Published:Updated:

என் ஊர் - ஆவம்பூண்டி

எங்களை முதலில் போட்டோ எடுத்தது ஃபிரான்ஸ்காரங்க !ஜெ.முருகன்,படங்கள் : ஆ.நந்தகுமார்

என் ஊர் - ஆவம்பூண்டி

எங்களை முதலில் போட்டோ எடுத்தது ஃபிரான்ஸ்காரங்க !ஜெ.முருகன்,படங்கள் : ஆ.நந்தகுமார்

Published:Updated:

ஜோதி நரசிம்மன்

##~##

அடியாளாகத் தன் இளமைக் கால வாழ்க்கையைத் தொடங்கி அரசியல் உணர்வாளராகவும் ஊடகவியலாளராகவும் மாறியவர் ஜோதி நரசிம்மன். விழுப்புரம் மாவட்டத்தில் தமிழின ஆதரவாளர் களின் போராட்டங்களிலும் மனித உரிமைகளுக்கான போராட்டங்களிலும் ஜோதி நரசிம்மனின் உரத்த குரலைக் கேட்க முடியும். அவர் தன் ஊரான ஆலம்பூண்டி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில் இருந்து 10 மைல்கல் தொலைவில் திருவண்ணாமலை நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆலம்பூண்டி. 1960-70களில் இந்தப் பகுதியில் பெருவியாதி என அப்போது அழைக்கப்பட்ட தொழுநோய் அதிக அளவில் மக்களைப் பாதித்திருந்தது. அப்போது ஃபிரான்சில் இருந்து வந்த சார்லஸ் டொபோகோ என்பவர் தமிழ்நாட்டில் உள்ள தொண்டு உள்ளம் படைத்தவர்களை இணைத்து 'ஏசுவின் இளைய சகோதரர்கள்’ என்ற சங்கத்தை நிறுவினார். அதில் ஒரு பகுதியாகப் பழுவந்தாங்கல், அடுக்கம் பகுதியில் 'காந்தி-கஸ்தூரிபாய் குஷ்டரோக நிவாரண நிலையம்’ என்ற நிலையத்தைத் தொடங்கி தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்துவந்தனர் 'ஏசுவின் இளைய சகோதரர்கள்.’

என் ஊர் - ஆவம்பூண்டி

அப்போது அந்தச் சேவையில் ஈடுபட்டு இருந்த இரு பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் பெயர்களைக்கூட அருள், சாந்தி என்று தமிழில் மாற்றிக்கொண்டனர். பெருமாள் கோயில் தெருவில் இருந்த எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் அந்த ஃபிரான்ஸ் நாட்டினர் குடியிருந்தனர். அப்போது ஏராளமான வெளிநாட்டினர் இந்தக் கிராமத்துக்கு வருவார்கள். இந்தக் கிராமத்தில் உள்ளவர்களை முதன்முதலில் புகைப்படம் எடுத்தது ஃபிரான்ஸ்காரர்களாகத்தான் இருக்கும். இப்போதும் அவர்கள் இருந்த வீட்டுக்கு 'வெள்ளைக்காரர்கள் வீடு’ என்றே பெயர். இன்றளவும் சார்லஸ் டொபோகோவின் படத்துடன் அந்த வீட்டில் அதே சங்கம் இயங்கி வருகிறது. விருத்தாசலத்தைச் சேர்ந்த விசுவாசம் என்பவர்தான் நிர்வகித்துவருகிறார். ஆனால், தொழுநோய் என்பது முன்புபோல அந்தளவுக்கு அச்சுறுத்தும் நோயாக இல்லாததாலும் அதுகுறித்த விழிப்பு உணர்வு அதிகரித்துவிட்டதாலும் மாற்றுத் திறனாளிகளைப் பராமரிக்கும் பணியைச் செய்துவருகிறது அந்தச் சங்கம்.

என் ஊர் - ஆவம்பூண்டி

எங்கள் குடியிருப்புப் பகுதியின் கடைசியில் நிலத்தை ஒட்டியவாறு கரும்பில் இருந்து வெல்லம் எடுக்கும் ஒரு சிறு தொழிற்சாலை இருந்தது. பள்ளியின் இடைவேளை நேரத்திலும் மாலை பள்ளி முடிந்ததும் நானும் என்னுடைய நண்பர்களும் அதைப் பார்ப்பதற்கும் அந்த வெல்லத்தை வாங்கிச் சாப்பிடுவதற்கும் அங்கேதான் ஆஜராகிவிடுவோம். இப்போது அந்த இடம் மாடுகளை அடைத்துவைக்கும் மாட்டுத் தொழுவமாக மாறியிருக்கிறது. எங்கள் ஊரின் வடக்கே அமைந்திருக்கும் முருகன் கோயிலில் வருடம்தோறும் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழா புகழ்பெற்றது. எங்கள் ஊர் மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுப்புறக் கிராமத்தில் இருந்தும் பெரும்பகுதி மக்கள் கலந்துகொண்டு உடலில் அலகு குத்திக்கொண்டும் நாக்கில் வேல் குத்திக்கொண்டும், முதுகில் கொக்கி போட்டு தேர்களை இழுத்துக்கொண்டும் முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். என் சிறு வயதில் நான்கூட உடலில் ஊசி குத்திக்கொண்டு திருவிழாவில் கலந்துகொண்டு இருக்கிறேன். அதேபோல, ஆலகால ஈஸ்வரன், அகிலாண்டேஸ்வரி கோயில் என்று கோயில்களால் சூழ்ந்திருக்கிறது என் ஊர். ஜெட் வேகத்தில் போய்க் கொண்டு இருக்கும் காலத்துக்கு ஏற்ப அனைத்தும் மாறினாலும் இந்தக் கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தும் முறைகள் மட்டும் இன்னும் மாறவில்லை. மக்களும் கடவுள் விஷயத்தில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை போலும்!

என் ஊர் - ஆவம்பூண்டி
என் ஊர் - ஆவம்பூண்டி

எல்லா ஊர்களிலும் இருப்பதுபோல குறைபட்டுக்கொள்வதற்குச் சில விஷயங்கள் இருந்தாலும் என் ஊர் மாணவர்களுக்குப் பயன்படும் விதமாக பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளது நிறைவான விஷயங்கள்!''