Published:Updated:

என் ஊர் : விளாம்பட்டி

விளாம்பட்டி முதல் மாஃபா வரை...

என் ஊர் : விளாம்பட்டி

விளாம்பட்டி முதல் மாஃபா வரை...

Published:Updated:
##~##

'மாஃபா’ மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனரும், விருதுநகர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ -வுமான 'மாஃபா’ பாண்டியராஜன் தன்னுடைய சொந்த ஊரான விளாம்பட்டி பற்றி இங்கே பேசுகிறார்.

 ''சிவகாசிக்குப் பக்கத்துல இருக்கிற விளாம்பட்டிதான் என் சொந்த கிராமம். ஊரை ஒட்டியுள்ள பூலா ஊரணியில்தான் முதல்ல என் குடும்பம் இருந்துச்சு. நான் பிறந்து மூணாவது மாசத்துல அப்பா இறந்துட்டார். என் தாத்தாதான் என் அம்மாவையும் என்னையும் விளாம்பட்டிக்குக் கூட்டிட்டு வந்தார். தாத்தாவும் பாட்டியும்தான் என்னை வளர்த்தாங்க. அதனால் அவங்களை 'அப்பா’, 'அம்மா’னு கூப்பிடுவேன். விவரம் தெரியாத வயசுல அம்மாவை 'அக்கா’ன்னு கூப்பிடுவேன்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர் : விளாம்பட்டி

விளாம்பட்டியில் சின்னச் சின்ன தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இருந்தாலும் கல்வி விஷயத்தில் சுற்று வட்டாரத்துலயே பெரிய முன்னேற்றத்தோட இருந்துச்சு. 90 வருஷத்துக்கு முன்னாடியே மூணு அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்க இருந்துச்சு. விளாம்பட்டியின் மொத்த ஜனத்தொகையே 1,000 பேர்தான். ஆனா, அந்தப் பள்ளிக்கூடங்கள்ல படிச்ச மாணவர்களோட எண்ணிக்கை

3,000-த்துக்கும் அதிகம். சுற்றியுள்ள பல கிராமங் களைச் சேர்ந்தவங்க எங்க ஊருக்குத்தான் வந்து படிச்சாங்க. ஜார்ஜ் ஆரம்பப்பள்ளியில் இருந்த சூரியகாந்தி டீச்சரை இன்னிக்கு வரைக்கும் மறக்க முடியாது.  ஏதாவது தப்புப் பண்ணினா அடி பின்னி எடுத்துடுவார். நாங்கள் அழுறதைப் பார்த்ததும், 'ஆண்டவனே தெரியாமல் அடித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு’னு பிரேயர் பண்ணுவார். அதைப் பார்த்ததும், 'டீச்சர்கிட்ட நல்ல பேர் வாங்கணும்’னு வைராக்கியம் வந்துடுச்சு. அதுக்குப் பின்னாடி படிப்புல தீவிரமா கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன்.

என் ஊர் : விளாம்பட்டி

விளாம்பட்டியில் ஒரு பொதுக் கிணறு உண்டு. அங்கே தண்ணீர் இறைச்சு தொட்டியில் நிரப்பிக் குளிக்கணும். சின்ன வயசுல நண்பர்களோடு சேர்ந்து குளிச்சு ஆட்டம் போடுவோம். என்னோடு படிச்ச பாலதவமணிங்கிற பொண்ணுக்கும் எனக்கும்தான் போட்டி. பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற ரெண்டு பேரும் கடுமையாப் போராடுவோம். பின்னாடி அந்தப் பொண்ணு எப்படியும் இன்ஜினீயராவோ, டாக்டராவோ ஆகிருவாங் கன்னு நினைச்சேன். ஆனா, மேல படிக்க வசதிஇல்லாமல் டீச்சர் ஆகிட்டாங்க.

எங்க கிராமத்துல நல்லாப் படிக்கிற நிறையப் பேர் படிப்பைப் பாதியில நிறுத்திட்டு, பலசரக் குக் கடை, மேட்ச் ஃபேக்டரியில வேலைக்குப் போயிடுறாங்க.

எங்கள் ஊரில் பாண்டி முனியசாமி கோயில் இருக்கு. அங்கதான் எனக்கு பாண்டியராஜன்னு பேர்வெச்சாங்க. அங்கே பூஜை செய்ற குருசாமி என்னைப் பார்த்து, 'பையன் ரொம்பப் பெரிய ஆளாக வருவான்’னு அடிக்கடி சொல்வார். அதைக் கேட்டுக் கேட்டு மனசுல நாமும் பெரிய ஆளா வரணும்னு நினைச்சுக்குவேன். படிச்சு முடிச்சுட்டு பிசினஸ் செய்யலாம்னு நினைச்சப்ப, எங்கள் ஊர்ல நல்ல படிப்பறிவு இருந்தும் வீணாகிற மனித வளம்தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. திறமையானவர்களை கண்டுபிடிச்சு பயிற்சி கொடுத்தா, அவங்களால வாழ்க்கையில நல்ல நிலைமைக்கு வர முடியும்னு நினைச்சேன். அப்போதுதான் மனித வள மேம்பாட்டு நிறுவனம் தொடங்குற ஐடியா வந்துச்சு.  அப்படித்தான் 'மாஃபா’ உருவாச்சு (மாஃபா என்றால் பிரெஞ்சு மொழியில் 'நம்புங்கள்’ என்று அர்த்தம்) இப்போது என்னுடைய சொந்த ஊரான விளாம்பட்டி, பூலாஊரணி கிராமங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கொடுக்குறேன். ஊர்ல திருமண மண்டபங்கள், கோயில்களைக் கட்டிக்கொடுத்து என்னால முடிஞ்ச உதவிகளை செய்றேன். என் ஊருக்கு நான் கொடுக்குற நன்றி இது!''

-எம்.கார்த்தி