவமைப்பு அப்படி. எங்கள் கட்டடத்தின் உட்பகுதியை அதே வடிவமைப்பில் அமைத்து இருப்பதால், மிதமான வேகத்தில் மின் விசிறியைச் சுழல விட்டதுபோல இதமான, இயற்கையான காற்றோட்டம் நிலவும். இங்கு இருக்கும் ஜன்னல், கதவு, கட்டில், மேஜை என அத்தனையும் நாம் வெறுத்து ஒதுக்கி, விறகு எரிக்க மட்டுமே பயன்படுத்தும் சீமை கருவேலத்தால் செய்யப்பட்டது.

சீமை கருவேலத்தின் அருமை பலருக்குத் தெரிவது இல்லை. இது தேக்குக்கு இணையான உறுதித் தன்மை கொண்டது. கறையான் இந்த மரக் கட்டையை நெருங்கவே நெருங்காது. இந்த மரத்தினால் செய்யப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் வேப்பம் எண்ணெய் பாலிஷ் அடித்துள்ளோம். அதனால் இது ஒரு கிருமி நாசினியும் கூட. வாழை மட்டை துணி படுக்கை விரிப்பு, வெட்டிவேர் ஜன்னல் ஸ்க்ரீன், வெட்டி வேர் குஷன் என உள்ளே இருக்கும் அனைத்து வசதிகளும் இயற்கை முறையில் செய்யப்பட்டுள்ளது. வெள்ளயங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் ஈஷா யோகா மையமும் எங்கள் கட்டடமும் ஒரே காலகட்டத்தில் ஒரே தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது. இனிவரும் காலங்களில் இந்தக் கட்டடக் கலை முறையையே அனைவரும் பின்பற்றினால், மின்சாரம் சேமிக்க முடியும். கட்டடத்தின் ஆயுள் மட்டும் அல்ல... அதில் வசிப்போரில் ஆயுளும் அதிகரிக்கும்...'' என்கிறார் இனிமையாக!

- எஸ்.எம்.காவியபாரதி
படங்கள்: வீ.ராஜேஷ்